தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : முன்மாதிரிகளும் சமூக கல்வியும் (Models and social learning)
- பத்மா அர்விந்த்

பழக்கங்கள் ஒரு நல்ல முன்மாதிரியை பார்த்து கற்று கொள்ள முடியும் என்பது சமுதாய கல்வி முறையின் அடிப்படை கொள்கை ஆகும். படித்தும், அனுபவத்தில் இருந்தும் கற்று கொள்வதை விடஅடுத்தவரை பார்த்து கற்று கொள்வது எளிதாக இருக்கிறது.

குழந்தைப்பருவம் முதல் நாம் அனைவருமே ஒரு கூட்டத்தில் ஏற்று கொள்ள பட வேண்டும் என்று நினைக்கிறோம். சின்ன குழந்தைகூட தன்னுடைய பெற்றோர் செய்யும் சில செய்கைகளை அப்படியே செய்து காட்டுகிறது. பின்நாளில் பள்ளிக்கு செல்லும் போது பலராலும் பாராட்டப்படும் ஒருவனை பார்த்து தானும் அதுபோலவே உடை அணிவதும், பழகுவதும் தன் ரசனைகளை மாற்றி கொள்வது என  சிறுவர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் சில சமயம் சிறுவர்கள் தவறான வழிக்கு செல்வதும், கூட்டத்தில் அதிக முரட்டுதனம் உடைய ஒருவனின் கட்டுப்பாட்டுக்குள் வருவதும் நடக்கிறது.

மாணவர்கள் நல்ல முன்மாதிரியை பார்த்து கற்று கொள்கிறார்கள். கணிதம் போன்றவற்றை கற்கும் போது சில கடினமான கணக்குகளை ஆசிரியர் முதலில் செய்வதை கவனித்து அதைப்போலவே சிந்திக்கவும் கற்கிறார்கள். அ   தே போல பயம் நிறைந்த இடத்தில் எப்படி சமாளிப்பது என்பதையும் ஒரு மூர்க்கமான மாணவனை எப்படி எதிர் கொள்வது என்பதையும் அவ்வாறே கற்று கொள்கிறார்கள். தன்னைப்போல ஒரு மாணவன் செய்யும் போது தன்னாலும் செய்ய முடியும் என்று நம்பிக்கை வருவதே காரணம். இதனால் நேர்மறையான வற்புறுத்தல் (positive peer pressure) சில நல்ல பழக்கங்களை தர முடியும்.நன்னெறி பழக்கங்களும் அது தொடர்பான சிந்தனைகளும் முன்மாதிரியால் எளிதாக வருகிறது.

நல்ல முன்மாதிரி அமைய தேவையான சில நிபந்தனைகள்:

1. கவனம் : ஒருவருடைய நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள நல்ல கவனம் தேவை. ஒருமுகமாக சற்றும் சிதறாமல் நல்ல தேர்ந்த கவனம் தேவை.  துரோணர் ஒருமுறை தன் மாணவர்களை ஒரு மரத்தில் இருக்கும் ஒரு பறவையின் கண்ணை குறிபார்த்து அம்பு விட சொல்வார். அப்போது அர்ச்சுனனை தவிர மற்றவர் அனவரின் கண்களுக்கும் மரமும் அதன் இலைகளும் பறவையின் உடல் போண்ற அனைத்தும் தெரிகிறது என்று சொல்ல அர்ச்சுனன் ஒருவன் மட்டும் அதன் கண்ணைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை என்று சொல்வான். அதுபோன்ற க வ  ன ம் தேவை.

2.  தக்க வைத்துக்கொள்ளும் திறன் : கற்றுக்கொள்ள விரும்புபவர் பார்த்தாலும் கவனித்தாலும் மட்டும் போதாது. அதை நினைவில் கொள்ளவும் வேண்டுகிற சம ய த்தில் அதை செயல்படுத்தவும் அறிய வேண்டும். நினைவுத்திறனை வளர்க்க கற்றுக்கொள்வதை உடனே ஒரு காகிதத்தில் எழுதி பார்ப்பதும், மற்றவரிடம் அதை சொல்வதும் போன்றவற்றை உடனே செய்தால் அது நினைவில் பல நாட்கள் இருக்கும். உதாரணமாக ஒருவர் வீணை வாசிக்க கற்று கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஒருமுறை அதை பழக வேண்டும். இல்லை எனில் சில நாட்கள் கழித்து எதை கற்று கொண்டோம் என்றே மறந்து விடும். அதேபோல் உடற்பயிற்சியில் சில புதிய பயிற்சிகள் கற்றுக்கொண்டிருந்தால் அதையும் பழக வேண்டும். திரும்பதிரும்ப பயிற்சி செய்வது அதிக நாட்கள் கற்றதை நினைவில் இருத்த உதவும்.


3. இயக்கங்களை திரும்ப செய்வது (Motor reproduction) : ஒருவருடைய செய்கைகளை திரும்ப செய்வது. இது சிலருக்கு மிக கடினமாக இருக்கும். யோகா போன்றவற்றை கற்று கொள்ள இது மிக முக்கியம். சிறு குழந்தைகள் இப்படி செய்வதன் மூலமே நடக்க, ஓட கற்று கொள்கிறது. பூங்காக்களில் விளையாடும் சிறுவர்களை பார்த்தால் தெரியும் அவர்கள் எவ்வளவு சீக்கிரம் கற்று கொள்கிறார்கள் என்று தெரியும். இதற்கு ஒரு காரணம் அவர்கள் கவனிப்பு திறன் அதிகம், மனமும் நிச்சலனமாக கவலை எதுவும் இன்றி இருப்பதும், மேலும் தயக்கமின்றி செயல்படுத்துவதும் ஆகும்.

4. ஆர்வமும் சுய ஊக்கமும் (interest and motivation) : கற்றுக்கொள்ள விரும்புவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வம் காட்ட வேண்டும். விருப்பமில்லா ஒன்றில் அது கலையாக இருப்பினும், புதிய பழக்கமாக இருப்பினும் அல்லது படிப்பாக இருப்பினும் ஈடுபட்டால் அது கசந்துவிடும். மனதிற்கு பிடிக்காத இடத்தில் பணிசெய்யும் போது நம்மாஅல் 100% வீதம் அதில் ஈடுபட முடியாது. இது பிறகு தகைவும், அதன் தொடர்புடைய தலைவலி போன்ற பிரச்சினைகள் வரவும் காரணமாகிறது. பெற்றோரின் விருப்பத்திற்காக பொறியியல் படிக்க சேரும் மாணவன் படும் அவஸ்தையும், உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லா ஒருவன் மருத்துவரின் ஆலோசனை/ வற்புறுத்தலின் பேரில் செய்ய ஆரம்பித்தால் அது பாதியிலேயே நின்றுவிடும். இதனால் நோயாளிகளின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் மருத்துவர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எங்களை போன்ற உடல் நல படிப்பு செய்வர்கள் முதலில் ஆலோசனைக்கு வருவரின் ஊக்க அளவை அதிகரிக்கும் முயற்சியிலேயே ஈடுபடுவோம்.

ஒரு பழக்கத்தின் மேல் முன்மாதிரிகளின் தாக்கம் எத்தகையது?

சமூகத்தில் பலராலும் பாராட்டப்படும் ஒருவர் சொல்வதை செய்வதை பலரும் கவனித்துக்கற்றுகொள்கிறார்கள். இதனாலேயே பொருட்களை விற்பவர்கள் கூட பலருக்கும் தெரிந்த ஒரு நடிகை, மருத்துவர், பாடகர் அல்லது நடிகரை விளம்பரங்களில் மாடலாக உபயோகப்படுத்துகிறார்கள். இதுபோலவே ஒரு சமூகத்தின் மேல் தாக்கம் அதிகம் உள்ள ஒரு நடிகர் செய்யும் செயல்களை பல இளைஞர்கள் தொடர்வதை காணலாம். முன்மாதிரியாக இருப்பவர்கள் புதுப்பழக்கங்களை கொண்டுவர முடியும்.

முன்மாதிரியாக இருப்பவர்களால் முன்னால் கற்று கொண்ட ஒரு பழக்கத்தின் மேல் கூட தங்கள் சக்தியை உபயோகிக்க முடியும். உதாரணமாக காலம் காலமாக கோவில் சென்று வழிபட்டு கொண்டிருந்த ஒருவனுக்கு மிகவும் பிடித்த தலைவர் அதை மூடநம்பிக்கை என்று சொன்னால், அதன் அடிப்படை கருத்து புரியாத போதும் அதை செய்ய முயல்கிறான். இதேபோல இருமுறை பல்விளக்குவது உடலுக்கு நல்லது என்று ஒரு மருத்துவர் சொல்வதை ஒரு நடிகன் பின்பற்றும் போது அல்லது உடற்பயிற்சி செய்வதை ஒரு விளையாட்டு வீரன் செய்யும் போது அதை தொடர விரும்பும் இளைஞர்கள் அதிகம்.

அதேபோல முன்னால் தடுக்கப்பட்ட சில பழக்கங்களை கூட முன்மாதிரிகள் ஊக்கப்படுத்தமுடியும். உதாரணமாக் தண்ணீர் பருகுவது குறைந்து குளிர்பானங்கள் பருகும் பழக்கம் அதிகரித்தபோது அதனால் உடலுக்கு கேடு வருவதை சொல்லி அதை தடுக்க தண்ணீர் பருகுகிறேன் என்று சொல்லும் விளையாட்டு வீரரை தொடர்ந்து பல சிறுவர்கள் இப்போது தண்ணீர் பருக ஆரம்பித்துள்ளனர்.

அதேபோல முன்மாதிரிகள் நல்ல பழக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லவை.

தன்னம்பிக்கை: மனிதர்கள்  ஒரு புதிய பழக்கத்தை செய்யும் முன் அதை சரிவர செய்ய முடியுமென்ற நம்பிக்கை வர வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் சர்க்கரை அளவை தினமும் அளக்க அதன் செய்முறையின் மீது நம்பிக்கை வர வேண்டும்.

தன்னம்பிக்கை ஒரு புதிய பழக்கத்தை கற்று கொள்வதில் எப்படி மாற்றம் உண்டாக்குகிறது?

செயல்கள் செய்யும் போது வரும் மகிழ்ச்சி: ஒரு காரியம் செய்யும் போது அதை தன்னால் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் போது தடங்கல்கள் இல்லாமல் செய்யவும் சந்தோஷமாகவும் செய்ய முடியும்.

விளைவுகளும் விடாமுயற்சிகளும்:  மனிதன் தன்னால் ஒருகாரியத்தை செய்ய முடியும், கற்றுக்கொள்ளமுடியும் என்று நினைக்கும் போதுதான் அதை கற்றுக்கொள்ளும் ஆ  ர்வமும் மேலிடுகிறது. அதேபோல மாணவர்கள் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் போது இன்னும் நன்றாக கற்பதும் அதை கடைபிடிப்பதும் செய்கிறார்கள். ஆர்வம் அறிந்து கற்றுக்கொடுத்தலும் அவசியம்.

இதேபோல சமூக கல்வியில் சுய அடக்கமும் கட்டுப்பாடும் மிக அவசியம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors