தமிழோவியம்
திரைவிமர்சனம் : சுப்ரமணியபுரம்
- மீனா

1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை... காதலையும், வீரத்தையும் சொல்லி பழகிய தமிழ்சினிமாவுக்கு பாலா, அமீரின் வாரிசாக வந்திருக்கும் புதுமுக இயக்குனர் சசிகுமார் காட்டியிருக்கிற துரோகம் புதுசு. அதிலும் உயிர் நண்பனே நண்பனுக்கு செய்யும் துரோகம்..

Subiramaniapuramஎண்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. மதுரை - சுப்பிரமணியபுரத்தில் அழகன்(ஜெய்), பரமன்(சசிகுமார்), காசி(கஞ்சா கருப்பு), சித்தன், தும்கான் ஐவரும் நண்பர்கள். சித்தனின் சவுண்ட் சர்வீஸ் கடைதான் மற்ற நால்வருக்கும் புகலிடம். அழகன், பரமன் மற்றும் காசியும் உள்ளூர் அரசியல் புள்ளி சமுத்திரக் கனியின் அடியாட்களாக வலம் வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சமுத்திரக் கனியின் அண்ணன் மகள் ஸ்வாதியை ஜெய் காதலிக்கிறார். உள்ளூர் அரசியல் மோதலில் தங்கள் பதவியை இழக்கும் சமுத்திரக் கனியும் அவரது அண்ணனும் எதிரிகளை பழி தீர்க்க ஜெய், சசி மற்றும் கஞ்சா கருப்பை ஏவுகிறார்கள். சமுத்திரக்கனியை முழுவதுமாக நம்பும் ஜெய், சசி மற்றும் கஞ்சா கருப்பு மூவரும் இணைந்து எதிர்கோஷ்டித் தலைவரை போட்டுத் தள்ளுகிறார்கள். கஞ்சா கருப்பை அனுப்பிவிட்டு ஜெய்யும் சசியும் சமுத்திரக்கனி எப்படியும் தங்களை ஜாமீனில் எடுப்பர் என்ற நம்பிக்கையில் போலீசில் சரணடைகிறார்கள். ஆனால் மீண்டும் பதவிக்கு வரும் சமுத்திரக் கனி, தனக்காக சிறைக்குப் போனவர்களைக் கைகழுவி விடுகிறார்.

ஒருவழியாக படாதபாடுபட்டு வெளியே வரும் நண்பர்கள் இருவரும் சமுத்திரக்கனியைக் கொல்ல சரியான நேரம் பார்க்க - அவரோ தன் அண்ணன் மகளுடன் ஜெய்க்கு உள்ள காதலையே சாக்காக வைத்து அவரைக் கொன்றுவிடுகிறார். நண்பனைக் கொன்ற சமுத்திரக்கனியை சசி பழிவாங்க - சசியை யார் பழிவாங்கினார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.

சென்னை -28-ல் பத்தோடு பதினொன்றாக வந்த ஜெய்க்கு இதில் நாயகன் வேடம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். முக்கியமாக தன் காதலியை பார்த்தவாரே கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டாதது போல் எழுந்து நின்று சிரிப்பது சூப்பர்..

பழைய ஸ்டெப் கட்டிங், பெ‌ல்பாட்டம், கண்ணாடி, பெரிய காலர் சட்டை, தாடி என 1980-க்கான எல்லா விஷயங்களையும் திரையில் விரிய விட்ட இயக்குனர் சசிக்குமாருக்கு பாராட்டுகள். தயாரிப்பு, இயக்கத்தில் மட்டுமின்றி, நடிப்பிலும் அசத்துகிறார். அந்த முரட்டுத்தனமான முகமும், உணர்ச்சியை மறைத்த அவரது பேச்சுமே அந்தப் பாத்திரத்துக்கு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

காசியாக வரும் கஞ்சா கருப்பு காமெடியில் கலங்க அடிக்கிறார். சைக்கிள் கடை சித்தனுக்காக கஞ்சா கருப்பு மெனக்கெடும் காட்சிகள் சிரிப்பு தோரணம். சீரியல் செட் ஆர்டர் எதிராளிக்கு போன ரகசியத்தை, கருப்பு கண்டுபிடிக்கையில் சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம். ஊனமுற்ற இளைஞராக வரும் மாரி அசத்துகிறார்

ஜெய்யின் காதலியாக வரும் சுவாதி தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். முக்கியமாக அழகரை எதிரிகள் சூழும் இடத்தில் அவர் கதறுவது உறைய வைக்கிறது. ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்கத் தெரிந்த ஒரு நாயகியை, அதிலும் முதல் படத்திலேயே அசத்தும் நடிகையைப் பார்த்த சந்தோஷம் நமக்கு.

சினிமாத்தனமான வில்லனாக இல்லாமல், நிஜத்தைப் பிரதிபலிக்கும் சமுத்திரக் கனி சிறப்பான தேர்வு. ஆட்டோவில் அவர் சசியிடம் மாட்டும் இடம் அபாரம்..

ஆர்.எஸ். கதிரின் ஒளிப்பதிவும், ஜேம்ஸ் வசந்தனின் இசையும் படத்துக்கு பலம் கூட்டுகின்றன. குறும்புத் தனமும், கிண்டலுமாக முதல் பாதி போகும் வேகம் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் படம் வழக்கமான பழிவாங்கல் படலத்தில் சிக்கும் போது கொஞ்சம் தடுமாறுகிறது - அதுவும் ஆக்ரோஷமான அந்தக் கொலைகள் பதறவைக்கின்றன. ஆனாலும் முதல் படத்திலேயே இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று அவதாரம் எடுத்து இருக்கும் சசிகுமார் பாராட்டுக்கு உரியவர். கத்தியெடுத்தவனுக்கு அந்தக் கத்தியால்தான் சாவு என்ற பழைய கதைதான் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் முதல் படத்திலேயே அபாரமாக ஜெயித்துவிட்டார் இயக்குநர் சசிகுமார்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors