தமிழோவியம்
க. கண்டுக்கொண்டேன் : சிங்கப்பூர் கடற்கரைச்சாலையில் கவிமாலை
- ரமா சங்கரன்

எந்த அமைப்பும் கிடையாது. மாதக் கூட்டங்களில் சில சமயம் மைக்குகள் கூட கிடையாது.  மாதந்தோறும் தமிழ் உணர்வுகளுக்கு மேடை அமைக்கப்படும். தவறாமல் கவிதைப் போட்டிகள் உண்டு. கவிஞர்களுக்கு  மேசை, நாற்காலி , மின்விசிறி தேவையில்லை.  விரைவுரயிலில் பயணம் செய்யும்போது இருக்கை கிடைத்தால் போதும். அமர்ந்து கொண்டு கற்பனைக் குதிரைப் பறக்க  மக்கள் நெரிசலிலும்  சத்தத்திலும் கூட  கவிதைகள் பிறக்கும்.  போட்டிக்கான  தலைப்புகள்  மாதந்தோறும் புதிதுபுதிதாகக் கொடுக்கப்படும். கவிஞர்கள் கவிதைகளை எழுதிக் கொண்டு எப்படியும் 700மணிக்கு கூட்டத்திற்கு வந்துவிடுவார்கள். இப்படி சிங்கப்பூரில் பீச் ரோட்டில் உள்ள கம்போங் கிளாம் சமூக மன்றத்தில்  ஐந்து ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வருகிறது கடற்கரைச்சாலை கவிமாலை நிகழ்ச்சி.

நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பின்னே  கவிஞர்  பிச்சினிக்காடு இளங்கோ. நிகழ்ச்சிக்கு வியர்வைத் தாவரமாக உழைக்கும்  கவிஞர்.  சிங்கைச் சுடர் மாதாந்திர இதழின் ஆசிரியர்.  இவருக்குத் துணையாக நிற்பவர் கவிஞர் அன்பழகன்.  சிங்கப்பூரின் மூத்த கவிஞர்; தமிழ் உணர்வுகளில் ஆக இளையர் கவிஞர் இக்பால். இவரே கவிமாலையின் குரு.  ஆசியான் பரிசை சிங்கப்பூருக்குத் தமிழுக்காகப்  பெற்றுத் தந்தவர்.  உள்ளூரின் பெருமைமிகு கோல்டன் பாயிண்ட் இலக்கிய விருது, தமிழவேள் சாரங்கபாணி விருது, புத்தகப் பரிசுகளுக்கு சொந்தக்காரர். "ஒவ்வொரு முறையும் அழைத்துப் பின் கவிதைப் பாட வருவது அழகல்ல. அறிவிப்பைப் பார்த்த உடனேயே  ஓடி வந்து கவிதைப் பாடுவதே கவிஞர்களுக்கு அழகு" என்றக் கருத்தை முன் வைக்கிறது நிகழ்ச்சி. ஆரம்பகாலத்தில் 25 முதல் 30 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்போது 50 முதல் 60 பேர் ஓடி வருகின்றனர். எண்ணிக்கை மட்டுமல்ல; நிகழ்ச்சியின் நடவடிக்கைகளும் கூடி வந்துள்ளது. என் போன்றவர்களுக்கு கவிதைப் பயிற்சிக்கூடமாகவும் இருக்கிறது கவிமாலை நிகழ்ச்சி. அவ்வப்போது குடும்ப நிகழ்ச்சியாகவும் களைகட்டுகிறது. 

 தமிழகத்துக் கவிஞர்களான கவிக்கோ, ஈரோடு தமிழன்பன், நாகூர் ரூமி, கனடாவின் கவிஞர் சேரன், தஞ்சை  கூத்தரசன் என பலபேரை வரவேற்றிருக்கிறது கவிமாலை. எழுத்தாளர், கவிஞர்களின் சந்திப்பிற்கு சிங்கப்பூருடன் பாலம் அமைத்திருக்கிறது மாதாந்திர நிகழ்ச்சிகள்.  சிங்கைக் கவிஞர்களின் கவிதைத் திறனையும் எழுத்தார்வத்தையும் கண்டறிய பிறநாட்டு தமிழ் அறிஞர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. உள்ளூர் கவிஞர்களான வை. சுதர்மன், அருண்முல்லை, திருமதி. தவமணி  ஆகியோரது புத்தகங்களை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. ஆரம்பகாலத்தில் நான் கவிஞர்களையும்  எழுத்தாள நண்பர்களையும்  சந்திக்கவே கவிமாலை நிகழ்ச்சிக்குச் செல்லத் தொடங்கினேன். போட்டிகளின் தலைப்பு அப்போது நிகழ்ச்சி தொடங்கியவுடன் கொடுக்கப்படும். முன்னறிவிப்பு செய்யப்படாது. தமிழ்முரசு செய்தித்தாளில்   யார் கலந்து கொள்கிறார்கள்? யார் பரிசுகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்? என்பது மட்டுமே அறிவிக்கப்படும். நான் கொடுத்த தலைப்பில் ஏதோ ஒன்றைப் பற்றி சிந்தித்து காகிதத்தில் எழுதிக் கொள்வேன்.  நான்  ஐந்து ஆண்டுகள் முன் எழுதிய என் முதல் கவிதை சன் டிவி படிக்கும்  கரடிமுத்து கவிஞரின்  "கொக்கரக்கோ கும்மாங்கோ" கவிதையைவிட மோசமாக இருந்தது.

 எழுதிய பிறகு நிச்சயம் எனக்கு பரிசு கிடையாது என்ற உறுதியுடன்தான்  காகிதத்தை மடித்துக் கொடுப்பேன். முடிவு தெரிந்தபின்   என் கவிதையை ஒரு கவிஞருடன் உட்கார்ந்து அலசுவேன். பெரும்பாலும் கவிஞர் இக்பால்தான் மாட்டிக் கொள்வார். பிறகு கவிதையில் எடுத்துக்கொண்ட கருப்பொருள் எந்த அளவு பொருந்தியிருக்கிறது? கருத்து எப்படி உள்ளது? சொல்லப்பட்ட கருத்து ஆழமாக, அசத்தலாக உள்ளதா? என்று கவிஞர் பொறுமையுடன் எடுத்துரைப்பார். பின் கடைசியில்தான் சொல்வளம், தவறுகள் போன்றவை பார்க்கப்படும். "சுதந்திரமாகச் சொல்லுங்கள். கற்பனைக்கு பஞ்சமிருக்கக் கூடாது. அழுத்தமாகச் சொல்லுங்கள்" இப்படி கேட்டு கேட்டு பழகியது காதுகள்.  உற்சாகமான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். அதிக  சுதந்திரத் தாகத்துடன் பாடி கவிதையே வராமல் போய்  கட்டுரையாக உருவெடுத்ததும் உண்டு. சிலசமயங்களில் தொலைபேசியிலும் பாடங்களைக் கேட்டுக் கொள்வதுண்டு. இவ்வகையில் கவிஞர் நெப்போலியனும், பிச்சினிக்காடு இளங்கோவும், தமிழ்முரசு குணாளனும், பனசையும்   கூட எனக்கு பெரும் உதவி செய்திருக்கிறார்கள். யாரையும் விடுவதில்லை.

ஆரம்பத்தில் நண்பர்களை செவிமடுக்கவும்  தேநீர், பக்கோடா சாப்பிட்டு மகிழவும்  கவிமாலை நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன்
என்பதுதான் உண்மை.  பின் கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டேன். எனக்கு கவிதைகள் மேலான காதல் வளர ஆரம்பித்தது. தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திர கவிச்சோலை நிகழ்ச்சியும், பெக்கியோ சமூக மன்றமும். ஒலி 96.8ம்   கவிஞர்களுக்கு மேடை அமைத்தது. அதுபற்றியும் பின்பு உங்களுக்கு கூறுகிறேன். இடைஇடையே  கவிமாலை கவிஞர்களுக்கு உள்ளூரிலேயே பிக்னிக்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.  சிங்கப்பூரின் பக்கத்தில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் தீவு, இந்தோனீசீயாவின் பாதாம் தீவு, சிங்கப்பூரின் புலவ் உபின் தீவுகளுக்கு படகில் சவாரி. தீவுகளுக்குப் போனபின் சடுகுடு, "குலைகுலைக்கா முந்திரிக்கா" விளையாட்டுகளும் உண்டு. ஆடல், பாடல், விளையாட்டு, ருசியான விருந்துகள் பின் கவிதைப் படிப்பது, பாடுவது,  பாடிக்கொண்டே இருப்பது என்று ஜாலியாகவும் கவிதைகள் புரண்டோ டும்.  பின் ஒரு மாதாந்திரக் கூட்டத்தில் கவிமாலையைக் கடற்கரைச்சாலை சமூக மன்றத்தில் முடித்துக் கொண்டு அனைவரும் நிஜமாகவே சாங்கிக் கடலின் அழகை ரசிக்க விருப்பம் க்மொண்டோ ம். கவிபாடவும் ஆர்வம் கொண்டோ ம்.  'ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே' போய் ஓய்வாகக் கூடினோம். அங்குள்ள கோமாளாஸ் உணவகத்தில் எங்களுக்கு தோசை, பூரி, வடை என்று விரும்பியதெல்லாம் பரிமாறப்பட்டது. மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு கடற்கரையில் அமைந்த மரங்களின் கீழ் உட்கார்ந்தோம். இரவு முழுவதும் மாறி மாறி கவிதைப் பாடினார்கள் கவிஞர்கள். நல்ல கவிதைகளுக்கு பிச்சினிக்காடு இளங்கோ சிங்கப்பூரின் தமிழ் உள்ளங்களை நாடி கவிஞர்களுக்கு  பெரிய பெரிய பரிசுகளையும் பெற்று அளிப்பார்.

இம்முறை  ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவில் (26 ஜூன் 2004) "வேடத்தைக் கிழி" தலைப்பில் நன்யாங் தொடக்கக் கல்லூரியின் தமிழாசிரியர் கவிஞர் ப. திருநாவுக்கரசு தலைமையில் கவியரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவியரங்கின் தலைவர்  "சொற்களால் கீறித் தள்ளுங்கள்" என்று சொன்னார். உடனே  சொல்வளம், பொருள்வளம் மிக்க கவிதைகளை என் நண்பர்கள் கிழி கிழி என்று கிழித்தார்கள். நிகழ்ச்சிக்குக் கலகலப்பு ஊட்டினார்கள். என் உள்பட, டாக்டர்.நாச்சியப்பன், கோ.இளங்கோவன், திருமதி மிரா, பனசை நடராஜன், பாசுகரன், பொன் ராமச்சந்திரன் ஆகியோர் கவியரங்கில் பங்கேற்றனர்.

கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிராமல் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் கவிமாலை நிகழ்ச்சியில்  ஆரம்பம் கண்டு வருகின்றன. இப்போது ஆண்டு விழாக்களில் ஏதாவது புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாண்டு தஞ்சை கவிஞர், பேச்சாளர்  கூத்தரசன் தலைமையில் "சிங்கப்பூர் கவிஞர்களின் கவிதைகளில் ஓங்கி ஒலிப்பது உரத்த சிந்தனையா? உயர்ந்த கற்பனையா?" என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. உரத்த சிந்தனையே! என்று கவிஞர்கள் கலைச்செல்வி வைத்தியநாதன், மலர்விழி இளங்கோவன், சிவஸ்ரீ சுப்பிரமண்யன் ஆகியோர் பேசினர். உயர்ந்த கற்பனையே! என்று கவிஞர்கள் சேவகன், அருண்கணேஷ், ந.வீ.விசயபாரதி ஆகியோர் வாதிட்டனர். சிங்கப்பூர் கவிஞர்களின் கவிதையில் உயர்ந்து நிற்பது கற்பனையே! என்னும் கருத்து வெற்றி பெற்றது. 

 கவிமாலை ஆண்டு விழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக  சிங்கப்பூரின் சிறந்த மூத்த கவிஞர்களுக்குச் சிறப்பு செய்து வருகிறது. கவிஞர் இக்பால் அவர்களின் "தண்ணீர்" என்னும்  கவிதை 2000ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்ற  மாபெரும் எக்ஸ்போவில் இடம் பெற்றபோதும்  சிங்கப்பூருக்கும் ஆசியான் மொழிகளில் தமிழுக்கும்  பெருமை சேர்க்கும்  வகையில் கவிஞருக்கு ஆசியான் விருது வழங்கப்பட்டபோதும் கவிமாலை அதைக் கொண்டாடியது. பின்பு கடந்த ஈராண்டுகளாக உள்நாட்டின் சிறந்த கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து  கணையாழி அணிவிக்கப்பட்டு "கவிமாலை இலக்கிய விருது" வழங்கப்படுகிறது. ஆங்கில நாடகங்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தவரும், மூத்த எழுத்தாளருமான பி கிருஷ்ணன் முதன்முதலில் "கவிமாலை இலக்கிய பரிசு" பெற்றார்.  இவ்வாண்டு சிங்கப்பூரின் சித்திரக்கவி, 'வெண்பாச்சிற்பி' என அழைக்கப்படும் கவிஞர்  இக்குவனம் அவர்களுக்கு கணையாழி வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. கவிஞர் இக்குவனத்தைச் சிறப்பு செய்ததில் கவிமாலை இரு வழிகளில் பெருமைத் தேடிக் கொண்டது. தமிழ் இலக்கிய வரலாற்றில் சிங்கப்பூரின்  சித்திரக் கவிகள் தனி இடம் பெற்றவர்கள் என்பது பல பேருக்குத் தெரியாது. இவ்வழியில் இவ்வாண்டு  "கவிமாலை இலக்கியவிருது" சித்திரக்கவி நாராயணசாமி நாயகர்(1866), சதாசிவ பண்டிதர்(1887)  சின்னப்பனார்( இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி)  போன்ற முன்னோடி கவிகளுக்கும்  சிங்கப்பூரர்கள் செலுத்திய நினைவூட்டல் விழாவாக அமைந்தது. விருது பெற்ற  சிங்கையின்  82 வயது கவிஞர்  இக்குவனம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள  ஒரே சித்திரக் கவி என்பதையும் இவ்விழா மக்கள் மனதில் நிறுத்தியது. நிகழ்ச்சிக்கு இவ்வாண்டு தமிழகத்திலிருந்து வைகோவின் செயலாளர் துடிப்புமிக்க இளைஞர் அருணகிரியும் பிரபல பெண் கவிஞர் கிருஷாங்கனியும்  வருகை தந்தனர். (சிங்கப்பூர் சித்திரக்கவிகள்  பற்றியும் வெண்பாச்சிற்பி இக்குவனம் பற்றி அறியவும்  www.samachar.com பத்திரிக்கையில் என் கட்டுரையை நீங்கள் படிக்கலாம்.)

Copyright © 2005 Tamiloviam.com - Authors