தமிழோவியம்
தராசு : நம்பிக்கை வாக்கெடுப்பு
- மீனா

கடந்த 4 வருடங்களாக ஆளும் கட்சிக்கு எதிராக இடதுசாரிகள் நடத்தி வந்த ஆதரவு வாபஸ் மிரட்டல் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இத்தனைக் காலமும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கு தயங்கி தயங்கி பதிலளித்துவந்த பிரதமர் சமாஜ்வாடி கட்சி ஆதரவு காங்கிரஸ¤க்கு நிச்சயம் என்று தெரிந்தவுடன் தைரியமாக "ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்" என்று விமானத்தில் பறந்தபடி அளித்த பேட்டியால் இடதுசாரிகள் ஒருவழியாக இத்தனை நாள் அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார்கள்.

மொத்தம் 545 இடங்களைக் கொண்டுள்ள நம் நாடாளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய முண்ணனியின் பலம் இதுவரை 295 ஆக இருந்தது. 59 எம்.பிக்களைக் கொண்ட இடதுசாரிகள் தற்போது ஆதரவை வாபஸ் பெற்றதன் மூலம் தற்போது கூட்டணியின் பலம் குறைந்துள்ள நிலையில் முலாயம் கட்சி எம்.பிக்களும், சிவசேனா, தேவகெளடா மற்றும் அஜித்சிங் கட்சிகளும் முழுமையாக காங்கிரஸை ஆதரித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு தப்பிக்கும் - ஆனால் முலாயம் கட்சி எம்.பிக்களில் சிலர் தாங்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதை முலாயம் மறுத்துள்ளபோதும் வாக்கெடுப்பு நடக்கும்போதுதான் நிஜக்கதை தெரியவரும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸை வீட்டிற்கு அனுப்ப இடதுசாரிகளும் சரி - பா.ஜனதாவும் சரி கொஞ்சம் தயங்கத்தான் செய்வார்கள்.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக அளவில் விலைவாசி விஷம் போல உயர்ந்திருக்கும் இந்நிலையில் - எண்ணெய் விலை குறைய வழியே இல்லை - அதைப் போலவே விலைவாசி குறையவும் தற்போது வழியில்லை என்ற நிலையில் - ஒருவேளை ஆட்சியைப் பிடித்தாலும் தங்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாத இந்நிலையில் ஆளும் கட்சியைக் கவிழ்த்து அதன் விளைவாக ஒரு அவசரத் தேர்தலை ஏற்படுத்தி - அதன் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க பா.ஜனதாவும் இடதுசாரிகளும் துணிவார்களா என்பது மிகப்பெரிய கேள்வி..

எது எப்படியோ - இடதுசாரிகளின் ஆதரவு வேஷம் ஒருவழியாக கலைந்துவிட்டதில் ஆளும் கட்சி அதிக மகிழ்சியுடன் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால் ஆட்சியைக் காப்பாற்ற முலாயம் கட்சியினர் விதிக்கும் பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்குமா? அல்லது போனால் போகட்டும் என்ற நினைப்பில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாராகப்போகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors