தமிழோவியம்
பெண்ணோவியம் : சமையல்
- மீனா

அவல் கிச்சடி

தேவையானவை

கெட்டி அவல் - அரை கப்
பயறு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
புதினா - 10 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அவலை அரை மணி நேரம் நீரில் ஊற வையுங்கள். பயறை இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் ஊறவைத்த அவல், மஞ்சள்பொடி, 1 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் வேக வையுங்கள்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய், மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கி, சோம்பு, சீரகத்தைத் தாளியுங்கள். அதனுடன் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் அவல், பயறு கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள். அவல் கிச்சடி ரெடி.


ஸ்பினாச் சாண்ட்விச்
 
தேவையானவை

உப்பு ப்ரெட் ஸ்லைஸ் - 6
பசலை கீரை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
பனீர் - 100 கிராம்
பூண்டு - 4 பல்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கீரையை பொடியாக நறுக்குங்கள். பனீரை உதிர்த்து வையுங்கள். பூண்டைத் தோல் நீக்கி, நசுக்கி வையுங்கள். மிளகாயை நறுக்குங்கள். வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பூண்டைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மிளகாயைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதனுடன் கீரை, உப்பு சேர்த்து வதக்கி மூடி வையுங்கள். கீரை நன்றாக வெந்து நீர் வற்றியதும் பனீர் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

ப்ரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களில் இருக்கும் பிரவுன் நிறப் பகுதிகளை நீக்கிவிட்டு, ஒவ்வொரு ஸ்லைஸின் நடுவிலும் சிறிதளவு கீரைக் கலவையை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடுங்கள். கலவை வெளியேறாதபடி பிரெட்டை நன்றாக அழுத்தி, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுங்கள். அல்லது சாண்ட்விச் மேக்கரிலும் இதைச் செய்யலாம்.

தக்காளி சாஸ¤டன் பரிமாற, கீரையைத் தொட மறுக்கும் குழந்தைகள்கூட ஆர்வத்துடன் சாப்பிடும் ஐட்டம் இது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors