தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : சோழனின் வெண்கொற்றக்குடை
- என். சொக்கன்

பாடல் 23

போர்கள் அனைத்திலும் வெற்றி காணும் சோழ மன்னனின் ஆட்சி, இந்த உலகத்துக்கே பாதுகாப்பாக இருக்கிறது ! அந்தச் சோழ அரசின் விரிவும், மக்களுக்கு அது தரும் பாதுகாப்பு உணர்வும், இந்தப் பாடலில் விவரிக்கப்படுகிறது !

மழை வரும்போது, ஒரு பெரிய குடையின்கீழே மக்கள் அச்சமின்றி இருப்பதுபோல, சோழனின் வெண்கொற்றக்குடை, இந்த உலகத்தைப் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.

அந்தக் குடையின் கைப்பிடிக் காம்பு எது தெரியுமா ? வானத்தை முட்டுமளவு வளர்ந்து நிற்கிற 'மந்தரகிரி' எனப்படும் மந்தர மலைதான் !

குடையின் விரிந்த ஓலைப்பகுதியாக, நீல மணிபோன்ற ஆகாயம் திகழ்கிறது !

வானத்தில் மின்னும் வெண்ணிலவு, அந்தக் குடையில் வைக்கப்பட்டிருக்கும் பொட்டாகத் தெரிகிறது.

இப்படி, மந்தர மலையைக் கைப்பிடியாகவும், வானத்தை ஓலையாகவும், வெண்ணிலவைப் பொட்டாகவும் கொண்ட சோழனின் வெண்கொற்றக் குடை, கடலால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகத்தின் உயிர்களுக்கெல்லாம் நிழல் தந்து, அவர்களைப் பாதுகாக்கிறது !

O

மந்தரம் காம்பா மணிவிசும்(பு) ஓலையாத்
திங்கள் அதற்கோர் திலகமா, எங்கணும்
முற்றுநீர் வையம் முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை.

(காம்பா - கைப்பிடியாக
விசும்பு - வானம்
ஓலையா - விரிந்த பரப்பாக
எங்கணும் - எல்லா இடங்களிலும்
முற்று - முற்றுகையிடுகிற / சூழ்ந்துகொள்ளுகிற
நிழற்றுமே - நிழல் தருமே
கொற்றம் - வெற்றி / வீரம் / வலிமை)பாடல் 24


சோழ நாட்டில், எப்போதும்போல் நல்ல விளைச்சல் !

வயல்களெங்கும் செழித்து வளர்ந்துள்ள தானியங்களை, உழவர்கள் அறுவடை செய்து, களத்தில் குன்றுபோல் குவித்திருக்கிறார்கள். இரவுப்பொழுதில், காவல் உழவர்கள் அதை பத்திரமாய்ப் பாதுகாக்கிறார்கள்.

மறுநாள் காலை, மீண்டும் வேலை துவங்கவேண்டிய நேரம், ஆகவே அந்தக் காவல் உழவர்கள், களத்தில் உள்ள வைக்கோல் போரின்மீது ஏறி, மற்ற உழவர்களை அழைக்கும்படி ஆரவாரமாய்ச் சப்தம் எழுப்புகிறார்கள் !

அதிகாலையில் எழுகின்ற அந்த மங்கல ஒலியைக் கேட்கும்போது, புலவருக்கு, வேறொரு 'ஒலி' நினைவுக்கு வருகிறது !

சோழ அரசன் கிள்ளி, போர்க்களத்தில், எதிரிகளோடு சண்டையிடும்போது, பகைவர்களைக் கொல்லுகின்ற அவனது பட்டத்து யானையின்மீது அமர்ந்துகொண்டு, எமனையே கூவி அழைப்பானாம் !

எமனை ஏன் அழைக்கவேண்டும் ?

காரணம் இருக்கிறது., போரில் சோழனால் கொன்று குவிக்கப்படுகிற எதிரி நாட்டு வீரர்களின் உயிர்களைக் கவர்ந்து செல்வதற்காக, எமனை அந்தப் போர்க்களத்துக்கு அழைப்பானாம் அவன் !

உழவர்கள் எழுப்புகிற இந்தச் சப்தம், போர்க்களத்தில் சோழன் செய்கின்ற அந்த வீர ஒலியை நினைவுபடுத்துவதாக ஒப்பிடுகிறது இந்தப் பாடல் !

O

காவல் உழவர் களத்(து)அகத்துப் போர்ஏறி
நாவலோஓ ! என்றிசைக்கும் நாளோதை காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு.

(களத்து அகத்து - களத்தில் இருந்து
போர் - வைக்கோல் போர்
நாவல் - உழவர்கள் மகிழ்ச்சியால் எழுப்பும் ஒலி
ஓதை - ஆரவாரம்
கொல்யானை - (பகைவர்களைக்) கொல்லுகின்ற யானை
கூற்று - எமன்
இசைத்தால்போல் - சப்தமிடுவதுபோல்
கோக் கிள்ளி - (சோழ) அரசன் கிள்ளி)

Copyright © 2005 Tamiloviam.com - Authors