தமிழோவியம்
தராசு : இவரா குடியரசு தலைவர் ?
- மீனா

 

குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரதீபாவிற்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகளிலிருந்து எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் அவர் தலைமையில் இயங்கிய வங்கியில் நடைபெற்ற ஊழலில் பிரதீபாவின் பங்கும் உண்டு என்ற குற்றச்சாட்டு மட்டுமே அவர் மீது இருந்தது. ஆனால் தற்போது வாங்கிய 20 கோடி ரூபாய் கடனை திருப்பித் தராமல் மூடப்பட்ட சர்க்கரை ஆலை விவகாரத்தில் பிரதீபாவின் மறைமுகத் தொடர்பு, ராஜஸ்தான் ஆளுனராக அவர் பதவியேற்றபோது அவருக்கு பாராட்டு விழா நடத்த அவரது சகோதரர் தலைமையில் நடந்த வசூல் வேட்டை - அதில் வசூலான கோடிக்கணக்கான பணம் போன இடம் தெரியாமல் மறைந்த மாயம், பிரதீபாவின் குடும்பத்தினர்கள் செய்யும் ஊழல்கள், தனது சகோதரரை ஒரு கொலை வழக்கிலிருந்து காப்பாற்ற பிரதீபாவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற பல புகார்கள் பிரதீபா மீது எழுந்துள்ளது. இப்புகார்கள் பற்றி உரிய விதத்தில் விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூச்சல் போட்டு வரும் நிலையில் மூன்றாவது அணி தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகச் சொல்லி பிரதீபாவின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

ஊழல் புகார் மற்றும் கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டவர்களை மந்திரிகளாக்கி அழகு பார்க்கும் தன்மை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதி மன்றம் தண்டனை வழங்கிய பிறகும் கூட சிபுசோரனிடமிருந்து மந்திரி பதவியை பறிக்க காங்கிரஸ் பட்ட பாட்டை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அரசை நடத்த - ஊழல் பெருச்சாளிகளான லல்லு மாயாவதி போன்றவர்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் அரசு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைத்ததையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

மந்திரிகள் விஷயத்தில் தான் காங்கிரஸ் அரசு இப்படி நடந்து கொள்கிறது என்றால் நாட்டின் ஜனாதிபதியாகக் கூடவா ஊழல் புகார் சொல்லப்பட்டிருக்கும் ஒருவரை அமர்த்துவது? சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதர் கூடவா காங்கிரஸ் தலைவிக்குத் தெரியவில்லை? ஜனாதிபதியின் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் போடமுடியாது - அவருக்கு எதிராகத் தொடுக்கப்படும் சிவில் வழக்குகளும் புஸ்வாணம் ஆகிவிடும் என்ற நிலையில் கொலைக்கு துணைபோன ஒருவரை அப்பதவியில் அமர்த்துவது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அழகல்ல. வேட்பாளர் ஒருவர் பெண் என்ற ஒரே காரணத்தால் அவர் மீதுள்ள வழக்குகளை மறைத்து கண் மூடித்தனமாக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அவரை ஆதரிப்பதும் அவர் மீது எதிர்கட்சிகள் கூறும் ஆதாரமுள்ள புகார்களையும் அர்த்தமற்றவைகளாகச் சித்தரிப்பதும் ஜனநாயகத்தின் சாபக்கேடு.

110 கோடி மக்களின் முதல் குடிமகளாகப்போகிறவர் ஒரு கிரிமினல் குற்றவாளி - கிரிமினல் வழக்குகளிலிருந்து ஜனாதிபதிக்கு அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பு முதல்முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டது போன்ற பல சாதனைகளைப் படைக்க காங்கிரஸ் அரசு விரும்புகிறது. இவரா ஜனாதிபதி என்று கவலைப்படுவதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்யமுடியவில்லை.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors