தமிழோவியம்
க. கண்டுக்கொண்டேன் : வழுக்கையான பெண்களைக் காதலியுங்கள்!
- ரமா சங்கரன்

பெண்கள் நிறைய செலவழிக்கும் போது கணவன்மார்கள் "கடைசில நான் 'போத்தா' ஆகிவிடுவேன்" என்று சொல்லும் பழக்கம் சிங்கப்பூரில் உண்டு. 'போத்தா' என்பது 'Botak' என்னும் மலாய் வார்த்தை. அதாவது மொட்டை என்று பொருள். ஆனால் இப்போது சிங்கப்பூரில் பெண்கள்தான் 'போத்தா' ஆகி வருகிறார்கள். வீட்டிலும் வெளியிலும் அதிக வேலை. அதனால் இவர்களுக்கு  மன உளைச்சல்; சரியான சாப்பாடு கிடையாது. உடல் ஆரோக்கியத்தை கவனிக்க நேரம் இல்லாத சூழல் என்று கடந்த வாரம் சானல் நியூஸ் ஏஷியா(13 ஜூலை)  தன்  செய்தியில் குறிப்பிட்டது. சிங்கப்பூரில் 1000 பேரை எடுத்துக் கொண்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. இதன்படி 51% பெண்கள் வழுக்கை பிரச்னையில் இருக்கிறார்கள். முடி கொட்டி முடிவில் வழுக்கை விழுவதால் கவலை கொண்டுள்ளார்கள். மற்றொரு கவலைக்குரிய செய்தி 70% ஆண்கள் வழுக்கை தலை பெண்களை காதலிப்பதற்கு தயங்குவதாக அச்செய்தி கூறுகிறது. சிங்கப்பூரர்களுக்கு  மட்டுமின்றி ஆசியர்களுக்கு முடிகொட்டும் பிரச்னை அதிகரித்து வருகிறது. "ஏஷியன் தலைமுடி" என்றே இதைத் தனியாக  வகைப்படுத்திக் கூறுகிறார்கள்.  

நாம் அயல்நாடுகளில் வசிக்கும்போது மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் போன்ற பெரிய கடைகளில் பெண்களுக்கான உள்ளாடைகள் வாங்கும்போது "ஏஷியன் சைஸ்" பிராக்கள் விற்கப்படுகின்றன. அதாவது  பெரிய அளவுகளிலும்,  வழக்கமான  அளவுகளில் பெரிய கப் சைஸ்களிலும் சற்று  மிருதுவான காட்டன்கள், உறுத்தாத  கம்பி பிரேம்கள் போட்டு தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் வகைகள் கூட உண்டு.  உலகப்புகழ் பெற்ற முடியலங்கார  நிபுணத்துவத்தில் சிறந்த  'லோரியால்' நிறுவனம் இதேபோன்று ஸ்பெஷலாக  ஆசியர்களின்  தலைமுடி பராமரிப்பில் பல ஆய்வுகளை செய்துள்ளது. ஆசியர்களின் தலைமுடிக்கென பல புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.   தலைமுடியை ஷாம்பு போடுவதற்காக  வாரம் ஒருமுறை சிறந்த சலூன்களுக்கு போகும் பழக்கம் சிங்கப்பூரர்களிடம் மட்டுமின்றி இப்போது சென்னையில் கூட பெண்களிடம்  காணப்படுகிறது. ஜப்பானின் லோரியால் நிறுவனம்  ஆசிய நாட்டவர்களின் தலைமுடி பற்றி உலகின் தலைசிறந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. " ஆசியர்களின் தலைமுடியில் 'static resistance' இயல்பாகவே அமைந்துள்ளது. இதனால் இதை சீப்பினால் வாரினாலே போதும். தலைமுடி உதிர்ந்து வீணாகிவிடும். வேறு காரணங்களே இல்லை" என்று இந்நிறுவனத்தின் இயக்குனரான பாட்ரிக் கானிவெ ஏஷியன் தலைமுடி பற்றிய லோரியால் அழகுப்பட்டறை  ஒன்றில் பேசினார். சிங்கப்பூரில் மரீனா ஸ்கொயர்  ஷாப்பிங் மாலில் உள்ள நவீன  சலூன் ஒன்றில் இப்பட்டறை நடந்தது.

நம் தலையில் ஒவ்வொரு முடியையும் சின்ன சின்ன ஸ்கேல்ஸ் மூடியிருக்கிறது. வீட்டுக்கூரையின் மேல் காணப்படும் ஓடுகளைப் போல. நம் இளமைக் காலங்களில் அவை இடைவெளி இல்லாமல் மூடிக் கிடக்கும். எனவே தலைமுடி உறுதியாகவும் பளபளவென்றும் இருக்கும். ஆசியர்களின் முடியில் இவை எளிதாக எகிறிக் குதிக்கும். தலையை சீவும்போது தலை கொறகொறவென்று உதிருவது போல காணப்படும். "தலைமுடியின் நடுநடுவே சின்ன சின்ன துவாரங்களும் கூட தென்படும். மைக்ராஸ்கோப் வைத்து பார்க்கலாம். அப்படி பார்க்கும்போது நிறத்தை தரக்கூடிய மாலிக்யூல்கள் கூட காணாமல் போனது  தெரியும்" என்கிறார் கானிவெ. அதுவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஈரப்பதவிகிதம் (Humidity) அதிகம். வெய்யிலும் உண்டு. புழுக்கம் ஜாஸ்தி. அதிகமாக வெய்யில் அடிக்கும்போது தலைமுடியில் உள்ள புரோட்டீன்களை உதிர்ந்து விடுகிறது. அதோடு ஈரப்பதவிகிதம் அதிகமாகும்போது அது முடியை ஆக்ஸிடைஸ் செய்து இன்னும் உதிரச் செய்கிறது. மழை பெய்யும்போது எப்படி உலோகங்கள் துருப்பிடிக்கின்றனவோ அப்படி முடியும் பாதிக்கப்படும் என்கிறார் அவர். தலைமுடியில் ஓட்டைகள் அதிகமாகும்போது ஈரத்தை அது சீக்கிரம் இழக்கும் என்றார் அவர்.

இப்போது வெய்யில் மட்டுமில்லை; தலைமுடியை நீட்டுவதால் அல்லது சுருட்டை முடியாக்குவதால் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் தலைமுடியின் பலத்தை அதிகப்படுத்தும் pH பாதிக்கப்படுகிறது. இதற்காக சலூன்களில் Redken Chemistry System  என்னும் லோஷன் மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது. இதோடு பல லோஷன்கள் ஒவ்வொருவரின் தலைமுடிக்கும் ஏற்ப கலக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்றார் அவர். முடியின் வேர்களில் பலமூட்ட ரெட்கின் உடன் Fuente என்னும் பொருளும் தலைமுடி உதிர்வதை தடுக்க Pantene Hair Fall உடனும் கலந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.   இதன் மூலம் சரியான ஈரப்பசை, உறுதி, பளபளப்பு கிடைக்கும் என்றார் கானிவெ. இத்தகைய சலூன்கள்  ரெட்கின் சலூன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.சில பேருக்கு தலைமுடி உதிர்வது பெரும்பிரச்னையாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 50-100 முடிகள் உதிர்கின்றன. பெண்களுக்கு பிள்ளை பேறுக்கு பின்னும் மாதவிடாய் நின்றபின்னும் தலைமுடி அதிகமாக உதிர்கிறது. ஆனால் இது மூன்று மாதங்களுக்குப் பிறகு நின்றுவிடும் என்றார். இதற்கென்று நல்ல ஷாம்பூகளை பயன்படுத்துவது அவசியம் என்றார் அவர்.

வயதாகும்போது தலைமுடியின் வளர்ச்சி மெதுவடையும். சாதாரணமாக மாதத்திற்கு 1.25 செமீ வளரும். ஆனால் வயதாகும்போது குறைகிறது. இதற்கு " miniaturisation" என்று சொல்லப்படுகிறது. ஆண், பெண் இருவருக்கும் இது ஏற்படுகிறது. இருவருக்கும் நரையும் ஏற்படுகிறது. ஆனால் பெண்களுக்கு நரை ஏற்படுவது சற்று வயதை அதிகமாகக் காட்டும். அதே சமயம் பெண்கள் தலைமுடியை வெவ்வேறான  நிறமாக்கிக் கொள்வதன் மூலம் வயதாவதை குறைத்துக் காட்ட முடியும். இது எல்லா ஆண்களுக்கும் சரிப்பட்டு வராது. அவர்கள் கருமை அல்லது அழுத்தமான பிரவுன் நிறங்களே பயன்படுத்தலாம். எப்படி தலைமுடியை சாயம் பூசிக் கொள்வது வயதைக் குறைக்கிறது?

தலைமுடியின் கியூட்டிகல்ஸ் உள்ளே நிறங்கள் சென்று புகுந்து கொள்ளும். இது மெலிதான முடியைக் கூட பருமனாகக் காட்டும்.  "பெண்கள் தம் வயதைக் குறைத்துக் காட்ட தலைமுடியை சாயம் பூசுங்கள். பின் அதற்கேற்ற ஷாம்பு, கண்டிஷனரை வாங்கிப் பயன்படுத்துங்கள்." என்று பட்டறை முடிவில் கானிவெ சொன்னார். நமது முடியின் பளபளப்பையும் அடர்த்தியையும் கூட்டி நம் வயதைக் குறைத்துக் காட்ட  லோரியால் "Age Recharge"  என்னும் புதிய சலூன் சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தலையை மசாஜ் செய்வது,  பின் மாஸ்க் (Age Recharge Firmimg  Maque)  போட்டு தலைமுடிக்கு இளமையும் உயிரும் ஊட்டுவது என்று 90 நிமிடங்கள் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

என் அம்மா எனக்கு தலைமுடியை வெட்டிக் கொண்டு பாப் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தபோதெல்லாம் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்வார். "I love my Hair" என்பதே அந்த புத்தகம். அது ஒரு ரஷ்ய நாட்டுக் கதை. அதில் கெயானா என்னும் ஒரு பெண் தன் நீண்ட முடியால் அவதிக்கு ஆளாகிறாள். பின் அந்த பெண் தன் முடியை பராமரிக்கவும் விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளவும் கற்றுக் கொள்கிறாள். எல்லோரின் கவனத்தையும் கவர்வாள். அவளுக்கு இப்போது தன் முடி மேல் காதல் பிறக்கும். எனவே நம் முடியை நாம் காதலிக்க வேண்டும். நம் முக அழகு, தோல் பராமரிப்பில் கவனம் செலுத்துவது போல முடியையும் பராமரிக்க வேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors