தமிழோவியம்
உங்க. சில புதிர்கள் : தூக்கம்
- முத்துராமன்

நீங்க எப்பவாவது தூங்குறவங்களை கவனிச்சு பாத்திருக்கீங்களா? அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் உங்களுக்குப் பொறாமையாயிருக்கா? ராத்திரியெல்லாம் தூக்கம் வராமல் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு, கொஞ்சம் போரடித்தால் fTV பார்த்துக் கொண்டே தூங்கிப் போய் கனவுகளில் நீள நீளமான காரிடார்களில் நடந்து... கனவில் மட்டுமல்லாமல் தூக்கத்திலேயே நடந்து பக்கத்து ரூம் கதவைத் தட்டியிருக்கிறீர்களா?

இது ஒரு வகையில் உறக்கத்தினால் ஏற்படும் பிரச்னைதான். இதே போல் கனவுகளால் திடுக்கிட்டு எழுந்திருப்பது. தொடர்ந்து அச்சுறுத்தும் கனவுகள் வந்து தூக்கத்தில் உளறுவது போன்றவையும் இதே வகை பிரச்னைதான். இதற்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்வதுதான் சிறந்த வழி.

சரி, தூங்குறவங்களை கவனிச்சுப் பார்த்தா இன்னொரு விஷயம் தெரியும். அவர்கள் தூங்கும்போது கூட அவர்களின் விழி அசைவது தெரியும். இதை Rapid Eye Movement அதாவது REM என்று சொல்லுவார்கள். தமிழில் சொல்லப்போனால் விரைவான விழியசைவு கொண்ட தூக்கம். இதே போல Non REM என்றும் உண்டு. விழியசைவற்ற தூக்க நிலை.

முதலில் சொன்ன தூக்கத்தில் நடக்கும் நிலை Non REM நிலையில்தான் ஏற்படுகிறது. இந்த தூக்கத்தில் நடக்கும் நிலை மனத்தின் பாதிப்புகளால் ஏற்படுவதுதான். ஆனால், இந்த REM மற்றும் Non REM என்ற இரண்டு நிலைகளிலும் கனவுகள் வருவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. REM நிலையில் தோன்றும் கனவுகள் தெளிவில்லாமலும், Non REM நிலையில் காணும் கனவுகள் தெளிவாகப் புரியும்படியும் இருக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு.

"நேத்தெல்லாம் தூக்கமே வரலை", "சரியா தூங்க முடியறதே இல்லை" என்று உங்களிடம் யாராவது புலம்பியிருப்பார்கள். எப்போதாவது தூக்கம் வராமல் போனால் பரவாயில்லை. ஆனால், இதே நிலை தொடருமானால் நிச்சயம் டாக்டர்தான் சொல்ல வேண்டும்.

இப்படி சரியாக தூக்கம் வராமல் போவதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கமுடியும். ஒன்று உடலில் ஏற்படும் நோய்கள், பாதிப்புகள். இரண்டாவதாக, மனதில் ஏற்படும் சிக்கல்கள்.

சந்தோஷம், தூக்கம், நிறைவான உணவு - இதெல்லாம்தான் நம்முடைய மனத்தின் வெளிப்படையான தேவைகள். இந்த மூன்றில் ஒரே ஒரு விஷயம் குறைந்தாலும் மனநலம் பாதிக்கப்படும். இந்த மூன்றிலும் முக்கியமான தேவை தூக்கம்தான். தூக்கம்தான் மனதுக்கு இதமளிக்கமுடியும். தூக்கமும் அமைதியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நல்ல தூக்கம் அமைதியைக் கொடுக்கும். அமைதியான சூழலில்தான் தெளிவாக சிந்திக்க முடியும். பதட்டமும் இறுக்கமும் நிறைந்த சூழல் உறக்கத்தையும் தராது, தெளிவையும் தராது. உறக்கமும், அமைதியும்தான் மனநலத்தின் அஸ்திவாரங்கள்.

ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அளவும், தூங்கும் நேரமும் மாறுபடும். நல்லதூக்கத்துக்குப் பிறகு கிடைக்கும் உற்சாகம்தான் மிகப் பெரிய சந்தோஷமாக இருக்கமுடியும். இந்த சந்தோஷமும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

சரி, "சரியாவே தூங்க முடியறதில்லை" என்று சொன்னார்களே, அவர்களுடைய தூக்கத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. படுக்கைக்கு வந்தவுடன் தூக்கம் வராது, ரொம்ப நேரம் கழித்துத்தான் தூக்கம் வரும்.
2. தூங்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் கலைந்து போய்விடும். அதன் பிறகு தூங்கவே முடியாது.
3. தூக்கத்தின் நடுவில் அடிக்கடி விழிப்பு வந்து நீண்ட நேரம் தூங்க முடியாமல் போவது.

இப்படி தூக்கம் வராமல் இருக்கும்போது ஒரு சில விஷயங்களை செய்து பார்க்கலாம்.

1. இரவில் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.
2. பொழுது போகவில்லை என்று ஏதாவது புதுப்படத்தைத் திருட்டு விசிடி போட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். கம்ப்யூட்டரில் கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது. FM ரேடியோவில் இதற்காகவே "தேன் உண்ணும் வண்டு, மாமலரைக் கண்டு" என்று அந்த காலத்துப் பாடல்களைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிப் போகலாம். அல்லது மெல்லிய சங்கீதத்தைக் கேட்பதை வாடிக்கையாகக் கொள்ளலாம்.
3. ஒழுங்கான உணவுப் பழக்கமும் சரியான நேரங்களில் சாப்பிடுவதும் அளவான சாப்பாடும் பழகிக் கொள்ளலாம்.
4. தூக்கம் வரும்போது மட்டுமே படுக்கைக்குப் போவதைப் பழக்கமாகிக் கொள்ளலாம்.

அளவான தூக்கமும் தூக்கத்தினால் கிடைத்த அமைதியும் அமைதியினால் பெற்ற தெளிவும் உங்களுக்குள் இருக்கும் சில புதிர்களை விடுவிக்கும். எல்லாம் நன்றாய் அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
முத்துராமன்

Copyright © 2005 Tamiloviam.com - Authors