தமிழோவியம்
தராசு : தலை மறைவான மத்திய அமைச்சர்
- மீனா

சில ஆண்டு காலமாகவே இந்தியாவில் அமைச்சர்கள் பல விவகாரங்களில் சிக்கி வருகிறார்கள். அத்வானி மீதான ரத யாத்திரை வழக்கு, ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீதான ராணுவ ஊழல் வழக்கு, லல்லு மீதான பல வழக்குகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பல அமைச்சர்கள் இந்தியாவில் சுதந்திரமாகவும் ராஜ மரியாதையுடனும் உலாவி வருகிறார்கள். இவர்களில் பெர்ணான்டஸ் போன்றவர்கள் ஒப்புக்காகவாது தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்கள். ஊழலற்ற அரசாங்கம் அமைக்கப் பாடுபடுவோம் என்று ஒரு நாள் தவறாமல் பிரதமரும், சோனியாவும் அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Sibu Sorenஆனால் கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் சிபுசோரன் விவகாரத்தைப் பார்த்தால், பிரதமரும் சோனியாவும் சொல்வது சும்மா ஒப்புக்காக என்பது பட்டவர்தனமாகத் தெரிகிறது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக என்று சொல்லிக்கொள்ளும் விதமாக ஒரு மத்திய கேபினட் அமைச்சர் மீதே கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதும், அவரைக் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிரப்பிப்பதும், அதை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் அவர் தலைமறைவாவதும், அவர் ராஜினாமா செய்து விட்டார் என்று சிலர் கூறினாலும், " சிபு சோரன் இன்னும் மத்திய அமைச்சர் தான்! " என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பதும் நாட்டில் முதன் முறையாக நடக்கிறது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் சரணடையவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதிலும் மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் தன்னுடைய பொருப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். அப்படி இருக்க, அவர் ஓடி தலைமறைவாவது எந்த விதத்தில் சரியாகும்? இதற்கு சப்பை கட்டு கட்டும் விதமாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, " கைது வாரண்டி பிறப்பிக்கப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிடமாட்டார்.. " என்று கூறியுள்ளார்.

புதிய அரசு அமைக்கப்பட்ட நாள் முதலாகவே, " குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்கவேண்டும்! " என்று எதிர்கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றன. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக இந்தச் சம்பவத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்ட எதிர்கட்சிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கப்போகிறார்களோ தெரியாது.

இந்நிலையில் சிபு சோரனுக்கு பிரதமரும், அவரது நண்பர்களும் சொல்ல வேண்டிய அறிவுரை இதுதான். " முதலில் நீதிமன்றத்தில் சரணடையுங்கள். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கறையை நீக்கும் வழியைப் பாருங்கள். எல்லாம் நல்ல படியாக முடிந்தால் மீண்டும் ஏதாவது ஒரு அமைச்சர் பதவிக்கு அடி போடலாம்!! ".

பிரதமருக்கு நம் வேண்டுகோள் இதுதான். " நடக்கும் அரசாங்கத்தில் நீங்கள் மட்டும் சுத்தமானவராக இருந்தால் போதாது. கூடியவரையில் அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளை அமைச்சர்களாக்குங்கள். முடியவில்லை என்றால் கூட்டணியின் கட்டாயத்திற்காக - வழக்கு விவகாரங்களில் சிக்கியிருப்பவர்களை அமைச்சராக்கி அழகு பார்பதையாவது விட்டுவிடுங்கள். அப்படிச் செய்யவில்லை என்றால் கெடப்போவது உங்கள் பெயர் தான்!! "

Copyright © 2005 Tamiloviam.com - Authors