தமிழோவியம்
வானவில் : கிருஷ்ணதேவராயரும் அமைச்சரும்
-

கிருஷ்ணதேவராயரது அமைச்சரவையில் ராயன பாஸ்கரர் என்ற வெகு புத்திசாலியான அமைச்சர் ஒருவர் இருந்தார். சிக்கலான பிரச்சனைகளுக்கு அவரிடம் அரசர் ஆலோசனை கேட்பது வழக்கம். பாஸ்கரர் மிகச் சிறந்த கொடையாளி. தனக்கு எது கிடைத்தாலும் அதைப் பிறருக்கு தானமாகக்

கொடுத்து விடுவார். அவருக்கு இல்லை என்று சொல்லத் தெரியாது. அதனால் அவருடைய கொடை வன்மையின் புகழ் நாள் தோறும் பெருகியது.  தனக்கென்று ஒன்றையும் சேமித்து வைத்துக் கொள்ளாததால் அவருடைய சொத்தும் குறைந்து போயிற்று.

ஒரு நாள் பாஸ்கரர் இறந்துவிட்டார். அதற்கு முன்பே அவருடைய ஒரே மகனும் அகால மரணமடைந்திருந்தார். பாஸ்கரரின் மருமகளும், பேரனும் அவருடைய இறுதி காலத்தில் அவருடனேயே இருந்து அவருக்குப் பணிவிடைகள் செய்துவந்தார்கள். பாஸ்கரர் இறந்தபிறகு, பழைய வீடு ஒன்றில்

குடி இருந்து கொண்டு, தங்களிடமிருந்த சொற்ப நிலத்திலிருந்து வந்த வருமானத்தில் வாழ்ந்து வந்தார்கள். பாஸ்கரரின் மருமகள் சாவித்திரிக்கு தன் மகன் கிருஷ்ணனை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவந்தாள். அவனும் நன்றாகப் படித்து வந்தான். அந்தப் பள்ளிக்கூட ஆசிரியருக்கு பாஸ்கரரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அதனால் கிருஷ்ணனை மிகுந்த அக்கறையுடன் கவனித்துப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வந்தார். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு கவிஞர் வந்தார். அவர் ராயன பாஸ்கரரிடம் கவிபாடி பரிசுகள் பல பெற்றவர். அதனால் அங்கு வந்தபோது ஆசிரியரிடம் பாஸ்கரரைப் பற்றி விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆசிரியர் அவரிடம்,  " ஐயா! பாஸ்கரர் மறைந்து விட்டார். அவருடைய பேரன் இங்கே தான் படித்துக்கொண்டிருக்கிறான் " என்று சொல்லி, கிருஷ்ணனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கவிஞர் உணர்ச்சி மிகுந்த குரலில் அந்தப் பையனைப் பாராட்டித் தழுவிக்கொண்டார். பாஸ்கரரின் நினைவாக ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார்.  அதைப் பார்த்த கிருஷ்ணனுக்கு மிகுந்த பெருமை ஏற்பட்டது. தாத்தாவின் சார்பில் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். தன் காதுகளில் போட்டிருந்த தங்கத் தோடுகளில் ஒன்றைக் கழற்றி அவரிடம் கொடுத்து, காலில் விழுந்து வணங்கினான். இதைப் பார்த்தவுடன் வகுப்பில் அனைனருக்கும் ஆச்சரியமாகப் போய்விட்டது. ஆசிரியரும், மாணவர்களும் கிருஷ்ணனைச் சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள். அந்த ஏழைக் கவிஞரைத் தன் வீட்டிற்குச் சாப்பிட அழைத்துச் சென்றார் ஆசிரியர். அப்போது ஆசிரியரின் மனதைக் கவலை சூழ்ந்தது. கிருஷ்ணனின் வீட்டுச் சூழ்நிலையை அவர் நன்கு அறிவார். அவனுடைய தாயார் அந்தச் சிறுவன் இதைப் போல அவசரப்பட்டுச் செய்த காரியத்தை எண்ணி வருந்தமாட்டாளா? அவரிடமே வந்து கேட்கமாட்டாளா? என்று பல எண்ணங்கள் அவர் மனதில் தோன்றியது. உடனே அவர் கிருஷ்ணனிடமும் இதைத் தெரிவித்துவிட்டு, " ஒருவேளை உன் தாயார் கோபித்துக்கொண்டால் என்னிடம் வந்து சொல். நான் அந்தக் கவிஞரிடமிருந்து உன் தோட்டை வாங்கித் தருகிறேன்! " என்று சொன்னார்.

இப்போது கிருஷ்ணனுக்கும் கவலை வந்துவிட்டது. எங்கே தன் தாய் தன்னைக் கோபித்துக்கொள்வாளோ என்ற பயம் அவனை வாட்டத் தொடங்கியது. பயந்து கொண்டே வீடு திரும்பியவன் வெகு நேரம் தன் தாயின் கண்ணில் படாமலேயே இருந்தான். இரவு நேரம் ஆகிவிட்டது.

சாப்பிடும்போதும் வெளிச்சம் குறைவான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டான். தாயின் முகத்தைப் பார்க்கவே இல்லை. சாவித்திரிக்கு இது ஆச்சரியமாக இருந்தது. கிருஷ்ணன் அதைப் போல இருந்து அவள் பார்த்ததே இல்லை. அதனால் அவன் படுக்கப் போகும்போது அவன் அருகில் வந்து அமர்ந்து, " உன் உடம்பிற்கு என்ன? நீ ஏன் இப்படி இருக்கிறாய்? " என்று கேட்டுக்கொண்டே பையனின் முகத்தை

நிமிர்த்தினாள். ஒரு காதில் தோடு இல்லாதது உடனே அவள் கண்ணில் பட்டது. "உன் வலது காது தோடு எங்கே? " என்று கேட்டாள். கிருஷ்ணன் அழுது கொண்டே நடந்தவற்றைக் கூறினான். " அம்மா! தாத்தாவைப் பற்றி அவர் அவ்வளவு புகழ்ந்து பாடியதும் என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவருக்கு ஏதாவது கொடுத்தே ஆகவேண்டும் என்று தோன்றியது. அதனால் வலது காது தோட்டைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்! " என்று கதறிக்கொண்டே அவள் காலில் விழுந்தான்.

இதைக் கேட்ட சாவித்திரிக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. முகம் சிவந்து போனது. " மன்னிப்பதா ? அந்தக் கவிஞர் எங்கே இருக்கிறார் ? நாம் உடனே அவரைப் பார்க்கவேண்டும். புறப்படு!! " என்று சொன்னாள். கிருஷ்ணன் மெய் நடுங்க, தனது தாயை ஆசிரியரின் வீட்டுக்கு அழைத்துச்

சென்றான். அங்கே கவிஞரும் ஆசிரியரும் உணவருந்திவிட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள்.

கிருஷ்ணன் தாயுடன் வருவதைக் கண்டார் ஆசிரியர். தான் பயந்ததைப் போலவே நடந்துவிட்டதென்று எண்ணிக்கொண்டார். கவிஞரை எப்படியாவது சமாதானப்படுத்தி, தோட்டைத் திரும்ப வாங்கித் தந்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். மகனுடன் வந்த சாவித்திரியிடம் நடந்ததை விளக்கிவிட்டு, உள்ளே அழைத்துச் சென்று கவிஞரை அறிமுகம் செய்துவைத்தார்.

கவிஞரின் காலில் விழுந்து வணங்கினாள் சாவித்திரி. " ஐயா! என் மகன் தவறு செய்துவிட்டான். தாங்கள் தயவு செய்து அவனை மன்னிக்கவேண்டும்.

ராயன பாஸ்கரரின் பேரனாக இருந்தும் அவரது கொடைத் தன்மை முழுவதுமாக இவனிடம் இல்லை. ஒரே ஒரு தங்கத் தோட்டை வைத்துக்கொண்டு தாங்கள் என்ன செய்வீர்கள்? இந்த இன்னொரு தோட்டையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதிக்கவேண்டும்! " என்று கூறி, மகனின் காதிலிருந்த மற்றொரு தோட்டைக் கழற்றிக் கவிஞரிடம் கொடுத்தாள் சாவித்திரி! இதைக் கண்டு கவிஞரும் ஆசிரியரும் மெய்சிலிர்த்துப்

போனார்கள்!!

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. அதேப் போல நல்ல பண்புள்ளவர்கள் தாழ்மை நிலையை அடைந்தாலும், அவர்களுடைய பண்புகள் தாழ்வதில்லை !!

Copyright © 2005 Tamiloviam.com - Authors