தமிழோவியம்
பருந்துப் பார்வை : மணல்மேல் கட்டிய மாளிகை
- மதுரபாரதி

இதை இங்கே எழுத நேராமலிருந்தால்
சந்தோஷப்பட்டிருப்பேன்.
வார்த்தைகள் தோற்கின்ற தருணம் இது.

வளமான கற்பனை இன்று எதிரியாகிப் போனது.
தீச்சிறகு விரித்து வரும் ஓலைக் கூரை
குழந்தைகள் மேல் அமர்வதைக்
கற்பனை செய்வதன் வலி எனக்குப் புரிவதனால்..

ஆனால் இதைத் தவிர்த்தல் சாத்தியமல்ல,
ஊற்றாக இருக்கும் கவிதைகள்
சிலசமயம் வடிகாலாகவும் ஆவதனாலே சொல்கிறேன்.

சபிக்கவும், சங்கடப்படவும், அரசியல் பேசவும்
என் சொற்கள் பின் வாங்குகின்றன.
இது அமைதிக்கான நேரம்.
சோகத்தின் அமைதி.
நானும் ஒரு தந்தை என்பதால்.

ஆனால் எனக்குத் தெரியும்
தாய் தந்தையரின் மனதுகள்
எளிதில் அமைதி அடைவதில்லை.
அவர்களின் ஓலம் என் நெஞ்செலும்பை
அதிரச் செய்கிறது.

இழக்காதவனின் அமைதியால் அவர்களுக்கு
ஆறுதல் இல்லை. ஆனாலும்
சில சொற்களின் கூட்டமைப்பில்
இரு நேசக்கரங்களை நீட்டி மட்டுமே
எனக்கு அணைக்கத் தெரியும் என்பதால்
இந்தக் கவிதை.

இதை இங்கே எழுத நேராமலிருந்தால்
சந்தோஷப்பட்டிருப்பேன். ஏனென்றால்
வார்த்தைகள் தோற்கின்ற தருணம் இது.


மேற்கண்ட கவிதையை கரிக்கட்டையாகிவிட்ட 93 வைரங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். வேறொன்றும் இதைப்பற்றிச் சொல்ல என் மனது மறுக்கிறது.

ஓலைக்கூரை, அருகிலேயே சமையல் கூடம், அவசரத்தில் வேலை செய்ய மறந்த மூளைகள் என்று தொடங்குகிற குற்றச்சாட்டுப் பட்டியல் யார்யாரையோ போய்த் தொடுகின்றது. நான் இதைப் பார்க்கும் விதம் இப்படித்தான்.

லஞ்சம் கொடுத்துவிட்டால் எதையும் செய்யலாம் என்கிற நிலைமை மாறும்வரை இந்த நாட்டில் இப்படி இன்னும் பல கொடூரச் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கும். இதிலே மிகப் பெரிய அரசியல்வாதியிலிருந்து, பள்ளிக்கூட ஊழியர் வரை எல்லோருமே குற்றவாளிகள்தாம். நிர்ணயித்த தரத்திலான சிமெண்டுக் கலவை போடாமல் கட்டப்படும் பாலம் இடிந்து விழுவதும், குறிப்பிட்ட வகுப்புவரை படிக்காதவன் பொய்ச்சான்றிதழ் கொடுத்து டிரக் ஓட்டுநர் உரிமம் பெறுவதும், வேண்டாத மனைவியை விலக்கிவைக்க அவளுக்குப் பைத்தியம் என்று கூறி ஒரு மருத்துவர் அவளைப் பார்க்காமலே சான்றிதழ் வழங்குவதும், நாட்டுக்கே மிக முக்கியமான இராணுவத்துக்கு வாங்கும் பீரங்கியிலிருந்து சவப்பெட்டி வரை அதில் கோடிகளைக் குவிப்பதும் - எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? திகைத்துப் போகிறேன். நீங்கள்?

ஆனால் நாம் எல்லோருமே இப்போது உயர்ந்த விழுமியங்களைச் சார்ந்து சிந்திப்பதற்குப் பதிலாக, நமது கட்சி சார்ந்து சிந்திப்பவர்களாக ஆகிவிட்டோ ம். ஒரு கட்சி வாங்கினால் அதை லஞ்ச லாவண்யம் என்று வார்த்தைப் பந்தல் போடும் நாம், இன்னொரு கட்சி செய்தால் கண்ணை மூடிக்கொள்கிறோம். யார் செய்தாலும் தவறு தவறுதான் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் எங்கே காணாமல் போய்விட்டார்கள்?

லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் தெரியாதவனை, மறுப்பவனை "பிழைக்கத் தெரியாதவன்" என்று சொல்லுமளவிற்கு இளைய தலைமுறையின் மனதுகூட மரத்துப் போய்விட்டது. ஒரு சமயத்தில் அகிலனும், நா.பார்த்தசாரதியும், ர.சு. நல்லபெருமாளும், பிற எழுத்தாளர்களும் சத்திய வேட்கை கொண்ட, ஏன், சத்திய ஆவேசம் கொண்ட இளைஞர்களை நாயகர்களாகக் கொண்ட படைப்புகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

பொதுவுடைமைத் தலைவர் ஜீவா ஒரு கூரைவீட்டில் இருப்பதை அறிந்து அவருக்கு வீட்டுமனை தருகிறேன் என்று முதல்வராயிருந்த காமராசர் சொன்னபோது வாங்கிக்கொள்ளமாட்டேன் என்று சொன்னார் ஜீவானந்தம்! பிரதமர் பதவியை நிர்ணயம் செய்யும் செல்வாக்கோடு வாழ்ந்த காமராசர் மறைந்து நெடுநாட்களுக்குப் பின், அவரது சகோதரியார் வறுமையில் வாடுவதாகப் பத்திரிக்கைச் செய்தி ஒன்று படித்த நினைவு இருக்கிறது. பா.ராமமூர்த்தியும், நம்பூதிரிப்பாடும் தமக்கிருந்த பெரும் செல்வத்தை உதறித் தள்ளிவிட்டு வந்து கொள்கைக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்தனர்.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது லால்பஹதூர் சாஸ்திரி முழு நேரக் காங்கிரஸ் தொண்டராக இருந்தார். அவருக்கு நான்கு ரூபாய் பிரதி மாதம் படி கொடுத்து வந்தது கட்சி. அதிலே குடும்பம் நடத்திவந்தார். அப்போது மற்றொரு தொண்டருக்கு அவசரமாய் இருபது ரூபாய் தேவைப்பட்டது. அவர் சாஸ்திரியிடம் கேட்டதற்கு என்னிடம் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டார். அவருடைய மனைவியாரிடம் கேட்டார் நண்பர். அவர் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேமித்து வைத்த பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

"இந்தப் பணம் ஏது?" என்றார் சாஸ்திரி.
"மாதாமாதம் நீங்கள் தரும் பணத்தில் சேமித்தது" என்றார் துணைவியார்.
"கட்சி நமக்குப் பணம் கொடுப்பது நமது அடிப்படைத் தேவைகளுக்காகத்தான். சேமிப்புக்காக இல்லை" என்று தன் மனைவியாரிடன் சொன்ன சாஸ்திரி, 'இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூபாய் 2 மட்டும் கொடுத்தால் போதுமானது' என்று காங்கிரஸ் கட்சிக்கு எழுதிக் கடிதம் எழுதிவிட்டார்.

மேற்கண்டவர்களைப் போல ஒரே ஒரு தலைவரை, மன்னியுங்கள், ஒரே ஒரு தொண்டரையாவது இன்று நம்மால் பார்க்க முடிகிறதா? முடியாது. ஏனென்றால் நாமெல்லாம் சமதர்மத்திலும், பகுத்தறிவிலும், சமூக நீதியிலும், விஞ்ஞான அறிவிலும் மிகவும் உயர்ந்துவிட்டோ ம். ஏராளமாகக் கோவில்களும், சர்ச்சுகளும், மசூதிகளும் போட்டிபோட்டுக்கொண்டு கட்டவும் தகர்க்கவும் செய்துவிட்டோ ம். நம்மிடையே சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், ஓவியர்கள் இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்கள் அதிகமாகிவிட்டார்கள். ஏராளாமான டாலர்களை நம் அறிவுத்திறனால் கொண்டு வந்து குவிக்கிறோம். கணினி நிரல் எழுதுவதில் நம்மை அடிக்க ஆளில்லை.

ஆனால், அடிப்படை ஒழுக்கத்தை இழந்துவிட்டோ ம்.

அடிப்படை ஒழுக்கம் இருக்கிற எவனும் லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டான். பொய் சொல்வதைச் சாமர்த்தியம் என்று கருதமாட்டான். போலீசுக்குப் பயந்து ஓடிவிட்டவர்களும், ஓடவேண்டியவர்களும் 'சட்டமன்ற'ங்களில் அமர்ந்து நம் போன்றவர்கள் பணிவதற்கான சட்டங்களை உருவாக்கிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

வெற்று வம்பு பேசுவதற்கு மட்டுமே எத்தனை பத்திரிக்கைகள்? ஒரு காலத்தில் மஞ்சள் பத்திரிக்கை என்று சில பேர் மட்டுமே ஒளித்துவைத்துப் படித்திருப்பார்கள். அத்தகையவற்றை எல்லாப் பெரிய வார இதழ் நிறுவனங்களுமே இன்று வெளியிடுகின்றன. அவற்றைப் படித்தால் "சரி, உலகில் இவ்வளவு பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் இருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் ஏன் ஒழுங்காக நடக்கவேண்டும்?" என்று தோன்றிவிடும். இந்தப் பத்திரிக்கைகளை ரயிலில், பேருந்தில், வீடுகளில் வைத்துப் படிக்கிறோம்.

தினமும் மாலையில் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்கள் சகமனிதர்களின்மேல், இரத்த பந்தம் உள்ளவர்கள் மேல் ஒருவருக்கு இருக்கும் எல்லா நம்பிக்கையையும் இழக்கவைப்பதாகவே இருக்கிறது. யாரையும் நம்பமுடியாது, எல்லோரும் இன்னொருவருக்குக் குழிபறிப்பதிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். எவனும் யோக்கியன் இல்லை. பணம் இருந்தால் எதுவும் செய்யலாம். இதுவே நமக்குத் தொடர்கள் - சின்னதும், பெரியதும் - கற்றுத்தரும் பாடங்கள். நம்மோடு உட்கார்ந்து பார்க்கும் சிறிசுகளின் மனதில் இவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நாம் சிறிதாவது யோசித்தோமா?

கட்சிகளும், நடிகர்களும், பொதுமக்களும் பணத்தைக் கொண்டுபோய்க் கும்பகோணத்தில் கொட்டிப் பிராயச்சித்தம் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். பணம் எல்லாவற்றையுமே வாங்கிவிடாது என்று உணரவேண்டிய தருணம் இது. இப்போதாவது புரிந்துகொள்ளாவிட்டால், மீண்டும் அதே தவறை வேறு விதங்களில் வேறு இடங்களில் இன்னும் கொடிய விளைவுகளோடு செய்வோம்.

லஞ்சம் என்கிற மணல்தளத்திலே இந்த தேசத்தின் சுபிட்சம் என்னும் பெருமாளிகையை அமைக்க முற்படுகிறோம். இது தவறு. நிலைக்காது. இதைப் புரிந்துகொண்டு திருந்தவேண்டும். இதற்குத்தான் வேண்டும் விழிப்புணர்ச்சி. லஞ்சத்தை எதிர்க்கும் அமைப்புகளும், தனிமனிதர்களும் பெருமளவில் திரளவேண்டும். இன்னும் பத்தாண்டுகளுக்குள் லஞ்சம் கேட்பது கொலைக்குற்றத்துக்கு இணையானதாக நம் ஒவ்வொருவராலும் கருதப்படவேண்டும். கேட்பவன் கூசிக் குறுகி நாண வேண்டும். இல்லையென்றால் கும்பகோணம் நமக்கு எதையுமே கற்றுத் தரவில்லை என்று அர்த்தம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors