தமிழோவியம்
ஹல்வா : ஸ்பிரிடட் அவே (spirited away)
- விஜய்

அனிமேஷன் படங்கள் சிறுபிள்ளைகளுக்கு மட்டும் தான் என்ற ஈகோ ஒரு புறம் தடுத்தாலும் சில நேரங்களில் சிறு பிள்ளையாக மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அண்மையில் எனக்குள்ளும் ஒரு கார்டூன் கேரக்டர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு அளவில்லை. 'உன்னால் முடியும் தங்கை' என சியாஃரோவை ஊக்கப்படுத்தும் அளவுக்கு என் மனநிலை சியாஃரோவுடன் ஒன்றிப் போய் விட்டது. அந்த படத்தின் அனிமேஷனை பார்க்கும் போது எனக்கு என்ன ஆகிவிட்டது எனத் தெரியவில்லை. சியாஃரோ கீழே விழும்போது எனக்கு அடிபடுகிறது. சியாஃரோ தாய் தந்தையை இழந்து நிற்கும் போது என்னை 'உச்' கொட்ட வைத்து கண்ணீர் உகுக்க வைக்கிறாள். சியாஃரோ படும் கஷ்டத்திலிருந்து அவள் மீண்டு வரவேண்டுமென என் தெய்வங்களை துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.

சியாஃரோவை நம் வீட்டு பெண்பிள்ளை என கொண்டாடும் அளவுக்கு ஸ்பிரிடட் அவே (Spirited away) என்ற ஜப்பானிய அனிமேஷன் படத்தின் வழியாக நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர் இந்த படத்தின் இயக்குநர் ஹாயோ மியாசுகி (Hayo Mayazuki). ஏற்கனவே ஹாயோ மியாசுகி அனிமேஷன் படங்களுக்காக புகழ் பெற்றிருந்தவர். 2001-ம் ஆண்டு வெளிவந்த ஹாயோ மியாசுகியின் ஸ்பிரிடட் அவே என்ற ஜப்பானிய அனிமேஷன் படம் ஜப்பானிய திரை உலகில் வசூலை அள்ளிச் சென்றது. ஜப்பானிய திரை உலகில் மட்டுமல்ல உலகமெங்கும் பல விருதுகளை வாங்கிக் குவித்தது. இந்த படத்திற்கு கிடைத்த விருதுகள் பற்றி அறிய இங்கே க்ளிக்கவும்(http://www.imdb.com/title/tt0245429/awards - இந்த லிங்கை சேர்க்கவும்)

நல்ல திரைக்கதையும், நுணுக்கி நுணுக்கி தீட்டிய ஓவியமாக அனிமேஷனும், ஒவ்வொரு கேரக்டர்களின் குணங்களின் மீதான அதீத கவனமும், அனிமேஷன் கேரக்டர்களின் முகபாவங்களும் இந்த படத்தை வெற்றிப்படமாக்கியிருக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்லலாம். கதை முழுவதும் ஃபேண்டஸி வகையை சேர்ந்தது. ஏதோ கனவுலகில் நடக்கும் காட்சிகள் போல படம் நகரும் போது நம்மையும் பரபரப்பும் ஆர்வமும் தோற்றிக் கொள்கிறது.

இந்த படத்தின் கதையும் மிக வித்தியாசமானது தான். சியாஃரோ ஒரு குட்டிப் பெண். சியாஃரோ தன் தாய் தந்தையுடன் புது வீட்டுக்கு குடியேற காரில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறாள். புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய பள்ளி போன்றவற்றை சந்திக்க வேண்டுமே என்ற எரிச்சலில் சியாஃரோ சிணுங்கியப்படியே பயணம் செய்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய தந்தை வழி தெரியாமல் மாற்று வழியில் காரை ஓட்டிச் செல்ல நீண்டு செல்லும் ஒரு குகைப் போன்ற பாழடைந்த வீட்டை காண்கிறார். ஏதோ ஒரு ஆர்வத்தில் அந்த குகையை கடந்து மறுபக்கம் செல்ல, எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென புல்வெளியையும் சிதிலமடைந்த தீம் பார்க் ஒன்றையும் காண்கிறார்கள். எங்கிருந்தோ உணவு வாசனை வருகிறதென சியாஃரோவின் தாயும் தந்தையும் அத்துமீறி சிதிலமடைந்த தீம் பார்க்கில் நுழைய, சியாஃரோ பயத்தால் அவர்களை எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறாள்.

அவள் தாய் தந்தை சியாஃரோவின் பேச்சை கேட்கிற மாதிரியில்லை. ஆளில்லாத உணவுக் கடையை அடைந்து யாராவது வந்தால் பிறகு காசு கொடுத்துவிடலாமென சொல்லிவிட்டு அங்கிருக்கும் உணவை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சியாஃரோவால் அவளுடைய தாய் தந்தையரை உணவு உட்கொள்ளமால் தடுக்க முடியவில்லை. அவளின் தாய் தந்தை உணவை புசித்துக் கொண்டிருக்க, தனியாக சியாஃரோ ஆளில்லாத தீம் பார்க்கை சுற்றி பார்க்கச் செல்கிறாள். தூரத்தில் மிக மிக அழகான ஒரு குளியல் விடுதி தெரிகிறது. புகைப்போக்கியின் வழியாக செல்லும் புகை அங்கு ஆட்கள் வசிப்பது போல அவளுக்கு தோன்றுகிறது. அந்த குளியல் விடுதியை அடைய முயற்சிக்கும் போது ஹாக்கு என்ற சிறுவன் இது ஆவிகள் வசிக்கும் இடமென்றும் உடனே ஓடிப் போய்விடு என்று விரட்டி விடுகிறான்.

அந்த நேரத்தில் இருட்டு கவ்வ ஆரம்பித்த உடன் தீம் பார்க் விளக்குகள் தானாக எரிய ஆரம்பிக்கின்றன. ஆவிகள் உலாவ ஆரம்பிக்கின்றன. பயத்தால் நடுங்கிக் கொண்டே சியாஃரோ தன் தாய் தந்தை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு வர, அவர்கள் பன்றியாக மாறி விடுகிறார்கள். பயத்தால் நடுங்கிக் கொண்டே சியாஃரோ அங்கிருந்து தப்பி ஓட முடியாமல் வந்த வழியெல்லாம் நீரால் நிரம்பி விடுகிறது.

துக்கத்தால் அழும் சியாஃரோவை ஹாக்கு என்ற சிறுவன் அவள் தாய் தந்தையை மீட்டு தருவதாகவும், பேய்கள் தங்கி குளித்துச் செல்லும் குளியல் விடுதியில் கொஞ்ச நாள் வேலை செய்ய வேண்டுமெனவும்,அந்த விடுதி யூபாபா என்ற சூன்யக்காரி கிழவியால் நிர்வகிக்கப்படுகிறது என்று சொல்கிறான். ஆவிகள் வாழும் குளியல் விடுதியில் மனிதர்கள் அடிமையாக அங்கு வேலை செய்ய வேண்டுமெனவும்,மனிதர்களுக்கு எளிதில் அங்கு வேலை கிடைக்காது எனவும் சொல்லி இந்த வேலைக்கு சுடுதண்ணீர் உலையை கவனித்துக் கொள்ளும் பல கை மனிதன் கமாஜியின் பரிந்துரை வேண்டுமெனவும் ஹாக்கு சொல்கிறான்.

சியாஃரோ முதலில் பிடிவாதமாக இருக்கும் பல கை மனிதன் கமாஜியின் மனதை அவளின் நன்னடத்தையாலும் இரக்க குணத்தாலும் கொள்ளை அடிக்கிறாள். மனிதர்களுக்கு வேலை கொடுக்க முடியாதென கொடூரமாக மறுக்கும் சூனியக்காரி கிழவியிடம் சியாஃரோ பிடிவாதத்தால் அங்கு வேலைக்கு சேருகிறாள். முள்ளங்கி, தவளை என விதவிதமான ஆவிகள் அந்த விடுதியில் உலாவுகின்றன. தரையை துடைப்பது முதல், வந்த ஆவி விருந்தாளிக்கு வெண்ணீர் கொப்பரையில் தண்ணீரில் குளிப்பாட்டி விடுவது வரை ஏகப்பட்ட வேலைகள். எப்போதுமே அவளுடைய பெற்றோர்களை நினைத்து கண்ணீர் வடிக்கிறாள் அந்த குட்டிப்பெண்.ஆவிகள் வசிக்கும் விடுதியில் அவளின் அன்பாலும், இரக்கக்குணத்தாலும் எல்லோருடைய மனதையும் பறித்துக் கொள்கிறாள். கடைசியில் எப்படி தன் பெற்றோர்களை காப்பாற்றுகிறாள். இதனால் அவள் பெறும் தன்னம்பிக்கையை பலவித சுவாரஸ்யமான காட்சி அமைப்புகளுடன் விறுவிறுப்புடன் நகர்ந்து செல்லும் படம்.

ஸ்பிரிட்டட் அவேயின் ஆங்கிலப் பதிப்பை தான் பார்த்தேன். இப்படத்தின் ஜப்பானிய பதிப்பில் சில குரல் உணர்வுகள் மிக மிக தத்ரூபமாக வந்திருக்கிறது என்கிறார்கள். ஆங்கில பதிப்பு அதிக மோசமில்லை. சியாஃரோவின் குரலும், சூனியக்காரி யூபாபாவின் குரலும் படம் பார்த்த பின்பும் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதே டிவிடியில் ஸ்பிரிட்டட் அவே பற்றிய விவரணம் மிக மிக ஆர்வத்தைத் தூண்டுகிறது. அவருடைய நெருங்கிய நண்பரின் மகளின் நன்னடத்தையும் இரக்ககுணமும் உதவும் குணமும் மியாசுகியை கவர சியாஃரோ என்ற கேரக்டரை அவளுக்காக வடித்தார் மியாசுகி. பொதுவாக ஆங்கில அனிமேஷன் படங்களில் கதை, வசனம், அனிமேஷன், கணணி துறை என ஒவ்வொரு துறையையும் தனி தனி ஆட்கள் தான் கவனித்துக் கொள்வார்கள். ஸ்டோரி போர்டிலிருந்து கணனியில் அனிமேஷன் வரை ஒவ்வொரு ஸ்பிரிடட் அவே அனிமேஷன் துகளிலும் மியாசுகி இருக்கிறார்.

கற்பனைக்கு எட்டாத காட்சிகளை எல்லாம் மியாசுகி அநாயசமாக இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார். ஒரு காட்சியில் 'நாறும் ஆவி'(stink spirit) ஒன்று குளியல் விடுதிக்கு குளிக்க வரும். சேறும் சகதியுமாக அழுக்காக மிகுந்த துர்நாற்றத்துடன் அந்த ஆவி நடந்து வரும் போது, எல்லோரும் துர்நாற்றத்தால் ஒதுங்கி ஓட, சியாஃரோ அதற்கு சேவை செய்யுமாறு பணிக்கப்படுகிறாள். அவ்வளவு கஷ்டத்துடன் 'நாறும் ஆவி'க்கு சுடுதண்ணீரில் சியாஃரோ குளிக்க வைக்கிறாள்.  'நாறும் ஆவி'(stink spirit) சகதி உடம்பில் ஏதோ தென்பட எல்லோர் உதவியுடன் அதை இழுக்கிறாள் சியாஃரோ. விசையிலிருந்து விடுப்பட்டது போல உடம்பிலிருந்து உடைந்து போன சைக்கிள் முதலான குப்பைகள் எல்லாம் கொட்டிப் போகிறது. கடைசியில் 'நாறும் ஆவி' புனிதமடைந்து 'ஆற்றின் ஆவி'(River spirit)யாக மாறுகிறது.

இந்த காட்சியைப் பற்றி மியாசுகி சொல்லும் போது ஜப்பானில் ஓடும் ஒரு அழுக்கடைந்த ஆறு(கூவம் மாதிரி) அவருக்கு அந்த கேரக்டரை வடிக்க இன்ஸ்பிரேஷனாக இருந்ததாம். ஒரு நாள் நாற்றத்துடன் ஓடும் அழுக்கு ஆற்றின் கரையில் நின்றிருந்த போது உடைந்த சைக்கிள் முதலான குப்பைகள் சகதியில் புதையுண்டு இருந்திருக்கிறது.அதுவே மேலுள்ள காட்சியை அமைக்க உதவியதாம். இப்படி பலவித இன்ஸ்பிரேஷன்களால் அவர் செதுக்கிய கற்பனை கேரக்டர்கள் இந்த படத்தில் பலப்பல.

அனிமேஷன் படங்களை பெரியவர்கள் மட்டும் தான் பார்க்க வேண்டுமென்ற ஈகோவை விட்டு விட்டு குழந்தைகளோடு குழந்தைகளாக பார்க்க வேண்டிய படம்.

இந்தப் படத்தை பற்றி மேல் விவரங்கள் தெரிந்துக் கொள்ள

சுட்டி 1 (http://www.imdb.com/title/tt0245429/)
சுட்டி 2 (http://www.spiritedaway.com.au/#)

இந்தப் படத்தின் ட்ரெய்லர்ஸ்களை இங்கே கண்டுக் கொள்ளலாம். (http://www.nausicaa.net/miyazaki/sen/relmedia.html)

Copyright © 2005 Tamiloviam.com - Authors