தமிழோவியம்
உங்க. சில புதிர்கள் : ஆலோசனை
- முத்துராமன்

உலகத்திலேயே அதிகமாகக் கிடைக்கக்கூடியது இலவசமாகக் கிடைக்கக்கூடியது எதுவாக இருக்கும்? அப்படின்னு கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். அது அட்வைஸ் செய்வது. ஆனால், இன்றைக்கு உலகம் முழுவதுமாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒரு வணிகமே இதுதான். ஆலோசனை. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும். அதிகமில்லை ஜெண்டில்மென், கொஞ்சம் பாலீஷாகச் சொல்கிறார்கள். கன்ஸல்டண்ட் என்று, அவ்வளவுதான். இதுவரை இலவசமாக வழங்கிய பல சேவைகளை வணிக முறையில் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். உலகம் முழுவதும் எல்லாவற்றுக்கும் கன்ஸல்டண்ட் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்துக்கு இல்லை என்று சொல்லுஙகள் பார்க்கலாம்.

ஆனால், இந்த ஆலோசனை கூறுதலுக்கும் வழிகாட்டுதலுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறது. நீங்கள் எப்போதாவது வழிகாட்டியிருக்கிறீர்களா? "இப்படியே நடந்து போனா கீழ்பாக்கம் வரும்" என்று யாரையாவது அனுப்பி இருப்பீர்கள், அது அல்ல.

இந்த வழிகாட்டுதல் வேறு.

உங்களுடைய திறமைகளை உங்களுக்கே புரிய வைப்பதுதான் வழிகாட்டுதல். உங்கள் திறமைகநளையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ளச் செய்வதே வழிகாட்டுதல்.

ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள சொல்லக்கூடிய ஆலோசனைதான் வழிகாட்டுதலாகும். வேலை முடிந்து எல்லோரும் போன பிறகு மேனேஜர் நல்ல மூடில் இருக்கும்போது உங்களை மட்டும் அழைத்து அவருக்கு எதிரே உட்காரவைத்து நீங்கள் செய்யும் தவறுகள்;

அதனைத் திருத்திக் கொள்ளும் வழி, அவருக்கு நேர்ந்த அனுபவம்; இதெல்லாவற்றையும் சொல்லி உங்கள் திறமைகளைப் பாராட்டிவிட்டு "OK, ஆல் தி பெஸ்ட்" என்று கை குலுக்குவாரே, அந்த ரூமை விட்டு வெளியே வரும்போதே உங்கள் கால் தரையிலிருந்து ஒரு இன்ச் மேலே பறப்பது போலிருக்குமே இது ஒரு வகையான வழிகாட்டுதல்தான்.

சரி, இந்த ஆலோசனை என்பதற்கும் வழிகாட்டுதல் என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டுமே வெவ்வேறு செயல்கள். ஆனால், இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. வழிகாட்டுதலின் ஒரு அம்சம்தான் ஆலோசனை கூறுதல்.

ஆலோசனை கூறுவதன் மூலம் ஒருவருடைய மனச்சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். யாரோ ஒருவர் உங்களிடம் வந்து அவருடைய பிரச்னையைச் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்கிறார். உடனே உங்களால் அவருக்கு சரியான ஆலோசனை வழங்கிவிட முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. அப்படியே போகிற போக்கில் அவருக்கு ஒரு ஆலோசனையைச் சொல்லிவிட்டுப் போக, அதற்குப் பிறகு வரும் பிரச்னைகளைச் சமாளிக்க நீங்கள் யாரிடமாவது ஆலோசனை கேட்கவேண்டியிருக்கும்.

முதலில் பிரச்னையோடு வந்தவரைப் பற்றி சரியாகத் தெரிந்து கொண்ட பிறகே அவருக்கு ஆலோசனை சொல்ல முடியும். மேலும், ஆலோசனை கூறும்போது பல்வேறு விதமான தகவல்கள் தரவேண்டும். அவருடைய பிரச்னைக்கு உங்களால் தீர்வு கூற முடியும் என்று அவர்கள் நம்பவேண்டும். 

ஒருத்தருக்கு ஆலோசனை சொல்றது என்ன சாதாரண விஷயமா? அவரை நேருக்கு நேர் உட்கார வைத்து அவருடைய பிரச்னைகளைக் கேட்பதே சரியான முறை. அவரைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் பிறகே அவருடைய பிரச்னைக்கு வரலாம். அவருடைய பிரச்னையைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அவரே சொல்வது சொல்-தகவல் முறை.

ஆனால், சொல்-இலா தகவல் முறை என்பதுதான் இந்த நேர்முகப் பேட்டியின் முக்கியமான விஷயம். இந்த சொல்-இலா தகவல் முறையில்தான் ஆலோசனை பெற வந்தவரின் நடத்தையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

உடல் சம்பந்தப்பட்ட அசைவுகளைத் தெரிந்துகொள்வதே சொல்-இலா தகவல் முறை. அதாவது, ஆலோசனை பெற வந்தவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டே பல விஷயங்களை கவனிக்க வேண்டும். அவருடைய புன்னகை, வெட்கம், அழுகை, தலையைச் சொறிதல், கன்னத்தில் கை வைத்துக் கொள்ளுதல், மார்பின் மீது கைகளை குறுக்காக வைத்துக் கொள்ளுதல், விரல்களில் சொடுக்கு எடுத்தல், விரல்களை முறுக்குதல், பெருவிரலை உள்ளங்கையில் வைத்து தேய்த்தல், மூக்கை கைவிரல்கள் கொண்டு மூடிக் கொள்ளுதல், நகங்களைக் கடித்தல், உதட்டைக் கடித்தல், சாவிக் கொத்து வைத்து சுற்றிக் கொண்டிருத்தல், வளையல் அல்லது பேனா வைத்து விளையாடுதல் - இப்படியாக பல விஷயங்களை உள்ளடக்கியதுதான் இந்த சொல்-இலா தகவல் முறை. இவை தவிர முகபாவனைகள் மிகவும் முக்கியமானவை.

இந்த முறையின் மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். பிரச்னையைச் சொல்ல வந்தவர் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் கொஞ்சமாக இருந்தாலும் அவருடைய சைகைகள் பல தகவல்களை வெளிப்படுத்தும். பொதுவாக சைகைகள் வாய் வழியாகப் பேசுவதை ஊக்கப்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட தகவலையும் மனவெழுச்சியையும் சைகைகள் சரியாக வெளிப்படுத்துகின்றன.

இந்த சொல்-இலா தகவல்கள் என்பது சில வேளைகள் நிரந்தரமான தகவல்களையும் பல சமயங்களில் தற்காலிகமான தகவல்களையும் தரக்கூடியது. பிரச்னையோடு வந்தாரே ஒருவர் அவருடைய மனநிலையை கார்ல் ரோஜர் இந்த ஆலோசனை முறைப்படி ஏழு நிலைகளாக வகைப்படுத்தித் தருகிறார். அந்த நிலைகளில் சில முக்கியமான விஷயங்கள் மட்டும்.

ஏட்டிக்கு போட்டி
1000 எம்பி தரும் ஜிமெயிலுக்கு (கூகிள்) போட்டியாக யாஹு தன்னுடைய இலவச ஈமெயில் அளவை 100 எம்பியாக அதிகரித்தது அனைவரும் அறிந்ததே. யாஹூவைத் தொடர்ந்து (மைக்ரோஸாப்ட்) ஹாட்மெயிலும் கோதாவில் குதிக்கிறது. அது இன்னும் சில வாரங்களில் தன்னுடைய இலவச ஈமெயில் அளவை 250 எம்பியாக உயர்த்தப்போகிறது. அதோடு மட்டும் இல்லாமல் கூகிள் தேடு பொறிக்கு (search engine) போட்டியாக புதிய தேடு பொறியை சோதனை முயற்சியில் இறக்கியிருக்கிறது. நாம் சோதித்த வரை அது கூகிள் அளவுக்கு இல்லையென்றாலும் சோதனை முடிந்து முழுமையாக அனைத்து வசதிகளுடன் வெளிவந்தால்தான் தெரியும். [http://search.msn.com]

முதல் நிலை:

1. தன்னைப் பற்றி கூறவிரும்பாமல் மிகவும் பிடிவாத குணத்துடன் இருப்பார்கள்.
2. தன்னுடைய அந்தரங்க உணர்வுகளுக்கு எந்தவிதமான மதிப்பும் கிடைக்காது என்று நினைப்பவராக இருப்பார்.
3. பிரச்னையை சரியாக புரிந்து கொள்ள மாட்டார், பிரச்னையை சொல்வதற்கு தயக்கம் மிகுந்தவராக இருப்பார்.

இரண்டாம் நிலை:

1. இந்த நிலையில் பிரச்னை என்ன என்பதை சொல்ல முற்படுவார். ஆனால், பிரச்னைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல பிரச்னையைச் சொல்வார்.

மூன்றாம் நிலை:

1. இப்போது அவருடைய பிரச்னையைப் பற்றி அதிகம் வெளிப்படுத்துவார்.
2. முதல் இரண்டு நிலைகளில் இருந்த மன அழுத்தமும் பிடிவாதமும் குறைந்து காணப்படும்.
3. அவருடைய சொந்த விருப்பங்களுக்கேற்ப பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பார்.

நான்காம் நிலை:

1. தன்னுடைய கடந்த கால (ஆட்டோ கிராஃப்) நினைவுகளைப் பற்றி அதிகமாகப் பேசுவார்.
2. தன்னைப்பற்றி வெளிக்காட்டிக் கொள்ள அதிகம் முயற்சிப்பார்.
3. உண்மை எது? பொய் எது? என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பார்.

ஐந்தாம் நிலை:

1. இதுவரை இருந்த குழப்பங்களோ, பயமோ இல்லாமல் தெளிவாக இருப்பார்.
2. பிரச்னைக்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பதைப் பற்றிய பொறுப்புடன் செயல்பட யோசிப்பார்.
3. முரன்பாடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்துக்கு வந்திருப்பார்.

ஆறாம் நிலை:

1. இதுவரை மறைத்து வந்த பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவார்.
2. பிடிவாத குணம் மாறி ஆலோசகர் சொல்லும் விஷயத்தைக் கேட்கக்கூடிய மனநிலைக்கு வந்துவிடுவார்.

ஏழாம் நிலை:

1. தன்னுடைய பிரச்னைக்குத் தானே தீர்வு காண முயற்சிப்பார்.

இந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மூலம் ஒருவர் தன்னுடைய ஆளுமையை சிறப்பாக வளர்த்துக் கொள்ளமுடியும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors