தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : பகுதி 2 : சோழன்
- என். சொக்கன்

பாடல் 22

முதன்முதலாக சோழ அரசனைப் பார்க்கும் ஒரு பெண், 'யார் இந்தப் பேரழகன் ?', என்று வியப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

அதற்குமுன் சோழனைப் பார்த்து அறிந்திராத அந்தப் பெண், தனக்குத் தெரிந்த பெருமைக்குரிய மற்றவர்களை நினைத்துப்பார்த்து, 'ஒருவேளை, இவன், அவனாக இருப்பானோ ?', என்று ஊகிக்கிறாள்.

முதலாவதாக அவள் நினைவுக்கு வருவது, வானத்து தேவர்களின் தலைவனாகிய இந்திரன் - சோழனின் அழகைப் பார்த்து மயங்கி, 'இவன்தான் அந்த இந்திரனோ ?' என்று எண்ணுகிறாள் அவள்.

உடனடியாக, அவளுடைய கேள்விக்கு பதிலும் கிடைத்துவிடுகிறது, 'இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உண்டு, ஆனால், இந்த அழகனுக்கு இரண்டே கண்கள்தான் இருக்கின்றன, ஆகவே, இவன் இந்திரன் இல்லை !'

அடுத்ததாக, காளை வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானை நினைக்கிறாள் அவள், 'சிவபெருமான்தான் இங்கே என்முன்னே வந்திருக்கிறானோ ?'

'ம்ஹும், இல்லை', என்று உடனடியாகத் தெளிகிறாள் அந்தப் பெண், 'சிவபெருமானின் தலையில் பிறை உண்டு, ஆனால், இவன் தலையில் பிறை இல்லை. ஆகவே, இவன் சிவனும் இல்லை !'

மூன்றாவதாக, கோழிக் கொடியைத் தாங்கிய முருகனை எண்ணிக்கொள்கிறாள் அந்தப் பெண் - 'முருகன்' என்றால் 'அழகு' என்று சொல்வார்கள், இந்தப் பேரழகன், முருகன்தானோ ?

இந்தக் கேள்வி தோன்றிய மறுவிநாடி, அவளே பதிலும் சொல்லிக்கொள்கிறாள், 'இல்லை, முருகனுக்கு ஆறு முகங்கள், ஆனால், இவனுக்கோ ஒரே ஒரு முகம்தான், ஆகவே இவன் முருகனும் இல்லை !'

இப்படிப் பலவிதமாய் எண்ணிக் குழம்பியபிறகு, கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறாள் அந்தப் பெண், 'இந்திரனும் இல்லை, சிவபெருமானும் இல்லை, முருகனும் இல்லை, மற்ற அழகு தேவர்களெல்லாம் இல்லை, அப்படியானால், இந்த அழகன், கடல் சூழ்ந்த இந்த உலகத்தை ஆளும் சோழ மன்னனாகதான் இருக்கவேண்டும் !'

சோழனின் அழகு, வானுலக தேவர்களின் அழகிற்கு இணையானது !

O

இந்திரன் எனின், இரண்டேகண்; ஏ(று)ஊர்ந்த
அந்தரத்தான் என்னின், பிறைஇல்லை - அந்தரத்துக்
கோழியான் என்னின் முகன்ஒன்றே கோதையை
ஆழியான் என்(று)உணரப் பாற்று.

(ஏறு - காளை,
ஏறு ஊர்ந்த - காளையின்மீது பயணம் செய்த,
அந்தரத்தான் - வானத்தில் வாழும் இறைவன்
கோழியான் - கோழிக் கொடியைக் கொண்ட முருகன்,
ஆழியான் - கடல் சூழ்ந்த உலகத்தை ஆள்பவன்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors