தமிழோவியம்
கவிதை : இவ்வளவுதானா ?
- சத்தி சக்திதாசன்


உணர்வுகளின் உள்ளே நுழைந்து
உறவுக்கடலின் ஆழம் உணர்ந்து
உள்ளச்சுமை¨யுடன் எழுந்து
உலகின் மாற்றத்தைப் புரிந்து
கேட்டது இவ்வளவுதானா ?

இதயத்தின் சுவர்களோடு மோதிய
இதயமற்றவர்களின் சுவாசம்
இல்லாத ஓசைகளின் ஒலியை
இருக்கின்ற வேளைகளில் புகுத்தி
இவ்வளவுதானா என்றபோது ......

வெறும் கலயங்களின் தாளம்
வெறுமையான வயிறுகளில்
வேதனையான காற்றாக மாறி
வெளிப்படும் விழிகளில் கண்ணீராய்
வெளிச்சத்தில் இருக்கும் மனிதர்
இவ்வளவுதானா இருட்டு எனும் போது ......

மாறாத மகத்துவம் உலகில்
மறையாத மனிதத்துவம் என்றே
மார்தட்டிக் கூறிகொண்டு ஏனோ
மறுபக்கம் பார்க்கும் கூட்டம்
மனிதர் என்று சொல்லும் போது
மனதில் எழுவது .........
இவ்வளவுதானா .......

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors