தமிழோவியம்
கவிதை : கணங்களில் சில
- சத்தி சக்திதாசன்

கணங்களில் சில
கனமானவைதான்
காரணம் கேட்காதே
கண்மணியே
கண்களின் ஓரத்தில் துளிர்க்கும்
கண்ணீர் கனத்தினால் விளைந்த
கலக்கத்தின் விளைச்சல்தான்

சொல்ல முடியாத வார்த்தைகளினால்
சொல்லவொண்ணாத துயரங்களை
சொல்லில் வடிக்க முயலும்
சோகத்தின் மறு உருவின் ஆதங்கம்
சொந்தங்கள் கீறிய புண்களால்
சோதனையான வடுக்களை
சோதித்துப் பார்த்திடும் வேளைதான்
சொல்ல முடியாக் கணங்களில் சில ...

மூடிடும் விழிகளில் இல்லை உறக்கம்
மூடியும் அணையா காலதீபம்
முந்தைய நிம்மதி இன்றைய உலகில்
முழுதுமாய் இழந்த
முதுமையின் நிலை
முழுமதி நோக்கினால் ஏனோ
முகில்கள் மறைக்குது
முகிழ்த்த நினைவுகளின் கணங்களில் சில
முற்றாய்த் தருவது
முழுவதும் துன்பமே !

காத்திருக்கிறேன் கரையினிலே
காற்றின் திசை மாறிடும் போது
கனத்த இந்தக்
கணங்கள் சில
கணநேரமாவது இலாசாகிடும் என்றே

 

 

      

Copyright © 2005 Tamiloviam.com - Authors