தமிழோவியம்
தராசு : பொறுப்பற்ற அரசியல்வாதிகள்
- மீனா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தீவிரவாதம் மற்றும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பியுள்ளார்கள். சபை அலுவல்களைத் தொடர இயலாததால் சபாநாயகர் அவையை ஒத்திவைத்துள்ளார்.

நம் அண்டை நாடுகளிலும் சரி, மற்ற வெளிநாடுகளிலும் சரி - நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதாவது ஒரு சின்ன இடைஞ்சல் என்றாலே அந்நாடுகளில் உள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆட்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை பாதுகாக்க தாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான விவாதங்களிலும் அவற்றை செயலாக்கும் வழிமுறைகளிலும் உடனடியாக ஈடுபடுகிறார்கள்.

ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது? நாட்டில் தலைவிரித்தாடும் அனைத்து தீவிரவாத செயல்களுக்கும் கொஞ்சமும் யோசிக்காமல் ஆளும் கட்சியைக் குறைகூறுவதைத்தான் நம் எதிர்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இது விலைவாசி உயர்விற்கும் பொருந்தும். எதற்கெடுத்தாலும் ஆளும் கட்சியைக் குறைகூறுவதால் மட்டும் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா?

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடுவதே மக்களின் பிரச்சனைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்துஒரு நல்ல முடிவு காண்பதற்காகத்தான். தாங்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் பிரதிநிதிகள் நிச்சயம் தங்களுக்கு ஏதாவது நல்லது செய்வார்கள் என்று அப்பாவி மக்கள் காத்துக்கொண்டிருக்க, அவர்களது வரிப்பணத்தை கோடிகோடியாய் செலவளித்து அம்மக்களுக்காக நடக்கும் கூட்டத்தொடர்களை புறக்கணித்துக் கொண்டிருப்பதைத் தவிர இந்த அரசியல்வாதிகள் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.

ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டவும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது அரசு. இக்கூட்டத்தொடரில் பங்கெடுக்க வரும் எம்.பிக்கள் அனைவருக்கும் உணவு,  தங்குமிடம், போக்குவரத்துசெலவு உள்பட அனைத்தும் இலவசம். இத்தனை இலவசங்களையும் கூசாமல் அனுபவித்துக்கொண்டே நாடாளுமன்றக் கூட்டங்களைப் புறக்கணிப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல?

அரசியல்வாதிகளே ! நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, விலைவாசி ஏற்றம் போன்ற விஷயங்களில் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மக்களைப் பற்றியும் நாட்டைப்பற்றியும் கொஞ்சமாவது சிந்திக்கத் தொடங்குங்கள். ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுங்கள். இத்தகைய விவாதங்கள் நடக்கும் முக்கிய இடமான நாடாளுமன்றக் கூட்டங்களை புறக்கணிப்பதை விட்டுவிட்டு அக்கூடங்களில் கலந்துகொள்ளுங்கள். இந்நாடும் நாட்டுமக்களும் வேறு வழியிலாமல் உங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors