தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : உள்ளங்கையில் உலகம் : உப சேவைகள்
- எழில்

அழைப்புகள், குறுந்தகவல், அவசரகால அழைப்புகள் , இம்மூன்றும் ஒரு செல்பேசி வலையமைப்பின் தொலைச் சேவைகளாகும் ( Tele Services). இவை தவிர உப சேவைகள் (Supplementary Services) பல உண்டு. அந்த உப சேவைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஏற்கனவே, இத்தொடரின் அறிமுகப் பகுதியில் உப சேவைகளைப் பற்றி நாம் படித்ததை நினைவு கூர்வோம். இந்த உப சேவைகள் தனியாக எந்தப் பயனையும் அளிப்பதில்லை. மேலே சொன்ன தொலைச் சேவைகளுக்கு உதவி செய்பவை அல்லது தொலைச்சேவைகளை மேம்படுத்த உதவுபவை .

உப சேவைகளின் பயன்பாட்டினைப் பொறுத்து அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அழைப்பினிடை உப சேவைகள் மற்றும் அழைப்பு சாரா உப சேவைகள் . இரண்டு வகை உப சேவைகளும் பொதுவாக, அழைப்புக்கே உதவுபவை.

அழைப்பினிடை உப சேவைகளை, நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே இந்த உப சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அழைப்புக்காத்திருத்தல் (Call Waiting) , அழைப்பை நிறுத்தி வைத்தல் (Call Hold) போன்றவை இந்த வகைக்கு உதாரணங்கள். அழைப்பு சாரா உப சேவைகளைக் கொண்டு , இனிமேல் ஏற்படுத்தப் போகும் அழைப்புகளைக் கட்டுப்படுத்தவோ மாற்றி அமைக்கவோ முடியும். உதாரணமாய் , அழைப்புத் திருப்பல் (Call Divert) எனும் சேவையை ஏற்படுத்திக்கொண்டால் இனிமேல் நமக்கு வரும் அழைப்புக்களை வேறு எண்ணுக்குத் திருப்பி அனுப்பிவிட முடியும்.

இந்த உப சேவைகள் அனைத்தையும் நீங்கள் அதற்கென செல்பேசியில் இருக்கும் பட்டியைச் சுட்டுவதன் (Menu) மூலம் அச்சேவைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதுதவிர ஒரு சில குறிப்பிட்ட குறியீட்டு எண்களைச் செல்பேசியில் உள்ளிட்டு , அந்த வகைச் சேவைகளை ஏற்படுத்திக்கொள்ளவோ(activate), நீக்கவோ (Deactivate) அல்லது அச்சேவைகள் தற்போது ஏற்படுத்தப் பட்டுள்ளனவா , நீக்கப்பட்டுள்ளனவா என்ற நிலையை (Status) அறியவோ முடியும். எந்த உப சேவைக்கு எந்தக் குறியீடு என்பதையும் நாம் பார்ப்போம்.

 அழைப்புக் காத்திருத்தல் (Call Waiting)

பேசிக்கொண்டிருக்கையில் இன்னொரு அழைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? அதை எவ்வாறு தெரிவிப்பது? ஒரு அழைப்பில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் இன்னொரு அழைப்பை உணர்த்த இந்த அழைப்புக்காத்திருத்தல் எனும் உப சேவை பயன்படுகிறது . இதற்கான பட்டியை (menu) நீங்கள் தேர்ந்தெடுத்து அழைப்புக் காத்திருத்தல் சேவையை ஏற்படுத்திக்கொள்ளலாம் . ஒரு உரையாடலில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் போது இன்னொரு அழைப்பு ஏற்பட்டாலும் , இரண்டாவது அழைப்பு உங்களுக்குத் தெரிவிக்கப்படும் . அதே நேரத்தில் இரண்டாவதாய் உங்களை அழைத்தவருக்கும் நீங்கள் இன்னொரு உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாய்த் தகவலும் அனுப்பப் படும். இரண்டாவது அழைப்பினை ஏற்றுப் பேசுவதோ , அவ்வழைப்பினை நிராகரிப்பதோ உங்கள் விருப்பம்.

அழைப்புக்காத்திருத்தல் வசதியை நீங்கள் ஏற்படுத்தாமல் இருந்தால் என்னவாகும்?

நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் , இன்னுமொருவர் உங்களைத் தொடர்பு கொள்ள முயன்றால் "நீங்கள் அழைத்த எண் உபயோகத்தில் உள்ளது" என்ற தகவல் அழைத்தவருக்கு அனுப்பப் படும் . உங்களுக்கும் அவர் அழைத்த விவரம் தெரிவிக்கப்படாது.

செல்பேசித்திரையில் *43# என்று உள்ளிட்டு அனுப்புக (SEND ) எனும் பட்டியைத்தட்டுங்கள். உங்களுக்கு அழைப்புக் காத்திருத்தல் சேவையை செல்பேசி வலையமைப்பு ஏற்படுத்தித் தந்துவிடும் .

உங்களுக்கு இவ்வசதி வேண்டாமா?

#43# என்ற குறியீட்டை அழுத்தி அனுப்புங்கள்.

இவ்வசதி தற்போது உங்கள் செல்பேசியில் ஏற்படுத்தப் பட்டுள்ளதா இல்லையா என்று அறிந்து கொள்ள

*#43# என்ற குறியீட்டை அழுத்தித் தெரிந்து கொள்ளலாம் .

அழைப்பு நிறுத்திவைத்தல் (Call Hold)

சரி, மேற்சொன்னபடி ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் இன்னொருவர் உங்களை அழைக்கிறார் எனலாம். அழைப்புக் காத்திருத்தல் வசதியும் உங்களிடம் உள்ளது . பேசிக்கொண்டிருப்பவரிடம் உரையாடலைத் தொடர ஆசை; அதே நேரம், இரண்டாவது அழைத்தவரிடமும் பேசி "தற்போது இன்னொரு உரையாடலில் ஈடுபட்டுள்ளேன் ; சிறிது நேரம் கழித்துத் தொடர்பு கொள்கிறேன்" என்று சொல்லவும் வேண்டும். இம்மாதிரிச் சமயங்களில் என்ன செய்யலாம் ? முதலாம் அழைப்பினைச் சிறிது நேரம் நிறுத்தி வைக்கலாம். இதனைத் தேர்ந்தெடுக்கும் பட்டி, இரண்டாவது அழைப்பினைப் பெறும் போது உங்களுக்குத் தெரிவிக்கப்படும். இரண்டாவது அழைப்பு ஏற்படும் போது மூன்று விதமான முடிவுகள் உங்களுக்கு அளிக்கப் படும். ஒன்று; இரண்டாவது அழைப்பை மறுத்து (Reject) முதலாவது அழைப்பினை நீங்கள் தொடரலாம். இரண்டு; முதலாவது அழைப்பை முடித்து (Terminate/End) இரண்டாவது அழைப்பினை ஏற்றுக்கொண்டு புதிய உரையாடலைத் தொடங்கலாம். மூன்று; முதலாவது அழைப்பைச் சிறிது நேரம் நிறுத்தி வைத்து (Hold) இரண்டாவது அழைப்பினையும் நீங்கள் ஆரம்பிக்கலாம்.

ஒரு அழைப்பினை நிறுத்தி வைத்து இன்னொரு அழைப்பில் ஈடுபடுகிறீர்கள். பின்னர் நீங்கள் விரும்பினால், பேசிக்கொண்டிருப்பவரை நிறுத்தி வைத்து ஏற்கனவே நிறுத்தி வைத்த அழைப்பினை மீண்டும் ஏற்படுத்திப் பேசலாம் . இதற்கான பட்டியை நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். அல்லது எண் 2 -ஐ அழுத்தி அனுப்புங்கள் ( 2 SEND ) . நிறுத்திய அழைப்பு மீண்டும் ஏற்படுத்தப்படும் . ஏற்கனவே இருந்த அழைப்பு நிறுத்தப்படும்.

கலந்துரையாடல் அழைப்பு (Conference Call / Multiparty)

மேலே சொன்னவாறு இரு அழைப்புகளில் ஒன்றினை நிறுத்தி வைத்தும், இன்னொரு அழைப்பினை ஏற்படுத்தியும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனலாம். இப்போது எதிர்முனையில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிமுகமானவர்கள் (உங்கள் நண்பர்கள் ) எனில் மூவரும் கலந்து பேச விருப்பப் படலாம். அதற்கும் வழி உண்டு . கலந்துரையாடலைத் தேர்ந்தெடுக்க செல்பெசியில் ஒரு பட்டி (menu) உண்டு. அல்லது 3 -ஐ அழுத்தி அனுப்புங்கள் (3 SEND) . தற்போது இரண்டு அழைப்புக்களும் இணைக்கப்பட்டு மூவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாட முடியும். அதிகபட்சம் இம்மாதிரி ஆறு இணைப்புகள் ஏற்படுத்திக் கலந்துரையாடலாம் . கலந்துரையாடலில் ஒருவர் விலகினாலும் எஞ்சியுள்ள பிறர் உரையாடலைத் தொடரலாம். ஆனால் கலந்துரையாடலை ஏற்படுத்தியவர் இணைப்பைத்துண்டித்தால் பிற இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விடும்.

அழைப்பைத்திருப்பல் (Call Forward/ Call Divert)

உங்களுக்கு வரும் அழைப்புகளைப் பிற தொலைபேசிகளுக்கோ, பிற செல்பேசிகளுக்கோ நீங்கள் திருப்பி விட முடியும். உங்கள் செல்பேசிக்கு வரும் அழைப்புகள் அனைத்தையும் உங்கள் வீட்டிலிருக்கும் தொலைபேசிக்கு மாற்றி விடலாம்; அல்லது அலுவலகத்தில் நீங்கள் ஏதாவது ஒரு சந்திப்பில் கலந்து கொண்டிருக்கும்போது ஏற்படும் அழைப்புகளை உங்கள் உதவியாளருக்குத் திருப்பி விடலாம் . இவ்வசதியினை ஏற்படுத்த அதற்கான பட்டியினைத் தேர்ந்தெடுத்து எந்த எண்ணுக்கு அழைப்புகளைத் திருப்ப விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும் . அழைப்புகள் மட்டுமின்றி , தொலைநகல் (Fax ), தரவு (Data) போன்றவற்றினையும் திருப்ப முடியும் அழைப்புத்திருப்பலில் பல வகைகள் உண்டு.

1. எல்லா நேரங்களிலும் அழைப்புத் திருப்பல் (Unconditional Forward ):

இவ்வசதியை நீங்கள் ஏற்பட்டுத்தினால் உங்களுக்கு வரும் எல்லா அழைப்புகளும் நீங்கள் எந்த எண்ணுக்குத் திருப்பி அனுப்ப விழைகிறீர்களோ அந்த எண்ணுக்கு அனுப்பப் படும். உங்கள் செல்பேசி தொடர்பில் இருந்தாலும், தொடர்பு ஏற்படுத்தாமல் முடக்க நிலையில் இருந்தாலும் கவலை இல்லை.

இந்த உப சேவையை ஏற்படுத்தும் குறியீடு : *21*புதிய எண்# ( புதிய எண் என்பது நீங்கள் எந்த எண்ணுக்கு அழைப்பத் திருப்ப விழைகிறீர்களோ அந்த எண்) இச்சேவையை நீக்க : #21# வசதி உள்ளதா /இல்லையா என அறிய: *#21#

2. தொடர்பு ஏற்படுத்தா நிலையில் அழைப்புத்திருப்பல் (Divert When Not Reachable ):

இந்த வசதியை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால் எப்போதெல்லாம் உங்கள் செல்பேசியின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதோ (Powered off ) அப்போது உங்களுக்கு வரும் அழைப்புகள் மட்டும் வேறு எண்ணுக்குத் திருப்பி அனுப்பப் படும். உங்கள் செல்பேசி இயக்கத்தில் இருந்தால் , அப்போது ஏற்படும் அழைப்புகள் உங்கள் செல்பேசிக்கே அனுப்பப் படும்; சில நேரங்களில் செல்பேசி வலையமைப்பின் எல்லையை விட்டு நீங்கி வெகு தூரம் வந்து விட்டீர்கள் (அல்லது நீங்கள் இருக்குமிடத்தில் வலையமைப்பு இல்லை , No network) என்றாலும் அழைப்பு திருப்பி விடப்படும்.

இந்த உப சேவையை ஏற்படுத்தும் குறியீடு : *62*புதிய எண் # இச்சேவையை நீக்க : #62#

வசதி உள்ளதா /இல்லையா என அறிய: *#62#

3. பதிலில்லாத போது அழைப்புத்திருப்பல் (Divert when No Reply):

இவ்வகை அழைப்புத் திருப்பலை ஏற்படுத்திக்கொண்டால், அழைப்பு முதலில் உங்கள் எண்ணுக்குத்தான் தெரிவிக்கப்படும். இவ்வாறு வரும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளாமல் விட்டீர்களேயானால், இவ்வழைப்பு வேறு எண்ணுக்கு திருப்பப் படும். எவ்வளவு நேரத்திற்குப் பிறகு அழைப்புத் திருப்பப் படும் என்பதைக்கூட தேர்ந்தெடுக்கலாம். சில வினாடிகளுக்குப் பிறகும் நீங்கள் அழைப்பை ஏற்காமல் விட்டீர்களேயானால் பின்னர் வேறு எண்ணுக்கு அழைப்பு திருப்பி விடும். உதாரணமாய், உங்களக்கு தரப்பட்டிருக்கும் தகவல் அஞ்சல் பெட்டி எண்ணிற்குத் ( Voice mail Number) திருப்பி விட்டீர்களேயேனால், அழைத்தவர் தனது தகவலைப் பதிவு செய்ய முடியும்.

இந்த உப சேவையை ஏற்படுத்தும் குறியீடு : *61*புதிய எண் * வினாடிகள்# (வினாடிகள் : 5 வினாடி முதல் 30 வினாடி வரை)

இச்சேவையை நீக்க : #61# வசதி உள்ளதா /இல்லையா என அறிய: *#61#

4. உபயோகத்தில் இருக்கையில் அழைப்புத் திருப்பல் (Divert when busy)

உங்கள் செல்பேசி மூலம் பேசிக்கொண்டிருக்கையில் , இன்னுமொரு அழைப்பு ஏற்படுகிறது எனலாம். அந்த அழைப்பினை வேறொரு எண்ணுக்குத் திருப்ப இந்த வகையைப் பயன்படுத்தலாம். அல்லது உங்களுக்கு நிறைய வேலை இருந்தால் (இருப்பது போல் காட்டிக்கொள்ள ) அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து பட்டியைச் சுட்டினால் ( Busy) , அவ்வழைப்பு வேறு எண்ணுக்கு திருப்பப் படும்.

இந்த உப சேவையை ஏற்படுத்தும் குறியீடு : *67*புதிய எண் # இச்சேவையை நீக்க : #67# வசதி உள்ளதா/இல்லையா என அறிய: *#67#

அழைப்பு எண் காட்டல்/மறைத்தல் (Caller Line Presentation/Restriction)

இவ்வசதி, நாம் அழைப்பவருக்கு நமது எண்ணைத் தெரிவிக்கவோ/மறைக்கவோ பயன்படுத்துவதாகும். சாதாரணமாக எல்லாவித செல்பேசி வலையமைப்புகளும் இவ்வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. எனவே தனியாக இவ்வசதியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவசியம் இல்லை . இருப்பினும் பிறருக்கு உங்கள் எண்ணைத் தெரிவிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையேல் நீங்கள் உங்களது எண்ணை மறைத்து அனுப்பலாம்.

உங்களது எண்ணை தெரிவிக்க : *31#  உங்களது எண்ணை மறைக்க  : #31#

வசதி உள்ளதா /இல்லையா என அறிய: *#31#

ஒரு குறிப்பிட்ட அழைப்பின் போது , அழைப்பவருக்கு உங்கள் எண்ணை மறைக்கவும் வழி உண்டு. நீங்கள் அழைக்க வேண்டிய எண்ணின் முன் #31# சேர்த்து அவ்வெண்ணை அழையுங்கள் (உதாரணம்: #31#9894

01 2345) . உங்களது எண் அவருக்குத் தெரிய வராது.

மேலும் சில உப சேவைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors