தமிழோவியம்
ஹல்வா : 'தி கப்'
- விஜய்

1951-ம் ஆண்டு வரை 'உலகத்தின் கூரை' என்றழைக்கப்படும் திபெத் தனிநாடாகத் தான் திகழ்ந்தது. 14வது தலாய்லாமா புத்தமத பூமியாக திகழும் திபெத்தின் அதிகாரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டதுடன், திபெத்தின் தேசிய மதமாகிய புத்தமதத்திற்கும் குருவாக இருந்தார்.

1949-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் பார்ட்டி சீனாவின் மக்கள் குடியரசை கைப்பற்றிய போது திபெத்துக்கும் கஷ்டகாலம் ஆரம்பித்தது. சீனாவை சார்ந்த பிரதேசங்களான திபெத், ஹெய்னன், தைவான் முதலான பிரதேசங்களை சீனாவுடன் இணைக்க சீனாவின் மக்கள் விடுதலை இயக்கம் ஆவல் மிகக் கொண்டது. அப்போதைய சீனத் தலைவரான மாசேதுங் இந்த பிரதேசங்களின் தலைவர்களை உடன்படிக்கைக்கு அழைக்க, எதுவும் பயனில்லாமல் முடிந்துப் போனது.

அக்டோபர் 7, 1950-ல் சீனாவின் செம்படை திபெத்தின் பல இடங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. இரண்டே நாட்களில் 40 ஆயிரம் செம்படை வீரர்கள் மொத்தமே 8 ஆயிரம் வீரர்கள் உள்ள திபெத் ராணுவத்தை எளிதில் வென்றது. திபெத் படையில் பாதி பேரை சீனப்படைகள் கொன்று குவித்தது. உலக நாடுகளின் வற்புறுத்தலால் கண் துடைப்புக்காக மே 27, 1951-ஆம் ஆண்டு 17 குறிப்பு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டது.

அதை தொடர்ந்த ஆண்டுகளில் 17 குறிப்பு உடன்படிக்கையை சீனா குப்பையில் போட்டுவிட்டு அதன் ஆக்கிரமிப்பை திபெத்தில் தொடர்ந்தது. சில வருடங்களில் ஏறக்குறைய அரை மில்லியன் திபெத்தியர்களை கொன்று குவித்தது. 6 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தமத புனித இடங்களை சீனா இடித்து தள்ளியது. 10 மார்ச் 1959-ம் ஆண்டு சுதந்திரத்தை வேண்டி திபெத் தலைநகர் லகாசாவின் திபெத்தியர்கள் எதிர்ப்பை பலமாக காண்பிக்க, சீனாவின் இரும்புகரத்தால் ஒடுக்க, தலாய்லாமாவும், அவரைத் தொடர்ந்து 80000 புத்த துறவிகளும் இந்தியாவில் அகதிகளாக புகுந்தனர். அந்தகாலம் தொட்டு இந்தியா எல்லைப்பகுதியிலும், பூடானை ஒட்டிய பகுதியிலும் அவர்கள் வாழ ஆரம்பித்தனர்.

இந்திய-திபெத் எல்லையில் அமைந்த ஒரு புத்த மடத்தில் நிகழும் ஒரு கதையாக 'The cup' என்ற திபெத்திய படம் எடுக்கப்பட்டுள்ளது. 'தி கப்' படத்திற்கும் மேல் சொன்ன வரலாற்றுக் கூற்றை சொல்லவிட்டாலும் அது ஒரு இழையாக இந்த படத்தில் வருகிறது. 'தி கப்' என்ற படம் கால்பந்தின் மேல் பைத்தியமாக இருக்கும் பதின்ம வயது இளம் புத்ததுறவிகளைப் பற்றியது.

'தி கப்' படத்தை இயக்கிய இயக்குநர் Khyentse Norbu உண்மையிலேயே ஒரு புத்த துறவி. நோர்பு என்ற புத்ததுறவி அமெரிக்காவில் திரைப்படத்துறைய படித்து அவர் இயக்கிய முதல் படம் 'தி கப்'. இயக்குநர் மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரும் திரைப்படத்துறைக்கு மிக மிக புதியவர்கள். விளையாட்டு பிள்ளைகளாக இருக்கும் இளம் புத்தத்துறவிகள் கால்பந்து விளையாட்டின் மீது வைத்திருக்கும் அதீத ஆர்வத்தில் புத்தமடத்தில் நிகழும் நிகழ்வுகளை விறுவிறுப்பாக கருத்துடன் இந்த படம் விளக்குகிறது.

இந்த படத்தின் கதை உள்மன உணர்வை நுண்மையாக பிரதிபலிக்கும். இந்தியாவை ஒட்டிய பூடான் பகுதியில் அமைந்திருக்கும் அந்த புத்தமடத்தை திபெத்தில் நிலமை சீரானதும் தன் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்து திபெத்துக்கு திரும்பி செல்ல தயாராக இருக்கும் வயதான ஒரு துறவியும், அவருக்கு கீழே 'கெக்கோ' என்ற துறவியும் நிர்வகித்து வருகிறார்கள். அவர்களுக்கு அக்காலம் மாதிரியாக இளம் துறவிகள் இக்காலத்தில் இல்லை என்ற கவலை. இக்கால இளம் துறவிகள் பலவிதமான பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள் என்ற கவலை எப்போதும் அவர்களுக்கு உண்டு.

வறுமையால் வாடும் ஒரு திபெத் குடும்பத்திலிருந்து ஒரு சிறுவனும், பதின்ம வயதிலிருக்கும் அவனுடைய மாமனும் அந்த மடத்தில் சேருகின்றனர். பல்டன் என்ற அந்த சிறுவனுக்கு அவன் தாய் கொடுத்த ஒரு சின்ன கடிகாரம் தான் அவனுக்கு ஆறுதல். வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் அந்த கடிகாரத்தை கையிலேயே வைத்து கொண்டிருப்பான். அந்த மடத்திலிருக்கும் ஒரேய்ன் என்ற சிறுவன் கால்பந்து விளையாட்டுக்கு அடிமை. அவனது பேச்சு எல்லாமே கால்பந்தைப் பற்றி தான். அதுவும் உலகக்கோப்பை நடந்து கொண்டிருக்கும் அந்த சமயத்தில் திருட்டுத்தனமாக இரவு மடத்திலிருந்து வெளியேறி பக்கத்து கிராமத்துக்கு சென்று டிவியில் கால்பந்து விளையாட்டை தன் நண்பர்களுடன் பார்த்து மகிழ்கிறான்.

ஒரேய்னால் கால்பந்து விளையாட்டு ஆர்வம் புதிதாக சேர்ந்தவனுக்கும் தொற்றிக்கொள்கிறது. உலகக்கோப்பை ப்ரீ பைஃனல் பார்க்க மடத்தை விட்டு அவர்கள் வெளியேற நிர்வாகியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். திரும்பவும் இந்த மாதிரி நிகழ்ந்தால் நிர்வாகி மடத்தை விட்டு வெளியேற்று விடுவார் என்ற பயம் ஒரு பக்கம் இருக்கிறது. உலகக்கோப்பை ஃபைனலை பார்த்துவிட வேண்டும் என்ற வெறி தொற்றிக் கொள்ள அன்று ஒரு நாள் இரவு மட்டும் டிவியை வாடகைக்கு வாங்கி கால்பந்து விளையாட்டை பார்க்க அனுமதிக்கும் படி கெக்கோவை மன்றாடுகிறார்கள். கால்பந்து என்றால் என்னவென்று தெரியாத தலைமைத் துறவி அவர்கள் ஆசையை மறுத்தால் தவறான முறைக்கு வழிவகுக்குமென நினைத்து அன்று இரவு மட்டும் டிவி பார்க்க அனுமதிக்கிறார். ஆனால் அதற்கு ஆகும் செலவை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கறராகச் சொல்லி விடுகிறார்.

டிவி வேண்டுமென்றால் மடத்தின் பக்கத்திலிருக்கும் ஒரு இந்தியனிடம் டிவியையும், டிஸ்ஸையும் வாடகைக்கு வாங்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும். ஒரேய்ன் ஆர்வ மிகுதியால் மற்ற இளம் துறவிகளிடம் இருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பணத்தையும் சேர்த்து மறுநாள் டிவியை வாடகைக்கு எடுக்க செல்கின்றனர். உலகக் கோப்பை பைனல் ஆகையால் டிவி கடைக்காரன் டிவி வாடகையை ஏற்றிச் சொல்ல இன்னும் 50 ரூபாயைத் தேட வேண்டியதாகிப் போகிறது. பல்டன் சிறுவனிடம் இருக்கும் கடிகாரம் ஞாபகம் வர, மறுநாள் எப்படியாவது திருப்பி தந்து விடுவதாகச் சொல்லி கடிகாரத்தை வாங்கிக் கொள்கிறான். டிவி காரனிடம் அந்த கடிகாரத்தை தவணை வைத்து டிவியை வாடகைக்கு எடுக்கிறார்கள்.

டிவி வந்த சந்தோசம் மடத்தில் இருக்கும் எல்லா துறவிகளுக்கும் எற்படுகிறது. ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். சந்தோசத்தால் திக்கு முக்காடிப்போகிறார்கள். சிறுவர்களே சேர்ந்து டிவியில் படம் தெரியவைக்கப் படாதப்பாடு படுகிறார்கள். ஆனால் தன் தாய்க் கொடுத்த கடிகாரம் பறிப்போன நிலையில் சிறுவன் பல்டன் மகிழ்ச்சியாக இல்லை. அவனைப் பார்த்து ஒரேய்னுக்கும் மனது குத்த ஆரம்பிக்கிறது. உலகக்கோப்பை ஆர்வத்தால் பல்டன் தாய் கொடுத்த அன்பு பரிசை நாளை தவணையிலிருந்து திருப்ப முடியுமா? முடியாதா? என்ற கவலை அவனைப் பாடாய்படுத்துகிறது.

டிவியில் உலகக்கோப்பை விளையாட்டும் ஆரவாரமாக ஆரம்பிக்கிறது. அந்த புத்தமடமே டிவியின் முன் குவிந்துக் கிடக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் காரணமான ஒரேய்னால் தீவிர கால்பந்து ரசிகனாக இருந்தாலும் அவன் செய்த குற்ற உணர்ச்சியால் ரசிக்க முடியவில்லை. விளையாட்டு உச்சக்கட்டத்தில் இருக்கும் போது தன் அறைக்கு திரும்பி சென்று அந்த சிறுவனின் கடிகாரத்தை தவணையிலிருந்து திருப்ப பணம் எங்கேயாவது இருக்கிறதா என அவன் உடமைகளை நோண்ட ஆரம்பிக்கிறான். இதை கவனித்துக் கொண்டிருக்கும் கெக்கோ என்ற தலைமை துறவி அவனிடம் சென்று தானே அனைத்திற்கு பணம் தருவதாகச் சொல்கிறான். ஒரேய்னும் தன்னை உணர்கிறான்.

மேல் விவரங்களுக்கு http://www.imdb.com/title/tt0201840/

(இந்தப் படத்தைப் பற்றிய விரிவான அலசல் அடுத்த வாரம் தொடரும்...)

Copyright © 2005 Tamiloviam.com - Authors