தமிழோவியம்
கட்டுரை : பிறவி
- சிறில் அலெக்ஸ்

 

எனக்கு மறுபிறவியில நம்பிக்கையிருந்ததில்ல. நான் ஒரு கிரிஸ்ட்டியன். இயேசு மேகம் புடைசூழ கூசும் ஒளிக்கீற்றுக்களின் நடுவாப்ல, சுத்தியும் குட்டிச் சிறகு முளைத்த பச்சிழம் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மீறிய வாத்தியங்களை வாசிச்சிட்டிருக்கையிலே மறுபடியும் வந்து நம்மையெல்லாம் இரட்சிப்பார் என்பதை முழுமையாக நம்பினேன். நான் ஒரு அறிவியல் ஆய்வாளன் கூட. நாமெல்லாம் இறந்துபோய் நம்முடைய உடல் அணுவணுவா சிதைஞ்சி இந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற அனுக்களோடு கலந்து நிலைத்து நிற்போம் என்கிற அறிவியல் after life கருத்தோடு ஒத்துப்போனாலும் போனேனே தவிர... மறுபிறவி? அபத்தம். என்ன எடுத்ததுமே ஆன்மீகம் பேசறானேன்னு நினைக்கிறீங்களா?

சரி அறிவியல் பேசலாம்.

REM தெரியுமா. அந்த இரைச்சலான இசைக்குழுவச் சொல்லல. Rapid Eye Movements. தமிழிலேயா? இந்தப் பழக்கத்த விடலியா நீங்க? துரித கண்ணசைவுகள். வாவ்! எனக்கு இது பிடிச்சிருக்கு. 'துரித கண் அசைவுகள்'. அதாவதுங்க ஒரு காட்சி எப்படி காணப்படுகிறதுண்ணா ஒளி ஃபோட்டான்களால் உருவானது. ஃபோட்டான் என்பது ஒரு நுண்ணொளித் துகள். அது, தடையில்லாதபோது, செலுத்தப்படும் திசையை நோக்கி மின்காந்த அலையாகப் போபோய் கிட்டே இருக்கும். ஆனா தடைபடும்போது பாதையிலேர்ந்து திரும்பி பயணிக்கும். ஒளிச் சிதறல் எனச் சொல்லலாம் இதை. இப்படி பயணிக்கும் ஃபோட்டான்கள் உங்கள் கண்களுக்குள்ளே விழும்போது அங்கே கெமிக்கல் ரியாக்ஷன் நடக்குது. ஆமாங்க 'வேதியல்' நிகழ்வு. அந்த வேதியல் நிகழ்வு நரம்புவழியா முளைக்கு மின்னலைகளை அனுப்புது. தமிழ்ல சொன்னா கரண்ட் பாஸ் பண்ணுது. நரம்புண்ணா ஹீரோ கையை முறுக்கும்போது கிராஃபிக்சில் சுருளும் நரம்பில்ல. இதெல்லாம் மிகச் சிரிய (உங்க) கண்ணுக்குத் தெரியாத கண் நரம்புகள்.

அப்பப்ப ஜோக்கடிச்சாலும். சொல்லப்போற விஷயம் சீரியசானது. உங்களைப்பற்றியது. கவனத்த விட்டுறாதீங்க.

அப்ப கனவுகள் எப்படித் தோணுது? அதாவது வெளிச்சம் கண்ணில் நுழையாம நம்மால எப்படி காட்சி காண முடியுது? எப்பவாவது இந்தக் கேள்விய உங்களுக்குள்ளேயே கேட்டிருந்தீங்கண்ணா நீங்க தத்துவ ஞானி. வேற யார்கிட்டேயாவது கேட்டிருந்தீங்கண்ணா லூசு. அதுவும் இப்படி மாடு மாதிரி வளர்ந்த பிறகு... (ஜோக்!)

கண்கள் கணிசமான வேகத்தில் அசையும்போது கனவுகள் உருவாகுதுண்ணு ஒரு தியரி இருந்தது. இருக்குதுண்ணு சொல்லணும். நாந்தான் அத நிரூபிச்சிட்டேனே. பல வழிகளில் கனவுகள் இருந்தாலும் துரித கண்ணசைவுகளால(து.க) ஏற்படுற கனவுகளுக்கு என்ன முக்கியத்துவம்ணா பொதுவாக இந்தக் கனவுகளின்போது நம் உடலும் பல மாற்றங்கள் அடையுது. அதாவது நம்ம மூளை அதுபாட்டுக்கு ஏதேதோ எலக்ட்ரோமேக்னட்டிக் - மின்காந்த- அலைகள அனுப்பிகிட்டேயிருக்கிறதால, நம்முடைய உடலும் கனவில் செயல்பட ஆரம்பிக்குது.

ரெம்ப அறிவியலா? சரி சுவாரஸ்யமா ஒண்ணு... நீங்க எனக்கும் இந்தக் கதைக்கும் முக்கியமான ஆளுங்றதால சொல்றேன். கனவுகளை ரெக்கார்ட் செய்யும் கருவி ஒண்ண கண்டுபிடிச்சுட்டேன். ஆச்சர்யமா இருக்குதா? அறிபுனைண்ணு சொல்றாங்களே சைன்ஸ் ஃபிக்ஷன் அதுபோல இருக்குதா? ம். கொஞ்சமாவது சுவாரஸ்யம் வந்திருக்கணும்.

கண்ணின் அசைவுகள், உள்ளே நடக்கும் வேதியல் விளைவுகள் கூடவே மூளையின் ஒளியுணர்(light-sensing) மின்காந்த செயல்பாடுகள் எல்லாத்தையும் தனித்தனியே பதிவு செஞ்சு, வரிசைப்படுத்தி ஒருங்கிணைத்தால் ...டட்ட டைங்... ட்ரீம் வொர்க்ஸை விட சிறந்த திரைப்படங்கள். Dream Capture works. Yes it works. சராசரி மனித வாழ்க்கையில் நீங்களும் நானும் மொத்தம் ஆறு வருடங்கள் கனவிலேயே செலவிடுறோமாம். இல்ல. பகல் கனவு இதுல சேத்தியில்ல.

இதுவரைக்கும் நான் சொன்னதுல பாதி அறிவியல் மத்தது ப்ரூடாவாத் தோணும் இருந்தாலும் உங்களுக்கு சம்மதம்ணா கடந்த இரண்டு வருடமா என்னோடக் கனவுகள சேமித்து வச்சிருக்கேன். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். பாருங்க. அதுக்கு முன்னால நான் சொல்றத நம்பிக் கேளுங்க. அறிவியலும்கூட நம்பிக்கையை முன்வச்சித்தான் இயங்குது.

கனவுகள் ஆழ்மனதின் ஏக்கங்களையும் நமது முந்தைய (விலங்குகள் போன்ற) பாரம்பரியத்தின் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளையும் நாம் நிறைவேற்றிக்கொள்ளும் வழி என சிக்மண்ட் ஃப்ராயிட் சொல்லிருக்காரு. அது அந்தக்காலம். அவரின் சீடரே இதை மறுத்திட்டாரு. கனவுகள் பற்றிய பல தியரிகளும் இப்ப இருக்குது. உங்களுக்கும் ஒன்றை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு Wet dream - ஈரக் கனவு- அப்படீன்னா என்னண்ணு ஒரு தேடல் செய்யுங்க. உங்களுக்கு அந்த அனுபவம் இருந்துதாண்ணு பாருங்க. எப்படி உங்களை அறியாமலேயே உங்கள் உடல் ஒரு கனவையும் நிகழ்த்தி அப்படி ஒரு செயலை செய்தது எனப் புரிய முயலுங்கள். நீங்களே ஒரு தியரியை உருவாக்கலாம்.

ஆனா உங்க தியரியையெல்லாம் என்னுடைய ஆராய்ச்சி ஏற்கனவே முறியடிசிடுச்சி. ஏன்னா கனவுகள் என்ன எபதை நான் கண்டறிந்துவிட்டேன். கனவுகள் ஃப்ராய்ட் சொல்றாப்புல ஆழ்மனக் கிடக்கைகள் அல்ல. வேறு சிலர் சொல்றாப்புல நம்முடைய பிரச்சனைகளை தூக்கத்துல மூளை களையப்பாக்கும் வித்தையும் அல்ல. அல்லது மூளையின் வெறும் மின்காந்த வீச்சு விளையாட்டும் அல்ல. நம் கனவுகள் சொல்றதெல்லாம் நம்முடைய அடுத்த பிறவியில என்ன நடக்கும்றதத்தான். நம்ப முடியலைல்ல? என்னுடைய ஆராய்ச்சி மேல சந்தேகம் வருதுல்ல? இதெல்லாம் வெறும் கற்பனைன்னு தோணுதா? சில நேரங்கள்ல அறிவியலையும் நம்பிக்கை அடிப்படையிலத்தான் புரிஞ்சுக்க முடியும். தர்க்க ரீதியா எல்லாத்தையும் அறிவியலால கூட அணுக முடியாது. அட் லீஸ்ட் இன்றைய நிலையில்.

என்னுடைய ஆராய்ச்சியின் விபரங்களையும் அறிவியல் நுணுக்கங்களையும் சொல்லி நான் போரடிக்க விரும்பல. [இன்னும் சில வருஷங்கள்  கழித்து செய்தித் தாளிலேயோ, டி.வியிலேயோ என் ஆய்வைப்பத்தி நாலு வரி சொல்லுவாங்க. தெரிஞ்சுக்குவீங்க. அப்ப எந்தக் கேள்வியும் கேக்காம நம்பிடுவீங்க. ] ஆனா இன்னொரு அறிவியல் குறித்து உங்களுக்கு கொஞ்சம் சொல்லியாகணும்.

மரபியல் - Genetics - மரபணுவியல்ணும் சொல்லலாம். அதாவதுங்க உங்க தாத்தாவுக்கு சர்க்கரை வியாதி இருக்குதுண்ணு வையுங்க. உங்க அப்பாவுக்கு சர்க்கரை வியாதி வர்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்குது. உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ச.வி இருக்குதுண்ணா உங்களுக்கு வர வாய்ப்பு இன்னும் அதிகம். உங்களுக்கு உங்க அப்பாவின் மூக்கும் அம்மாவின் கண்ணும், பாட்டியின் கலரும், உங்க குடும்பத்து சராசரி உயரமும், மாமாவின் குரலும், சித்தப்பாவின் தலைமுடியும், சரவண பவன் பாலாப்பம் மேல தீராத ஆசையும் வர்றதுக்குக் காரணம் மரபணு. ம்ம்ம். பாலாப்பம் பத்தி உறுதியா சொல்ல முடியாது.

நீங்க கருவாகையில உங்க அம்மாகிட்டேர்ந்து 23 க்ரோமோசோம்களையும் உங்க அப்பாகிட்டேர்ந்து 23 க்ரோமசோம்களையும் வாங்கிகிட்டீங்க. (இதத்தான் பெத்த கடன்னு சொல்றாங்கபோல). அப்போ அந்த 46 க்ரோமோசோம்கள்தான் நீங்க. இதுல 44 க்ரோமோசோம்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. அதாவது உங்க அக்காவுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் இரண்டே இரண்டு க்ரோமொசோம்கள்தான். மீதமிருக்கிற ரெண்டும் எக்ஸ் - X ஆ இருந்தா பெண்குழந்தை. ஒண்ணு X ஒண்ணு Y இருந்தா ஆண் குழந்தை. பெரிய கம்பசூத்திரம்தான். இருந்தாலும் புரிஞ்சுக்கு முயலுங்க.

இந்த க்ரோமோசோம்களுக்குள்ளிருக்கிற டி.என்.ஏ மரபணுக்கள்தான் நம்முடைய உடல் பாகங்களின் தோற்றத்தையும், செயல்பாடுகளையும் நிர்ணயிக்குது. உடலில் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும் டி.என்.ஏக்கள் அந்த செல் என்ன செல், எதைச் செய்யும் செல், மூளை செல்லா, தோலா, நரம்பா, முடியா நகமாண்ணு முடிவு செய்யுது.

இதன் தொடர்ச்சியா நம்முடைய உடல்நலம், தோற்றம் மட்டுமில்லாம நம்மோட குணாதிசயங்களையும் மரபணுக்கள் நிர்ணயிக்குதாண்ணு ஆராய்ச்சிகள் நடந்துகிட்டிருக்குது. அந்தத் துறைக்குப் பேரு Behavioural Genetics. அதாவது குணம்சார்ந்த மரபியல்.

இப்ப என்னுடைய கனவுகளுக்கு வருவோம்.

என்னுடைய கனவுகளில் என்னுடைய அடுத்த பிறவி குறித்த செய்திகள் தெரிந்தன. கிட்டத்தட்ட பத்தாயிரம் கனவுகளை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு திட்டவட்டமான நிகழ்வு குறித்து என் கனவுகளில் தோன்றுவது புரிந்தது. இதை உங்களிடம் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும்.

என்னுடைய மறு பிறப்பு எத்தனை ஆண்டுகள் கழிச்சுண்ணு துல்லியமாத் தெரியல ஆனா தூரத்து எதிர்காலம்தான் அது. அப்ப நான் அதிகாரம் மிக்க ஒரு ஆளா இருக்கிறேன். ஒரு நாட்டின், ஏன் உலகின் தலைவனாகக்கூட இருக்கலாம். மனிதர்கள் எல்லாம் கெட்டவர்களாகிக்கிட்டே இருக்கிறாங்க. சிறைகள் நிரம்பி வழியிறநிலை. மரபணுக்கள் வழியே தலைமுறை தலைமுறையா வந்து சேருகிற குப்பையான, குறைபாடுள்ள குணாதிசயங்கள். மனிதனை மனிதன் சந்தேகப்படுவது, சின்னச் சின்ன குழுக்களாக நின்னு ஒன்றை ஒன்று வெறித்தனமா தாக்குறது, அளிக்கிறது, எளியவர்களை மதிக்காதது, நேர்மையின்மை, ஏமாற்றுறது என பல தலைமுறைகளாக மனிதனின் மரபணுவில் பதிக்கப்பட்டிருக்கிற மோசமானவைகளெல்லாம் உயிர்பெற்று உக்கிரத்தோடு அலைகிற ஒரு தலைமுறை அது.

இதை சரி செய்யும் பொறுப்பு என்னுடைய தலையில் விழுது. குணாதிசய மரபணுக்களை பிரித்தெடுத்து சரிசெய்ய ஒரு ரெஃபெரன்ஸ் தேடுறோம். என்னைப்போல அறிவாளிகளாகவே எல்லோரும் மாறிவிடக்கூடாது என்பதால் ஒரு நல்ல சாமான்யனின் மரபணு ஒன்றைத் தேடுகிறோம். நல்ல் என்பதில் அழுத்தம். எந்தவித சூப்பர் பண்புகளும் இல்லாத வெறும் சாமான்யன். ஆனால் நல்லவன். இயல்பாகவே மானுட ஒழுக்கத்தில் சிறந்தவன். குற்றங்களைச் செய்யத் தயங்குபவன். வழி வழியாக அவனது முன்னோர்கள் காட்டாற்றில் கட்டையைப் போல, சமூகச் சீர்கேட்டால் அடிக்கப்பட்டுச் செல்லப்படாமல் ஒட்டு மொத்த மனிதத்தின் நிகழ்காலமும், எதிர்காலமும் தன் வாழ்க்கை முறையினால் மரபணுமூலம் பாதிக்கப்படும் என்கிற உன்னத அறிதலின்பேரில் நடந்துவந்திருப்பார்கள். அவனுடைய மரபணுவிலிருந்து மற்றவர்களின் மரபணுவை மாற்றியமைக்க வழியைப் பெற்று மனிதத்தை புதுப்பிக்கிறோம்.

இந்த இடத்துலதான் நீங்க வர்றீங்க.

Copyright © 2005 Tamiloviam.com - Authors