தமிழோவியம்
வானவில் : சுவர்கமா ? நரகமா ?
-

"சுவர்கம்" என்பது என்ன? "நரகம்" என்பது என்ன? நாம் புண்ணிய காரியங்கள் செய்தால் சுவர்கத்திற்குப் போகிறோம்; அங்கே இன்பம் ததும்பிக் கொண்டிருக்கிறது. பாபகாரியங்கள் செய்தால் நரகத்திற்குப் போகிறோம்; அங்கே துன்பம் நிறைந்திருக்கிறது.

இப்படித்தான் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் சொர்கமும் நரகமும் நம் கையில் தான் இருக்கிறது. நாம் பிறர் நலனுக்காகச் செய்யும் காரியங்களே நமக்கு இன்பத்தைத் தருகிறது. நாம் சுயநலத்தால் செய்யும் காரியங்களே நமக்குத் துன்பத்தைத் தருகிறது. இவைகளே சுவர்கமும் நரகமும் ஆகும்.

சுவர்கம் எப்படி இருக்கிறது என்பதையும், நரகம் எப்படி இருக்கிறது என்பதையும் நேரில் பார்க்க சில முனிவர்கள் விரும்பினார்கள். கடவுள் அவர்களை இரண்டு இடத்திற்கும் போய்வர வழி செய்தார். முனிவர்கள் முதலில் நரகத்திற்குப் போனார்கள். நரகம் என்பது அசுத்தம் மிகுந்த, மிகவும் அவலமான ஒரு இடமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.  நரகத்தில் எல்லா செளகரியங்களும் இருந்தன. எல்லாம் தாராளமாகக் கிடைத்தன. எல்லா வளங்களும் நிறைந்த, இவ்வளவு செளகரியமான இடத்தில் இருந்து கொண்டு ஏன் மக்கள் துன்பப்படுகிறார்கள்? என்று அவர்களுக்குப் புரியவில்லை. அங்கே இருந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.

இடைவேளை வந்தது. அது உணவு அருந்தும் நேரம். எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். அவர்களுக்கு உணவு கிடைக்காமல் சிரமமப்படப்போகிற¡ர்கள் என்று முனிவர்கள் எதிர்பாத்திருந்தார்கள். ஆனால் அப்படி இல்லை! விதவிதமான, ருசியான உணவுப்பொருட்கள் மேஜைமீது வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த முனிவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! ' இந்த நரகத்திற்கு என்ன குறைச்சல்? ' என்று வியந்தபடி அங்கே வந்து அமர்ந்தவர்களைக் கவனித்தார்கள். எல்லோரும் எலும்பும், தோலுமாக இருந்தார்கள். பசியினால் வாடிக் கோபம் மிகுந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.  ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு, திட்டியபடி அமர்ந்திருந்தார்கள். வெறுப்பும், பொறாமையும் அவர்கள் முகத்தில் மண்டிக்கிடந்தது.

முனிவர்களுக்கு இதன் காரணம் புரியவில்லை. கிடைத்ததை அனுபவிக்கக் கொடுத்துவைக்காத பாவிகளாக இருக்கிறார்களே என்று எண்ணிக்கொண்டார்கள். அப்போது கடவுள் அங்கே வந்தார். " இறைவா! இவர்களுக்கு வேண்டியது எல்லாம் இங்கே கிடைக்கிறது. ஏராளமான உணவுப் பொருட்களும் இருக்கின்றன. இருந்தாலும் இவர்கள் அவதிப்படுகிறார்கள். ஏன்? " என்று கேட்டார்கள்.

"அவர்களுடைய கைகளைக் கவனியுங்கள்! " என்றார் இறைவன். முனிவர்கள் உற்றுப் பார்த்தார்கள். அவர்களுடைய புஜங்களாஇயும், கைகளையும் இணைக்கும் மூட்டையே காணோம். அதனால் அவர்களால் கைகளை நீட்டி, மடக்க முடியாமல் இருந்தது. எதிரே இருந்த உணவை அவர்களால் கையை நீட்டி, எடுத்துச் சாப்பிட முடியவில்லை.

எல்லாவற்றையும் கொடுத்து அவற்றின் பலனை அனுபவிக்க முடியாமல் செய்துவிட்டாரே கடவுள்? இதைவிட எதையும் கொடுக்காமல் விட்டிருந்தாலே பரவாயில்லை. இது கொடிய நரகவேதனைதான்! " என்று எண்ணிக்கொண்டே சுவர்கத்தைப் பார்க்கப் புறப்பட்டுச்சென்றார்கள் அந்த முனிவர்கள். சுவர்கமும் பார்ப்பதற்கு நரகத்தைப் போலவே இருந்தது. அங்கேயும் எல்லா வளங்களும் பெருகி இருந்தன. நினைத்த மாத்திரத்திலேயே அனைத்தும் கிடைத்தன. அங்கிருந்தவர்கள் அவை அனைத்தையும் அனுபவிப்பவர்கள் போல இருந்தனர். "சுவர்கத்திற்கும், நரகத்திற்கும் அப்படி என்ன வித்தியாசம்? ஒன்றுமே புரியவில்லை!!" என்று எண்ணிக்கொண்டார்கள் அந்த முனிவர்கள்.

இடைவேளை வந்தது. எல்லோரும் சாப்பிட வந்து அமர்ந்தார்கள். இங்கேயும் மேஜைமீது ஏராளமான உணவு வகைகள் நிறைந்து இருந்தன. அவற்றின் மணம் அந்த இடத்தை நிறைத்தது. முனிவர்கள் அங்கே வந்து அமர்ந்தவர்களைப் பார்த்தார்கள். அனைவருமே நன்றாக உணவருந்தி, செளக்கியமாக இருப்பவர்களைப் போலத் தோன்றினார்கள். முனிவர்கள் அவர்களுடைய கைகளை கூர்ந்து கவனித்தார்கள். அவர்களுக்கும் புஜங்களை கைகளுடன் இணைக்கும் மூட்டு இல்லை! அவர்களாலும் நீட்டிய கைகளை மடக்கமுடியாது!

அப்போது கடவுள் அங்கே வந்தார். அவரிடம் முனிவர்கள், "சுவாமி! சுவர்கத்தில் இருப்பவர்களையும் இப்படிச் செய்துவிட்டீர்களே? இவர்களுக்கும் அதே பரிதாப நிலைதானா? இது நியாயமா? " என்று கேட்டார்கள். கடவுள் சிரித்துக்கொண்டே, " கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். உங்களுக்கு எல்லாம் புரியும்!" என்றார்.

எல்லாருமே எழுந்தார்கள். உணவு வகைகளை எடுத்து மற்றவர்கள் வாயில் ஊட்டினார்கள். மற்றவர்கள் அருந்துவதற்கு எடுத்துக் கொடுத்தார்கள். தமக்கென்று யாருமே எதையும் எடுத்துக்கொள்ளவில்லை! கையை மடக்க முயற்சி செய்து யாரும் தன் வாயில் எதையும் போட்டுக்கொள்ளவில்லை! ஆனால் ஒருவருக்கொருவர் இப்படிக் கொடுத்துக்கொண்டபோது எல்லாருக்குமே எல்லாம் கிடைத்தது. எல்லோருமே அங்கே குவிந்து கிடந்த பொருட்களை நன்றாக அனுபவிக்க முடிந்தது!

கடவுள் சிரித்துக்கொண்டே, "இப்போது புரிகிறதா? அங்கேயும் இங்கேயும் ஒரே நிலைதான். ஆனால் அங்கே உள்ளவர்கள் தங்களுக்காகவே எல்லாவற்றையும் தேடுகிறார்கள். அவை கிடைக்காததால் வருந்துகிறார்கள். துன்பத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் இங்கே இருப்பவர்களோ, பிறருக்குக் கொடுக்கவே எல்லாவற்றையும் தேடி எடுக்கிறார்கள். அதனால் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கிறது. மனக்குறைவின்றி அனைவரும் சுகமாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்! சுவர்கமும் நரகமும் நம் கையில் தான் இருக்கின்றன. பிறருக்காக நாம் வாழும்போது நமக்கு சுவர்கம் போன்ற இன்ப நிலை கிடைக்கிறது. நமக்காக நாம் வாழ முற்படும்போது நரகம் போன்ற துன்ப நிலை கிடைக்கிறது. சுயநலமில்லாத, பூரணமான அன்பே சுவர்கத்தின் திறவுகோல்!!" என்று சொன்னார் பகவான்.

"சுவாமி! எல்லாம் புரிந்தது. " என்று முனிவர்கள் கடவுளை வணங்கிவிட்டுச் சென்றார்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors