தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : இரண்டு திரைப்படங்கள்
- இளவஞ்சி

படம் பார்க்கறதுங்கறது எனக்கு அல்வா சாப்பிடறமாதிரி அப்படின்னு வழக்கம்போல ஒரு ஸ்டேட்மெண்ட்டை எடுத்து விடலாம்தான். ஆனா "அல்வா உமக்கு எந்த அளவுக்கு புடிக்கும்?"னு ஒரு கேள்வி வர வாய்ப்பிருப்பதால், படம் பார்க்கறது எனக்கு டிபன் சாப்பிடறது மாதிரி அப்படின்னு வேணா வைச்சுக்கலாம்! அதாவது புடிக்குதோ இல்லையோ, பசிக்குதோ இல்லையோ, சாப்படறதுங்கறது ஒரு இயல்பா மாறிடுச்சு இல்லையா? அதுபோல! முன்னக்காலத்துல எல்லாம் சினிமாக்கு கூட்டிக்கிட்டு போறதுன்னு வீட்டுல முடிவெடுத்தாங்கன்னா, ஓடிப்போய் போஸ்டரை பார்த்துட்டு வந்து அதுல இருக்க படங்களை மட்டும் வைச்சு நாங்களே ஒரு திரைக்கதை எழுதி நடிச்சு முடிச்சிருப்போம். படம் ஓடறது 3 மணி நேரம்னாலும் அன்னைக்கு முழுசும் அதப்பத்தியே பேசறதும் அடுத்து வர அஞ்சாரு நாட்களுக்கு படத்தோட கதைய நண்பர்குழாம்ல சொல்லிச்சொல்லி ரெக்கார்டை தேய்க்கறதும் நடக்கும். அவனுங்களும் அவங்க வீட்டுல இம்சை பண்ணி அதே படத்தை பார்த்துட்டு வந்து "போதுண்டா... நாங்களும் பார்த்துட்டோம். நிப்பாட்டு!"ன்னு சொல்லற வரைக்கும் இந்த இம்சை போகும். அதுக்கப்பறம் அவங்க நான் கதை சொல்லறேன்னு கதையோட கதையா எடுத்துவிட்ட சொந்த சரக்குகளை ஒவ்வொன்னா கண்டுபிடிச்சு என் மானத்த வாங்குவானுங்க. அப்பவும் நான் "அந்த சீனு வாரப்ப நீ ஒன்னுக்கு அடிக்கப் போயிருப்பன்"னு சண்டைக்கு நிப்பனே தவிர கடைசி வரைக்கும் ஒத்துக்கிட்டதே இல்லை.

அப்பறமெல்லாம் எங்கப்பாரு திரைப்படம்னா என்ன? திரைக்கதைன்னா என்ன?  டப்பிங்னா என்ன? பின்னனி இசைன்னா என்னன்னு பாகம் பாகமா பிரிச்சு வெளக்குனதுல படத்தை அனுபவிச்சுப் பார்க்கற புத்தி போயிருச்சு. ஒரு படம் பார்த்தா அதுல என்னென்ன செஞ்சிருக்கறானுங்க அப்படின்னு ஆராயத்தான் தோனுமே தவிர நல்ல பாட்டு  பைட்டுன்னு அனுபவிக்கத்தோணாது. கேங்குல கதை சொல்லி மயக்கற புத்திபோய் டெக்னிக்கலா சொல்லறேன்னு நம்ப புத்திக்கு பட்டதையெல்லாம் எடுத்துவிட ஆரம்பிச்ச வயசு அது. மக்கா எங்கூட சினிமாவுக்கு வரவே பயப்படுவானுங்க.

அதெல்லாம் ஒரு காலம். எவ்வளவு நாளைக்குத்தான் வறட்சியான அறிவு மனசுல ஒட்டும்? நாம என்னதான் படத்த இப்படி அப்படி எடுத்திருக்கானுங்கன்னு பீத்துனாலும் அதுல 5% கூட உண்மையில்லைன்னு எனக்கே தெரியவந்ததாலும், இப்படி பிரிச்சுமேயற புத்தியோட பார்க்கறதால பழைய ரசிச்சுப்பார்க்கற மனப்பான்மையையும் இழக்கிறோம்  என்பதாலும் ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில் இந்த புத்திய ஏறக்கட்டிட்டேன்! (அண்ணாமலை ரிலீஸ்! :) )

இப்பவெல்லாம் கே டிவி மத்தியான ஈஸ்ட்மென் கலர் படங்கள்ல இருந்து HBO ஸ்பைர்மேன் வரைக்கும் எந்தப்படமா இருந்தாலும் ஓடிப்போய் தேடிப்போய் பார்க்கற ஆர்வமெல்லாம் போயிருச்சு. ஆனா, வாய்ப்புக்கெடைச்சா அப்ப்ப்ப்ப்ப்பிடியே முழுசா அதுக்குள்ளாற போயிடுறது  வழக்கமாயிருச்சுங்க. அதுக்கு காலம் ,மொழி, இயக்குனர், நடிகர்கள் பாகுபாடெல்லாம் கிடையாது. சில நேரம் ரொம்ப சீரியசா மங்கிப்போன கலர்ல 75ல் வந்த நீளக்காலர் வைச்ச ராஜ்குமார் கன்னடப்படங்களை நான் இமைகொட்டாது பார்க்கற காட்சிகளைக்கண்டு எங்கூட்டுல எனக்கு மந்திரிச்சு விட்ட சம்பவமெல்லாம்கூட நடந்ததுண்டு! :) ( இதை எழுதிக்கிட்டு இருக்கற இந்த நேரத்துல டிவில சிவாஜி தெய்வமகன்ல பட்டைய கெளப்பிக்கிட்டு இருக்காரு )

நான் சொன்ன அந்த அறிவுஜீவி பீரியடு போதெல்லாம் இந்திப்படங்கன்னா "ஜிந்தகி, மட்லப், தில், டீக்கே" இந்த வார்த்தைகளைக் கலந்து கட்டி அனுராதா ஆட்டங்களில் வரும் டிஸ்கோ லைட்டு போட்ட செட்டுகளை இப்பவும் வைச்சுக்கிட்டு இருக்கற வளராத, வளர விரும்பாத ஒரு திரைத்துறை அப்படிங்கறது என் எண்ணமா இருந்தது. இது உண்மையா இருந்தாலும் இந்த என் ஸ்டேட்மெண்டு அபத்தத்தின் உச்சம் என்பதை அமிர்கான், சல்மான்கானுன்னு கெறங்கிக்கிடந்த எங்கூடப்படிச்சவளுங்க "எனக்கு இந்தி தெரியாது"ங்கற ஒரே ஒரு காரணத்துக்காக ஒதுக்கிட்டுப் போயிருவாளுங்க! உண்மைதானே? மொழியே தெரியாம விமர்சனம் செஞ்சா அது நம்ப புரிதலுக்கான அளவு என்பதுமட்டுமே என்றில்லாமல் வேறென்ன?

அதுக்கப்பறமா நிறைய இந்தி படங்க பார்த்தாலும் எதுவும் மனசுல ஒட்டலை! இதுக்கு ஒரே காரணம் எனக்கு இந்தி தெரியாததால் இருக்கலாம்! இருந்தாலும் இன்னைக்கு வரைக்கு இரண்டு இந்தி படங்களை எப்ப வாய்ப்புக்கெடைச்சாலும் சளைக்காம பார்க்கறேன். இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் ஒன்னு புதுசா புரியும். கதை, திரைக்கதை, இசை அனைத்திலும் அட்டகாசமான உணர்வுபூர்வமான படங்கள். டயலாக் பத்தி நான் சொல்லக்கூடாது! :) இவைகள் எனக்குப்பிடித்த இரண்டு படங்களைப்பற்றி சிலாகிப்பே தவிர விமரிசனமல்ல!

Hum Dil De Chuke Sanam

ajay devgan,aishwaryaஇந்த படம் வந்தப்ப நான் தென்னாப்ரிக்காவுல எப்படி அவங்க கலாச்சாரத்தோட நாம இனையறதுன்னு அதீத ஆராய்ச்சில இருந்த நேரம். நான் இந்திப்படம்னா அதுவும் சல்மான்கான் படம்னா ஒரு மைல்தூரம் தள்ளி நிப்பேன்னு தெரிஞ்சிருந்தும் என் ஃப்ரண்டு "அருமையான படம்டா!"ன்னு வம்படியா இழுத்துக்கிட்டு போய் பார்க்கவைச்ச படம். அப்பத்தான் கல்யாணம் என்பதைப்பற்றிய வயசும் சிந்தனைகளும் வந்திருந்த காலம். படம் ஆரம்பிக்கறதுல இருந்து நக்கல் பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். ஆரம்பமும் டிபிகல் இந்திப்படம் மாதிரிதான் இருந்தது. போகப்போக வெகு இயல்பாக இருந்த சல்மான் - ஐஸ் காதல் "சரி! கொஞ்சம் வாய மூடிக்கிட்டு பார்ப்பமே"ன்னு தோண வைச்சது. இந்த மொத பார்ட்டே பாட்டு, டான்சு, உடை, காமெரா, செட்டிங்னு ஒரு நல்ல காதல் கதை பார்த்த திருப்தி! ( ரொம்பப்பிடிச்ச ஐஸ்சின் expression: சல்மானின் அபானவாயு வெளியேற்றத்தை விவரிக்கும் காட்சி :) )

அப்பறம் வந்தாரையா அஜய் தேவ்கன்! இசை நடனமே வாழ்க்கையா இருக்கற ஒரு பொண்ணைக் கட்டிக்கறதுக்காக பெண்பார்க்கப்போன எடத்துல அபஸ்வரமான குரலில் பாடிக்காட்டறதுல இருந்து தொடங்குது திரையில் அவரது ஆளுமை. அதுக்கப்பறம் சல்மான் ஐஸ் எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடுவாரு. அவரோட கேரக்டர் பலமே "இன்னொருத்தனை லவ் செய்யறயா? சரி நான் ஒதுங்கிக்கறேன். நீ எங்கிருந்தாலும் வாழ்க"ன்னு இல்லாம "உன்னை அவங்கூட  சேர்த்து வைக்கறேன். ஆனா உன்மீதான எனது காதலையும் அன்பையும் மறைக்க விரும்பவில்லை. அது பொய்யில்லை!" எனும்படியான பாத்திரம். மனுசன் ஓவ்வொரு அசைவிலும் பிரிச்சு மேஞ்சிருப்பாரு. வாழ்க்கைல விருப்பப்பட்டது கிடைக்கலைன்னா, கிடைச்சதை மனசார ஏத்துக்கனுங்க கருத்தை அழுத்தம் திருத்தமா சொல்லற படம். கடைசி வரைக்கும் எங்களால மனைவிமீது இப்படி பொஸசிவ்னெஸ் இல்லாம இருக்கமுடியுமான்னு ஏத்துக்கவே முடியலை. படம் முடிஞ்சதுக்கப்பறம் மனசை போட்டுக்கொடைய தம்மேல தம்மா போட்டுக்கிட்டு பொங்கல் போட்டு மாஞ்சுபோனோம்.

செயற்கைத்தனமில்லாத ரொம்ப இயல்பான படம் அப்படின்னெல்லாம் சொல்லமாட்டேன்! எல்லாமே திகட்டாமல் கலந்திருப்பதுதான் இப்படத்தோட சிறப்பு.

இசைதான் படத்தோட இன்னொரு பலம்னும் சொல்லலாம். எல்லா பாட்டுமே அருமையா இருந்தாலும் "தடப் தடப்" பாட்டு என்னைக்கு கேட்டாலும் பாட்டு முடியறப்ப கண்ணுல தண்ணி நிச்சயம்! :) (இன்னும் புரிஞ்சு கேட்டா எப்படி இருக்குமோ?! )

Dil Chahta Hai

DilChataHaiஇந்திப்பட உலகில் இன்னொரு மாஸ்டர்பீஸ்! இளவயசுல நண்பர்களே வாழ்க்கைன்னு சுத்துன என்ன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம்  இந்த படம் பார்த்தா கண்டிப்பா உணர்ச்சி வசப்படாம இருக்கமுடியாது. பசங்கன்னா ஒவ்வொன்னும் ஒவ்வொரு தெசையில இருப்பானுக்க. ஆனா, அனைவரைக்கும் ஒரு கேங்கா இணைக்கறது இதுதான் அப்படின்னு ஒரு விசயத்த மட்டும் சொல்லிவிட முடியாது. முரண்பட்ட ரசனைகள், நோக்கங்கள், வாழ்க்கைப் பிண்ணனிகள் உள்ள மூன்று நண்பர்களது கதை. இதைவிட இயல்பாக நுணுக்கமாக நட்பை படம்பிடிக்க முடியுமான்னு தெரியலை.

சண்டை போட்டுக்காத நண்பர்கள் உண்டா? அப்பறம் மனசு கேக்காம எப்படிடா திரும்ப சேர்ந்துக்கறது தெரியாம தவிச்ச அனுபவம் இல்லாத நண்பர்கள் உண்டா? காதல் உட்பட அந்த உணர்வுகளையுமே சீரியசாக எடுத்துக்காத அமீர். பார்க்கற பொண்ணுக எல்லாத்தையும் காதலிக்கற "பிடக்கன்"னா செய்ப் அலிகான். வயசுக்கு மீறின மெச்சூரிட்டியோட அக்சய் கன்னா. கலவையான ரசனைகள் கொண்ட நட்புவட்டம்! ரெண்டுங்கெட்டான் வயசுல இருந்து வாழ்க்கையின் போக்குக்கேற்ப அவரவர் நகர்ந்து பொறுப்பாக செட்டிலாவதுவரை சீனுக்கு சீன் நம் நட்புவட்டத்தை ஒப்புநோக்காமல் இந்த படத்தை பார்க்க முடியாது. 

படத்தோட கதைக்கருவை Boys 2 Men அப்படின்னு ரெண்டே வார்த்தைல சொல்லிடலாம். ஆனால் அந்தப் பருவத்திற்குள் அவர்கள் அடையும் மாற்றங்கள் வெகு இயல்பாக காட்டப்பட்டிருக்கும். இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்த டைரக்டரு படம்னா கண்ணை மூடிக்கிட்டு அவர் அடுத்த படங்களை பார்க்கப்போகலாம். (வேற  என்ன படங்க அவரோடது வந்திருக்கு? ) ஹீரோயிசம் இல்லாத படம். அமீர்கான் அடிவாங்கறதெல்லாம் எந்தவித பில்டப்பும் இல்லாம இருக்கும். கடைசில கூட அமிர் "கெட்டவனை" மொத சீனுல வாங்குன அடியை திருப்பிக் கொடுக்கறதுகூட ஹீரோயிசமா தோன்றாது.

மனிதரது அனைத்து உணர்வுகளையும் டேக் இட் ஈசியா எடுத்துக்கற அமீர்கான் காதல்வயப்படுவதும், காதல் படுத்தும் பாடுகளை தாங்கமுடியாம தவித்து அழுவதும் வெகு இயல்பு. "Tanhayee" பாட்டுல அமீரோட நடிப்பைப் பார்த்துட்டு மக்கா நம்ப பழைய காதல் வலிகள் நினைவுக்கு வரலைன்னா நம் காதல்ல ஏதாவது கோளாருன்னு அர்த்தம்! கடைசியா ஆஸ்பிடல்ல வாழ்க்கைல அடிவாங்கி அனுபவப்பட்ட மெச்சூர்டு மக்களா மூனு பேரு சந்திக்க சீன் நெஜமாகவே கலங்க வைச்சிரும். மக்கா! எங்கடா இருக்கீங்க!?!

காலப்போக்கில் இழந்துவிட்ட நட்புவட்டங்களை மீண்டும் மனதுக்குள் உயிர்கொடுத்து உலவவிட்டு திரும்பக்கிடைக்க அரிதான அந்தக்காலத்து இன்பங்களை அனுபவிக்க வேண்டுமானால் இந்த படத்தை ஒருமுறை பாருங்கப்பு !

Copyright © 2005 Tamiloviam.com - Authors