தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : சிறப்புப் பார்வை
- எஸ்.கே

எல்லா உயிரினங்களும் தன்னை முன்னிறுத்தி பலர் முன் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்றே எப்போதும் விரும்புகின்றன. அதற்காகக் கடுமையாகப் போராடியவண்ணம் இருக்கின்றன. வலிமை வாய்ந்த சிங்கம் புலி போன்ற விலங்குகளின் உணவாவதற்கே பிறப்பெடுத்த (being part of the natural food chain) சைவ உணவு உண்ணும் மான், வரிக்குதிரை போன்றவைகள்கூட தமக்குள் யார் பெரியவன் என்ற போராட்டத்தை நிகழ்த்தியவண்ணம் இருக்கின்றன. மனித இனம் இத்தகைய உந்துதலை இன்னும் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தி வருகிறது. தான் மதிக்கபட வேண்டும், "நான்" என்கிற அகப்பாடு என்னேரமும் திருப்திப்படுத்தப்பட வேண்டும் என்கிற மனப்பான்மையுடந்தான் மனிதன் ஆசைப்படுகிறான். அந்த அவாவை வெற்றியுடன் நிறைவேற்றும் வண்ணம் எல்லோருடைய செயல்பாடும் அமைவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின்முன் பெருமையுடனும், சிறப்புடனும், எல்லோரும் கொண்டாடும் வண்ணம் வாழத்துடிக்கும் மனிதர்களில் சிலரே அதனை அடையக்கூடிய வழிமுறைகளை அறிந்து செயல்படுகின்றனர். அவர்களை நாம் எல்லோரும் போற்றுகிறோம்.

பிறர் மதிக்க வாழவேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் சச்சின் தெண்டுல்கராகவோ, ஷாருக்கானாகவோ, அம்பானியாகவோ, அமிதாப்பச்சனாகவோ, மேரியா ஷரபோவாவாகவோ, ஐஸ்வர்யா ராயாகவோ ஆகமுடியுமா? அல்லது அத்தகைய முதன்மைநிலையை எட்டினால்தான் பெருமை அடைந்ததாக ஆகுமா? அது நிச்சயம் இயலாது. ஏனெனில் எந்தத் துறையிலும் உச்சிமுனையில் இடம் மிகக் குறைவாக இருக்கும். நிறையபேர் அங்கு நிற்கமுடியாது. தொடர்ந்து அதே நிலையை தக்கவைத்துக் கொண்டு இருப்பதும் முடியாது. பின் நான் பெருமை பெறுவது எங்ஙனம் என்று கேட்கலாம். ஏன் நாம் இருக்கும் இடத்திலேயே சிறப்பு பெற முயலக்கூடாது. In search of excellence என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் துப்புரவுத் தொழிலாளியாகவோ, ஒரு கடையில் விற்பனை உதவியாளராகவோ இருந்தாலும் அந்த நிலையிலேயே பெருமை வாய்ந்தவர்களாக விளங்க முடியும். ஒரு உணவகத்துக்குச் சென்றால் நம்மை நன்கு கவனித்து சிறப்பாக நமக்கு சேவை செய்யும் பணியாளைரை மதிப்புடன் நோக்குகிறோமா இல்லையா? அதேபோல் திறமையான மற்றும் நல்ல அணுகுமுறை கொண்ட மனிதர்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அடையாளம் காணப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். எல்லோரிடமும் ஒரு சிறப்பம்சம் இயற்கையிலேயே இருக்கும். அதனை அடையாளம் கண்டு அந்தத்துறையில் தன் திறனை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் பெருமை பெறமுடியும்.
 
சிலர் நம்மைக் கடந்து சென்றால் "யார் அது" என்று நம்மையறியாமல் வினவுகிறோம். அதற்கு அவர்கள் தோற்றம் காரணமாக இருக்கலாம். அது இயற்கை அளிப்பது அல்லவா? இல்லை. அது முழுமையான காரணம் இல்லை. இயற்கையில் கண், காது, மூக்கு, தோலின் நிறம் என்று சிறப்பம்சங்கள் கொண்டிருந்தாலும், அதனை சரியான முறையில் பிறர்கண்முன் காண்பிக்கும் வகையில் செயல்படாத பலர் "டல்"லடித்துக் கொண்டு, பிறர் இன்னொருமுறை நோக்கத் தோன்றாத பலரை நாம் கண்டிருக்கிறோம். அதே நேரத்தில் மிகச் சாதாரண தோற்றத்தையுடைய பலர் எல்லோருடைய பார்வையும் ஒருசேர தன்மேல் பாயும்வண்ணம் சிறப்புப் பெருகிறார்கள் (cynosure of all eyes). இதன் காரணம் அவர்களின் ஆளுமை, முனைப்புடன் தன்னை முன்னிறுத்தும் முறை, அவர்கள் வளர்த்துக் கொண்ட திறமை, தன் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து உள்நோக்கி, பிறர்கள்முன் தான் எப்படித் தோன்றவேண்டும் என்கிற கணக்கில் பிசகிலாமல் வெளிக்காண்பிக்கும் திறன் ஆகியவைதான். இதெல்லாம் தானகத் தோன்றுவதல்ல. நாம் முழு கவனத்துடன் ஈடுபடவேண்டிய செயல்பாடுதான் இத்தகைய சிறப்பை அளிக்கிறது.

உடல் தோற்றத்தைத் தவிர, நம் தோரணை, நடத்தை, நம் உடை, அதை நாம் அணிந்திருக்கும் முறை, நம் பேச்சு இதுபோன்ற செயல்பாடுகளினாலும் நாம் அடையாளம் காணப்படுகிறோம். இது இயற்கையல்லவே. ஒவ்வொரு சிறிய செயல்நிலையும் நன்கு திட்டமிடப்பட்டு, பிறர்கண்முன் இது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை ஆராய்ந்து, தெரிவு செய்து செயலாற்றினால், நாம் எதிர்பார்க்கும் எதிர்வினையை அடுத்தவர் மனத்தில் தோற்றுவிக்கலாம்.

நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு பொரி அடங்கியிருக்கும். அதனை அடையாளம் கண்டு, ஊதிப் பெரி¾¡க்கி வெளிக்கொணர்ந்து பிறர் கண்முன் வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது நம் கையில்தான் இருக்கிறது. எந்தத் திறமையும் அதனைப் பரிமளிக்க வைக்கும் பாங்கினால்தான் பெருமை பெருகிறது. அதனை எங்கேயோ பதுக்கி வைத்திருந்தால் யாருக்கும் தென்படாது. நம்மிடம் என்னென்ன மேன்மைகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை ஊன்றித் தோண்டியெடுத்து உற்றுநோக்கி, முத்துக் குளித்து அறிந்துகொள்ள யாருக்கும் தேவையுமில்லை, உந்துதலுமில்லை, பொறுமையுமில்லை. நான் முன்னமையே கூறியுள்ளபடி What is invisible, doesn't exist. நம் கைப்பொருளை வெளிச்சம்போட்டுக் காட்டி செலாவணியாக்குவது நம் பொறுப்பல்லவா.

ஏதோ படித்தோம், பட்டம் வாங்கினோம், வேலையில் சேர்ந்தோம் என்று விளக்கெண்ணை வாழ்க்கை வாழாமல், உபரியாக ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்திலோ, நண்பர் குழுமத்திலோ, குடியிருப்பிலோ ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், நீங்கள் அதில் ஏதேனும் ஒரு வகையில் முயன்று பங்கெடுக்க வேண்டும். கூட்டத்தில் சொற்பொழிவாற்றலாம். பாட்டுப் பாடலாம். மேலாண்மை செய்யலாம். நிச்சயம் "அது யார்" என்று கேட்கப் படுவீர்கள். என் நண்பர் ஒருவருக்கு mouth organ வாசிக்கத் தெரியும். எங்கு சென்றாலும் அதை வாசித்துக் காண்பித்து எல்லோருடைய கைத்தட்டலையும் பெற்றுவிடுவார். இது ஒரு சிறிய விஷயம்தான். ஆனால் பிறர் முன் நாம் சிறப்பாக அறியப்படும்போது அது எத்தகைய மனநிறைவைக் கொடுக்கிறது!

குறைந்த சிலவில் சிறந்த பொருட்களை வாங்கி பாவிக்கும் திறமை சிலரிடம் காணலாம். நாம் நிறை காசு சிலவு செய்து வாங்கியுள்ள பொருட்களை விட அந்த நபர் சல்லிசாகப் பெற்றுள்ளவை சிறப்பாக அமைவதைப் பார்க்கிறோம். இதுபோல் ஒரு தனித்திறமை மற்றும் தனித்தன்மையைக் காண்பிக்கும் உத்தியைக் கடைப்பிடித்தால் நாம் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் ஒளிக்கற்றைகள் நம்மீது பாய்ந்து தனியாக "சிறப்புப் பார்வை" பெருவோம் என்பது திண்ணம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors