தமிழோவியம்
ஹாலிவுட் படங்கள் : அந்நியர்கள் (War of the Worlds)
- பாஸ்டன் பாலாஜி

சாலையில் எரியும் மெர்க்குரி விளக்கைப் பார்த்து பயந்து இருக்கிறீர்களா? நகரத்தின் ஒளி வெள்ளத்தை மீறி வானத்தில் தெரியும் சனி, வெள்ளி போன்ற நட்சத்திரங்களைப் பார்த்து பயந்ததுண்டா? War of the Worlds பார்த்தபிறகு பயம் வரலாம். எனக்கு வந்தது.

தமிழில் பிரும்மாண்டத்துக்கு பெயர் போனவர் சங்கர் என்றால் பிரும்மாண்டத்திக்கு பெயர் போன் ஹாலிவுட்டிலேயே ராட்சத டைனோசார் பட்ஜெட் போட்டு பிலிம் காட்டுபவர் ஸ்பீல்பெர்க். 'மைனாரிட்டி ரிப்போர்ட்'டுக்குப் பிறகு ஒரு திருடனின் கதை (Catch Me If You Can), விமானப் பயணியின் கதை (The Terminal) என்று நகைச்சுவையோடு சிந்திக்க வைத்த பிறகு, மீண்டும் அறிவியல் புனைகதைக்கு டாம் க்ரூய்ஸ¤டன் கைகோர்த்திருக்கிறார்.

முன்னாள் கணவன் டாம் க்ரூயிஸிடம், மகனையும் மகளையும் வாரயிறுதிக்கு விட்டுச் செல்கிறார், விவாகரத்தான மனைவி. எண்பதுகளுக்கு முந்தைய இந்திய கணவர்களுக்கு மருந்துக்கும் பொறுப்பிருக்காது. குழந்தைகளின் விருப்பு, சமையல் கலை போன்றவற்றில் நாட்டமும் இருக்காது. டாம் க்ரூய்ஸ¤ம் அவ்வாறே.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இடி மின்னல் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தன் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக ஓடும் தந்தையின் கதைதான் 'வார் ஆ·ப் தி வோர்ல்ட்ஸ்'.

ஒவ்வொரு காட்சியிலும் ஏமாற்றாத பிரும்மாண்டம். அரள வைக்கும் பிரமிப்புகள். ஈராக் போர், 9/11 வர்த்தக மையம், போன்ற உண்மை சம்பவங்களின் கோரம் ஏற்படுத்தும் அதிர்ச்சியை மிரட்சியுடன் சினிமாஸ்கோப்படுத்தி இருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

வேற்றுகிரகவாசிகள் எப்படி பாதாள லோகத்துக்குள் சென்றார்கள் என்பதையும் போகிற போக்கில் காட்டுகிறார்கள். மின்-காந்த ஈர்ப்பு சக்திகள், இடி மின்னல் மேக மூட்டத்திற்கான காரணம் ஆகியவற்றையும் சுருக்கமாக ஊடகச் செய்திகளின் மூலம் விளக்குகிறார்கள். சைன்ஸ் ·பிக்ஷனாக இப்படம் இருந்தாலும், இவ்வித அறிவியல் புனைவுகளை விட தந்தையின் உணர்வுகளைப் படம் பிடிப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

வீட்டிற்கு வெளியே போயிங் 747 நொறுங்கிக் கிடக்கும் காட்சி மட்டுமே 'கலை' இயக்குநரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. ஓய்வு கொடுக்கப்பட்ட நிஜ விமானத்தை வாங்கி, உதிரிகளாகக் கழற்றி, லாஸ் ஏஞ்சலீஸ் அருகே பரப்பி, அவற்றின் நடுவே மிச்ச மீதி இடிபாடு வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். கொல்லைப்புறத்தில் நிஜ விமானம் எப்படி விபத்துக்குண்டாகியிருக்குமோ, அப்படியே அச்சு அசலாக அதிர வைக்கிறது.

'மைனாரிட்டி ரிபோர்ட்'டில் குட்டியாக ஓடி வந்து, மனிதரின் கண்களை சோதித்துச் சென்ற எட்டுக்கால் பூச்சிகள், இங்கு மூன்றே கால்களுடன் டி.ரெக்ஸ் டைனோசார் போல் பிருமாண்ட வாகனமாக மாறியிருக்கிறது. முதன் முதலாக பாதாளத்திலிருந்து மூன்று கால் ராட்சதன் வெளிவரும் காட்சி உண்டாக்கும் திகில், கடைசிக் காட்சி வரை தொடர்கிறது.

க்ளைமாக்ஸில் ரகுவரன் திருந்தி போலீஸிடம் சரணடைவது போலவே அனைத்து அண்டை அயல் வாகனங்களும் ஏலியன்களும் வீழ்ந்து, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புவது 'சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா' என்றெண்ண வைக்கிறது. ஒரிஜினல் எச். ஜி. வெல்ஸ் (H.G. Wells) 1898-இல் எழுதப்பட்ட கதையும் இவ்வாறே முடிந்திருக்கிறது. எல்லோரின் கார்களும் ஓடாமல் நிற்கும்போது டாம் க்ரூய்ஸ் மட்டும் பாய்ந்து பாய்ந்து வண்டியோட்டுவது, க்வார்ஸ் கடிகாரம் உட்பட அனைத்து மின்னணுச் சாதனங்களும் செயலிழக்கும்போது, ஏதோவொரு பிரகிருதி மட்டும் கேம்கார்டரில் வேற்று கிரக வருகையைப் படம் பிடிப்பது என்று சினிமாத்தனங்கள் படத்தில் நிறையத் தென்படலாம்.

எனினும், அந்நியர்களின் அகலவீச்சை ரத்தம் ஒரே நிறமாக, கண்ணுக்கெட்டிய புல்வெளி, காடு வரை சிவப்பாக்குவது நிலைமையின் விபரீதத்தை உணர்த்துகிறது. மகளுக்காக எவ்வித காரியத்தையும் செய்யும் தந்தையாக டாம் க்ரூய்ஸ் கலக்கியிருக்கிறார். மனைவி இல்லாத வீட்டில் பழசாகிப் போன பால், உணவு மேஜையின் மேல் மோட்டார் என்ஜின், ·ப்ரிட்ஜுக்குள் உணவு எதுவும் இல்லாமல் வித விதமான கெட்சப் மட்டும் நிறைந்திருத்தல் போன்றவற்றை அலட்சியமாக காட்டுவதிலாகட்டும்; ஆரம்பத்தில் பளபளாவென்று இருக்கும் தோல் ஜாக்கெட், மெதுவாக அழுக்காகி நிறம் மாறுவதில் ஆரம்பித்து சின்ன சின்ன அரங்கப் பொருட்களிலும் அக்கறை தெரிகிறது.

ஈ.டி.யில் கூட அந்நிய கிரகவாசிகளை சாதாரண பாவனைகளுடன் காட்டாதவர், இந்த மாதிரி அச்சுறுத்தும் செய்கைகளைச் செய்பவர்களை திரையில் உலவ விடுவது முதலையையும் பாம்பையும் கரப்பான்பூச்சியையும் பார்த்து மிதித்த அருவருப்பைக் கொடுக்கிறது. ஏதாவதொரு படத்திலாவது விக்ரம் போன்ற புன்னகையுடனும் சூப்பர் ஸ்டார் போன்ற ஸ்டைலுடனும் ஏலியன்கள் உலா வந்து வில்லத்தனம் செய்யவேண்டும்.

ஜார்ஜ் புஷ் ஆதரவாளர்களைக் கூட படத்தில் கிண்டலடிக்கிறார். கையில் ஓட்டைத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வீட்டுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு, அனைத்து அன்னியர்களையும் கொன்றுவிடலாம் என்று டயலாக் விடும் டிம் ராபின்ஸன், சில குடியரசு கட்சி ஆதரவாளர்களை நினைவு கூற வைக்கிறார். டாம் க்ரூயிஸின் மகளாக வரும் டகோடா ·பானிங், கண்சிமிட்டாமல் கத்தி கத்தியே நமது வயிற்றிலும் புளியோதரையைப் பிசைகிறார்.

மூன்று பேருக்கு நிகழ்வதை முக்கியப்படுத்துவதால் படத்துடன் எளிதில் ஒன்றமுடிகிறது. பயப்படவும் வைக்கிறது. வெறுமனே சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் 'இண்டிபெண்டன்ஸ் டே' போல் மனதில் பதியாமல் போகும். அதீத அழிவுகளும் தோல்வியும் காண்பித்தால் 'ஏ.ஐ.' போல் வெகுஜனமக்களிடம் செல்லாமல் போய்விடும். அப்பா செண்டிமெண்ட்டை மையப்படுத்தி சாதாரண குடிமகனின் இயலாமையைக் கொண்டு அந்நியர் வருகையைக் காட்சிபடுத்தி அசத்தியிருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors