தமிழோவியம்
பருந்துப் பார்வை : காதல் தும்மல்கள்
- மதுரபாரதி

தும்மல் இருக்கிறதே அது மிகத் தொந்தரவான விஷயம். சொல்லாமல் கொள்ளாமல் வரும். வருவதற்குக் காரணமே வேண்டாம். தூசியால், ஜலதோஷத்தால், பனிக்காற்றால், மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருக்கும்போது பக்கத்திலிருக்கும் அரசுப்பேருந்து விடும் புகையால், அடுத்து உட்கார்ந்திருப்பவர் 'சர்'ரென்று மூக்குப்பொடி உறிஞ்சுவதால், பூவின் மகரந்தத்தால், அடுக்களையில் மிளகாய் வற்றல் வதக்குவதால்--எத்தனையோ காரணங்களால் தும்மல் வரலாம்.

பல்லிவிழுந்தால் பலன், பல்லி சொன்னதற்குப் பலன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தும்மலுக்குப் பலன் தெரியுமா? ஒரு காலத்தில் அதுவும் இருந்திருக்கிறது! 'பலமுறை தும்மினால் காரியசித்தி, தும்மின பிறகு இருமின்லாபம்' என்று இப்படி ஏராளமாகப் பட்டியலிடுகிறது அபிதான சிந்தாமணி. நல்லவேளை நம் பஞ்சாங்கக்காரர்கள் அதைப் பார்க்கவில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் அதையும் போட்டு நாம் ராகுகாலம், யமகண்டம் போக மிஞ்சிய நேரத்தில் செய்கிற கொஞ்சநஞ்சம் வேலைகளையும் செய்யவிடாமல் அடித்துவிடுவார்கள்.

தன்மேல் காதல் கொண்டவர் தன்னை நினைப்பதனாலும் தும்மல் வரலாம் என்று ஒரு நம்பிக்கை உண்டு. காதலன் பொருள்தேடி நெடுந்தொலைவு சென்றிருக்கிறான். காதலிக்குத் தும்மல் வருகிறது. அவள் நினைக்கிறாள் "என்னவன் போகிறவழியில் பாலைவனத்தைத் தாண்டிப் போகவேண்டும். அங்கே ஒரு பழைய மரத்தில் ஆந்தை உட்கார்ந்துகொண்டு அவனைப் பார்க்கும். அதைத் தாண்டிப் போனால் அவனது பொருள்களைக் கவர்ந்து கொள்ளக் கள்வர்கூட்டம் இருக்கிறது. அதையும் தப்பித்து குன்றத்தின் அருகில் போயிருப்பான். தப்பித்த நிம்மதியில் என்னை நினைக்கிறான் போலும்!" என்று தனது அடுக்குத் தும்மலுக்குக் காரணம் கற்பிக்கிறாள் அவள். அவன் நலமாக இருக்கிறான் என்பதைச் சொல்வதால் தும்மல்கூட அவளுக்கு 'ஒளிபொருந்திய'தாகத் தோன்றுகிறது.

மன்ற முதுமரத்து ஆந்தை குரல் இயம்ப
குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர்
உள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்

(மூவாதியார் எழுதிய ஐந்திணை எழுபது: பாடல் 40)

ஆனால் திருவள்ளுவரோ இந்தத் தும்மலை வைத்துக்கொண்டு பெரிய நாடகமே எழுதிவிடுகிறார்.

காதலி நான்குபேர் நடுவில் இருக்கிறாள். அவளுக்குத் தும்மல் வருகிறாற்போல் இருக்கிறது. மூக்கைச் சுருக்கிக் கண்களை மூடிக்கொள்கிறாள். வாயைத் திறந்துகொள்கிறாள். நாகரிகம் கருதிக் கைக்குட்டையை எடுத்து வாயருகே தயாராக வைத்துக் கொள்கிறாள். சற்றே வலப்பக்கமாக முகத்தையும் திருப்பிக் கொண்டுவிடுகிறாள்.

நண்பர்கள் எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு இவளைப் பார்க்கிறார்கள். கடைசி நிமிடத்தில் தும்மல் வராமல் ஏமாற்றிவிடுகிறது. முன்பு செய்த எல்லாவற்றையும் திருத்தி, மற்றவர் பக்கம் திரும்புகிறாள். கொஞ்சம் சங்கோஜமாகிவிடுகிறது. இவளுக்கு ஏமாற்றம் தும்மல் வராததில் அல்ல. தன் காதலன் தன்னை நினைப்பதனால்தான் அந்தத் தும்மல் வருகிறது என்று நம்பினாள். தும்மல் ஏமாற்றியது போல, "உன்னை நான் ஒரு நிமிடம்கூட மறக்கவே மாட்டேன்" என்று சொன்னவனும் ஏமாற்றினானோ? அதனால்தான் வந்த தும்மல் வராது திரும்பிவிட்டதோ என்று அவளுக்குச் சந்தேகம்.

இதை வள்ளுவர் சொல்கிறார்:

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்

(திருக்குறள்: நினைந்தவர் புலம்பல்: 1203)

[என் காதலர் என்னை நினைப்பது போல இருந்து நினைக்கவில்லையோ? அதனால்தான் தும்மல் வருவதுபோல வந்து போய்விடுகிறது]

தும்முவதும் ஒரு சுகம். அது திடீர் வெடிப்பு. வெடித்து வருகையில் மிக மெல்லிய சவ்வுத் தசைகளைக் கடந்து வருகிறது. எனவேதான் சில மருத்துவ சோதனைகளில் இதைக் கலவியின் உச்சக்கட்ட வெடிப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அணையுடைத்து வருவதுதானே. தும்மி முடிந்ததும் கூட 'அப்பாடா' என்று ஒரு பெரிய விடுதலை கிடைக்கிறது. வருகிறது போல் இருந்து வராவிட்டால் மனஅழுத்தம் உண்டாகிறது.

இப்படி நண்பர்களுக்கிடையே இருக்கும் பெண் சொல்லமுடியாமல் தவிக்கிறாள். "என்னடீ, தும்மல் புசுக்குன்னு போயிடுச்சா?" கேட்கிறாள் ஒருத்தி. இவள் கொஞ்சம் வெட்கப்படுகிறாள். அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது "என்னம்மா, என்னமோ ஒரு தும்மல் வரலே, அதுக்கு இப்படி நெளியறயே! என்ன விஷயம், சொல்லு" என்கிறாள் இன்னொருத்தி. பலமாக மறுக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறாள். அதையும் மீறி ஒரு சிறிய வெட்கப்புன்னகை பரவுகிறது.

காதலுணர்வும் தும்மல் மாதிரிதான், சொல்லாமல் கொள்ளாமல், முன்னறிவிப்பில்லாமல், வெளியே 'தடால்' என்று வந்து விழுகிறது. வேண்டுமென்றபோது வராத தும்மல், வேண்டாம் என்று நினைத்தபோது 'அஸ்க்' என்று வெளிப்பட்டது போல, காதலும் மறைக்கமுயன்றாலும் மீறி வெளியாகிவிடுகிறது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றி
தும்மல்போல் தோன்றி விடும்

(திருக்குறள்: நிறையழிதல்: 1253)

[நானோ என் காமத்தை அடக்கி வைத்திருக்கிறேன். ஆனால் அது எச்சரிக்கையின்றி திடீரென்று தும்மல் வருவதுபோல் அடக்கவே முடியாமல் வந்துவிடுகிறது. என்ன செய்வேன்!]

இப்போதெல்லாம் நமக்கு நமது பழக்க வழக்கம் தெரிவதை விட ஆங்கில/அமெரிக்கப் பழக்கங்கள் நன்றாகத் தெரிகின்றன. குழந்தை தும்மினால் அவர்கள் "கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்" (God bless you) என்று வாழ்த்துவார்கள். சீவக சிந்தாமணியில் பிறந்தகுழந்தை தும்முகிறது. அருகிலிருந்த தேவதைகள் அவனை "சீவ" என்று வாழ்த்துகின்றன. 'சீவ' என்றால் 'நீண்டகாலம் வாழ்க' என்று பொருள். எனவே அந்தக் குழந்தைக்குச் சீவகன் என்று பெயர் இடுகிறார்கள். இது நமது நாட்டுப் பழக்கம். எனவே தும்மினால் வாழ்த்தும் பழக்கம் இங்கும் இருந்திருக்கிறது. "குழந்தைக்குத் தும்மல் ஏற்பட்டால் 'கிருஷ்ண கிருஷ்ணா' என்று உடனே கூறும் வழக்கம் சிலருக்கு உண்டு" என்று சந்திரவதனா செல்வகுமரன் குழந்தைவளர்ப்புப் பற்றிய தனது கட்டுரையில் கூறுகிறார். இது ஈழத்துப் பழக்கமாய் இருக்கலாம்.

சரி, இப்போது மீண்டும் காதலர்களுக்குள் என்ன ஆயிற்று என்று பார்ப்போம்.

அன்று மாலை அவள் காதலனைச் சந்திக்கிறாள். தன்னை நினைத்தது போல நினைக்காமல் இருந்தான் என்பதில் அவளுக்குக் கோபம். காதலன் என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் அவள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருக்கிறாள். இந்த இறுக்கத்தை உடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான் காதலன். "ஒரு தும்மல் போடலாமா? போட்டால் அவள் என்னை 'உங்களுக்கு நூறு வயசு' என்று வாழ்த்துவாள். தானாகவே பேச்சு வந்துவிடும்" என்று யோசிக்கிறான்.

தும்மியவுடன் வாழ்த்துவது யோசித்துச் செய்வதல்ல, பழக்கத்தினால் உடனடியாகச் செய்யும் அனிச்சைச் செயல். அவன் தும்முகிறான்.

ஊடியிருந்தோமாத் தும்மினார் யாம் தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து

(திருக்குறள்: புலவிநுணுக்கம்: 1312)

[அவருடன் நான் பேசாமல் பிணங்கியிருக்கும் சமயத்தில் "உங்களுக்கு தீர்க்காயுசு" என்று வாழ்த்தும் முகமாகவாவது பேசுவேனோ என்று எதிர்பார்த்து அவர் தும்முகிறார்]

அவன் எதிர்பார்த்தபடி அவளும் வாழ்த்தினாள். அவன் தும்முவது தனது ஊடலைத் தகர்ப்பதற்காகத்தான் என்று அவளுக்கும் தெரிகிறது. ஆனால் அதனால் ஊடல் தணியவில்லை. எப்படி?

தும்மல் வருவது அன்புடையவர் நினைப்பதனால். அவளோ கோபித்துக்கொண்டிருக்கிறாள். அப்படியிருக்க, வேறு யாரோ அவனை எண்ணியதனால்தானே அவனுக்குத் தும்மல் வந்தது! "எனக்குத் தெரியாமல் யார் அவள் உங்களை நினைத்தது?" என்று கேட்டு மீண்டும் அழத்தொடங்கிவிட்டாள்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

(திருக்குறள்: புலவி நுணுக்கம்: 1317)

[நான் தும்மினேன். அவள் "நூறாண்டு வாழிய" என்று வாழ்த்தினாள். பின்னர் "யாரோ ஒருத்தி உம்மை நினைப்பதனால்தானே தும்மினீர்? யார் அவள்?" என்று கேட்டுப் பிணங்கி மேலும் அழுதாள்]

"என்னடா இது. தும்மினால்கூடப் பிரச்சினை ஆகிவிடுகிறதே! என்ன செய்யலாம். ஏதோ பிணக்கம் தீரும் என்று தும்மினேன். இவளுடைய அழுகை அதிகமாக அல்லவா ஆகிவிட்டது" என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் அவனுக்கு மெய்யாகவே தும்மல் வந்துவிட்டது. தும்மல் போட்டால் அழுகை இன்னும் அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு. கொஞ்சம் சிரமம் ஆனாலும் பரவாயில்லை. இந்தத் தும்மலை அடக்கிக் கொள்ளலாம் என்று அவன் நினைத்தான்.

தும்மல் என்ன லேசுப்பட்ட விஷயமா. என்னதான் அடக்கினாலும் அது ஒரு விதமான சைக்கிள் டயரில் முள்ளுக்குத்தியது போன்ற ஒலியோடுதான் போகும். அதை அவள் கவனித்துவிட்டாள். "ஓஹோ! உங்களுடைய ஆள் உங்களை நினைப்பது எனக்குத் தெரியக்கூடாதாக்கும்? எங்கே தும்மல் போட்டால் அது தெரிந்துவிடுமோ என்று அதைக்கூட அடக்கிக் கொள்கிறீர்களே. என்னை ஏமாற்றுவதற்காக எத்தனை முயற்சி செய்கிறீர்கள்!" என்று கேட்டு அவள் இன்னும் அழத்தொடங்கிவிட்டாளாம்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

(திருக்குறள்: புலவி நுணுக்கம்: 1318)

[மீண்டும் தும்மல் வரவே அதை அடக்கினேன். உடனே அவள் "உமக்குப் பிரியமான யாரோ உம்மை நினைக்கிறதை ஒளிக்கவே தும்மலை அடக்குகிறீரோ?" என்று கேட்டு அழுதாள்]

நாமெல்லாம் மிகச் சாதாரணமாக நினைக்கும் தும்மலை வைத்துக்கொண்டு காதலன் காதலியிடையே நடக்கும் காதல் நாடகத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்திவிடுகிறார் திருவள்ளுவர்.

இதையெல்லாம் படித்துவிட்டு ஏதோ பெண்கள் வெறும் அழுமூஞ்சிகள் என்று திருவள்ளுவர் சொன்னதாக நினைக்கவேண்டாம். அடுத்த அத்தியாயமான 'ஊடலுவகை'யில் முதல் பாட்டிலேயே அவள் சொல்கிறாள் "இல்லை தவறு அவர்க்கு" என்கிறாள். அவர்மீது எந்தத் தவறும் இல்லை. கொஞ்சம் முரண்டு பிடித்தால்தான் பின்னால் வருவது நன்றாக இருக்குமாம்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல் அளி
வாடினும் பாடு பெறும்

(திருக்குறள்: ஊடலுவகை: 1322)

[பிணங்குவதால் அன்பு கொஞ்சம் வாட்டமுற்றது போலத் தோன்றினாலும், பிணக்கத்துக்குப் பின்னர் வரும் புணர்ச்சி அதிக இன்பம் உடையதாக இருக்கும்.]

எனவே அடுத்த முறை தும்மும்போது அக்கம் பக்கம் பார்த்துத் தும்முங்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors