தமிழோவியம்
நையாண்டி : 'யார் இந்த வள்ளுவன்?' - திருவள்ளுவர் மீது ஒரு அவதூறு
- சிறில் அலெக்ஸ்

[மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தமிழ் எழுத்தாளர்கள் மாறி மாறி பொழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பொழிதல்களில் தெரியும் இலக்கியத் தன்மையும் சுவாரஸ்யமும் எந்த காப்பியத்திலும் இல்லை. வசை, அவதூறு என்பதை ஒரு இலக்கிய வகையாகவே வருங்காலத்தில் கருதக் கூடும். அவ்வகைக்கு நோபல் பரிசொன்றை தந்தார்களென்றால் தமிழன் நோபல் வாங்குவது உறுதி. வள்ளுவர் காலத்தில் திருவள்ளுவரை ஒருத்தர் சமகால முறையில் 'விமர்சித்திருந்தால்' எப்படி இருந்திருக்கும் எனும் அதீத கற்பனைதான் இது. ]


சமகால இலக்கியத்தில் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தை எனக்கு தினமும் வந்து சேரும் ஓலைகள் வழியாகவே அறிந்து கொள்ளலாம். சிலர் கல்லில் பொறித்தும் அனுப்புகிறார்கள். சிலர் உலோகத் தகடுகளில் பதிக்கிறார்கள். திரும்பத் திரும்ப நான் சொல்வது ஒன்றுதான் என் பெயர் தங்கத் தகட்டிலே மட்டுமே பதிக்கப்படவேண்டியது. மற்ற பொருட்களில் பதிப்பவர்கள் என்னை அவமதிக்கிறார்கள். குறிப்பாக காய்ந்த வாழை இலையில் கரித்துண்டைக் கொண்டு எழுதி அனுப்பிய விஷமிக்கு என் கண்டனங்கள்.

'தயிர்மை' ஓலை இதழில் தற்போது குறள் எனும் தொடர் ஒன்றை யாரோ வள்ளுவன் எனும் பெயரில் எழுதி வருகிறார்களே. படித்தீர்களா? என என் நண்பர் பதினொண்கீழ்கணக்குப்பிள்ளை கேட்டுவைக்க அந்த சனியனை படிக்க வேண்டியாகி விட்டது. இப்போதே சொல்லி விடுகிறேன். இதைப் படித்தாயா அதைப் படித்தாயா என என்னைக் கேட்காதீர்கள். என் நேரம் பொன்னானது. வள்ளுவனைப் படித்ததும் எனக்கு கிர்ரென்றாகிவிட்டது. தமிழ் இலக்கியம் மிகவும் வருந்தத்தக்க காலத்தில் நிற்கிறது. இதை மீட்டெடுக்க நானாவது இருக்கிறேனே எனும் ஆறுதலைத் தவிர வேறொரு ஆறுதலும் எனக்கில்லை.

முதலில் வள்ளுவன் என்பவர் யார்? சிலர் ஐயன் என்கிறார்கள், சிலர் நைனார் என்கிறார்கள், சொந்தப் பெயரில் எழுதாத எழுத்தாளனுக்கு எதற்கையா எழுத்து? அந்த ஓலைச் சுவடியையும் எழுத்தாணியைம் ஒரு ஏழைக்குத் தந்தால் என் பெயரை எழுதி சுவற்றில் மாட்டிக்கொள்ளவாவது உதவும். எங்கே நான் நடத்தும் கவிதை கலந்துரையாடல்களுக்கு அழைப்பு வந்துவிடுமோ என பயந்து தன் அடையாளத்தை மறைக்கிறார் என்பதே என் எண்ணம். 'வள்ளுவா! வா! வந்து தா! பா!' என சவால் விடுக்கிறேன்.

நான் கேட்கிறேன் இந்த வள்ளுவனை! கிரேக்க தத்துவ ஞானிகளும், சீனத்து சிந்தனையாளர்களும் ஏன் நம் நாட்டின் வேதங்களும் பக்கம் பக்கமாகச் சொல்லும் வாழ்வின் சூத்திரங்களை பத்தே குறள்களில் சொல்லும் வள்ளுவனுக்கு இருப்பது கவித்திமிர் இல்லாமல் வேறென்ன? சாக்ரட்டீசை படித்து முடிக்காமல் திணறிக் கொண்டிருக்கிறேன் அதற்குள் அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் வந்து சேர்ந்துவிட்டன. இவற்றை நான் படித்து முடிக்க இன்னும் பல ஆண்டுகளாகும் (ஏனென்றால் அவை கிரேக்க மொழியிலுள்ளன). இவரென்னவென்றால் பத்தே குறள்களில் அதுவும் ஒன்றரை வரிகளில் எல்லாவற்யும் சொல்லிவிட முடியும் எனக் கிளம்பியுள்ளார். என்ன ஒரு தலைக்கனம். நாலடியார்கூட நாலடி சொல்கிறார். ஒன்றரை அடிக் கணக்கு என்ன? ஒரு மூலையிலிருந்து மனப்பாடம் செய்யத்தான் இது உதவுமே தவிர இதன் கவிப்பயன் வேறொன்றுமில்லை? வடக்கே வால்மிகி பக்கம் பக்கமாய் காப்பியம் எழுதி சொல்ல முடியாதவற்றை ஒன்றரையடியில் சொல்ல முயலும் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி நகைக்கிறேன்.

இதில் 'அ'வில் ஆரம்பித்து 'ன்'ல் முடிக்கிறாராம். இதெல்லாம் சுய விளம்பரத்துக்கான முயற்சியேயன்றி இதனால் தமிழுக்கு என்ன பயன் என்பதை சமகால இலக்கிய வாசகர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழ் எழுத்துக்கள் 'அ'வில் துவங்கி 'ன்'ல் முடியும் என்பதை இவர் எழுதும் குறளைப் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஆயிரம் ஆயிரமாகக்குறளை எழுதித் தள்ளும் இந்த வள்ளுவர் அடிப்படையில் சொல்லவருவது அடிப்படையிலும் அடிப்படையல்லவா ?

'ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்'. இதைச் சொல்ல இவர் யார்? தன் வாழ் நாளில் ஒரு வயல் வரப்பில் கால் வைத்திருப்பாரா இந்த வள்ளுவர்? இவர் எங்கே உழுது என்ன பயிரிட்டார்? நான் கேட்கிறேன் உழவர்கள் ஏரினுழார் என்றால் வேறு எதிலையா உழ முடியும்? திண்ணையில் ஓலையும் ஆணியுமாக உட்கார்ந்துகொண்டு முகத்தில் முடி வளர்ந்து எரிச்சலூட்டுவதையும் பாராமல் மோட்டை பார்த்துக் கொண்டு மனைவி சொல்லும் தலைப்புக்கெல்லாம் பத்து பாடல்களை எழுதித் தள்ளும் இந்த வள்ளுவர் யாரென நமக்குத் தெரியாதா? இவர் யார் என்பதற்கும் இவர் எழுத்தை எங்கிருந்து எடுக்கிறார் என்பதற்கும் என்னிடத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளியிட்டுத்தான் நான் என் பெயரை இலக்கியத்தின் அழியா கல்வெட்டுக்களில் பொறிக்க வேண்டியதில்லை எனும் ஒரே காரணத்துக்காக விட்டுவைக்கிறேன்.

இந்த வள்ளுவருக்கு என்னைப்போல படித்தவர்களையும் இலக்கியவாதிகளையும் கண்டாலே பிடிக்காது என்பதற்கு 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்பதே சான்று. எவ்வளவு சூசுகமாக என்னைப்போன்றவர்களை அறிவிலாதவர்கள் எனச் சொல்லிவிடுகிறார் பாருங்கள். இவ்வளவுதான் இங்கே எழுத்தாளனுக்கு மதிப்பு.

இவரின் சிறுபிள்ளைத் தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு 'அகழவாரைத் தாங்கும் நிலம்போல நம்மை யாராவது இகழ்வார்களா?' நிலம் யாரை இகழ்ந்தது? இவர் எழுதுகிறார் 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' என்று. வேடிக்கையே வள்ளுவருக்கு வாடிக்கையாகிவிட்டது. இதே குறளை தம்மை இகழ்வாரைப் பொறுப்பவர்களின் தலை அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல, களிமண்ணாக உள்ளது என்றும் பொருள் கொள்ளலாமல்லவா? இனிவரும் காலத்திலே இந்தக் குறுகத் தரித்த குறள்களுக்கெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து தெளிவுரை எழுதவேண்டிவருவதை என்னால் காண முடிகிறது. இது சுத்த முதலாளித்துவ வியாபார யுக்தி என்பதற்கு இதைவிடச் சான்றேதும் தேவையோ?

அறம் பொருள் இன்பத்தை விட்டால் வாழ்க்கையில் வேறொன்றுமில்லை என்கிறார் இந்த வள்ளுவர். எங்கே போய் சொல்ல இந்தக் கொடுமையை. வாழ்க்கையின் அடிமட்டத்திற்கும் கீழே குழிதோண்டி வாழ்ந்த அனுபவம் எனக்கிருக்கிறது. அதை எழுத்தில் கொண்டு வாருமையா. வார்த்தை வருகிறது என்று எதையும் எழுதிவிட்டால் இலக்கியமா?

பெண் கவிகளை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதில் எனக்கிருக்கும் அக்கறை உங்களுக்கெல்லாம் தெரியும். அவ்வை வண்டர் வாட்டியார் எனும் புலவி மன்னனை 'வாடா மன்னா!' என மரியாதையின்று அழைத்துவிட்டு ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தை உமிழ்ந்தபோது நான் மட்டுமே இங்கே குரல் கொடுத்தேன். அப்போது நான் எழுதிய ஒழுக்க விதிகள் ஒவ்வொன்றையும் குறளில் தனதாக்கி எழுதியுள்ளார் வள்ளுவர். அவர் சொல்லியிருப்பதையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்பதை இன்னொருமுறை சொல்லிவிடுகிறேன்.

சந்தனக் காட்டில் என்னை புலி துரத்தியபோது இந்த வள்ளுவர் என்ன செய்துகொண்டிருந்தார்? (இந்தக் கேள்விகளை நான் விமர்சிக்கும் எல்லோரிடமும் கேட்கும் வழக்கம் எனக்குண்டு)
என் நண்பர் சேனைக்கிழார் வள்ளுவருக்கு ஓலையனுப்பி இவறையெல்லாம் எழுத உமக்கு என்ன அதிகாரம் இருக்குதையா எனக் கேட்டதற்கு அவர் குறளில் இல்லாத 'அதிகாரமா'? என பகடி செய்துள்ளாரென்றால் இவரின் பொறுப்பற்ற தன்மையை விளங்கிக்கொள்ள முடிகிறதல்லவா?

இப்போது சொல்கிறேன் இந்த வள்ளுவர் எழுதிய தயிர்மையில் இனிமேல் என் எழுத்துகள் பொறிக்கப்படாது. இனிமேல் 'கால் அச்சு வடு' இதழில் மட்டுமே என் ஓலைகள் வெளிவரும்.
இந்த வார்த்தைகளை கல்வெட்டில் பொறித்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் என்னை தமிழுலகம் கொண்டாடும். தமிழ்கூறும் நல்லுலகம் தென் குமரிக் கடல் மீது எனக்கு மாபெரும் சிலை ஒன்றை வைத்துக் கூத்தாடும். அப்போது இந்த வள்ளுவனின் குள்ள வரிகள் செல்லரித்துப் போயிருக்கும்.

--
இதை எழுதியவரின் பெயர் பொன்னில்தான் பொறிக்கப்படவேண்டும் என அடம் பிடித்ததால் இங்கே பொறிக்கப்படவில்லை.  கால் அச்சு வடு ஆசிரியர் குழு. இதற்கு மறுப்பாக வள்ளுவர் அனுப்பியிருந்த ஓலைசுவட்டில் கீழுள்ள வரிகள் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தன.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors