தமிழோவியம்
இசை உலா : கண்ணன் பாடல்கள்
-

இந்த வாரம் நம்மோடு இசை உலா வருபவர் திரு. முரளி வெங்கட்ராமன். தென்.கரோலினாவில் P.hd பயிலும் இவர் இசையில் மிகுந்த ஈடுபாடும்  கொண்டவர். முறைப்படி சங்கீதம் கற்கவில்லையென்றாலும் இசையின் மீது இவருக்கு இருக்கும் ஆர்வம் கணக்கில்லாதது. இவர் தற்பொழுது 'கண்ணன் பாடல்கள்' என்னும் தலைப்பில் சில பாடல்கள் எழுதி அதை அவரே பாடியும் வருகிறார். இதைப் பற்றி அவர் சொல்லும் போது..

"கண்ணனின் பாடல்களில் யசோதைக்கு ஒரு முக்கியமான பாகம் உண்டு. அவள் அவனை சீராட்டி பாராட்டி வளர்க்கும் கதைகளை பாடலாக பாடுதல் மிக பிரசித்தம். எனக்கு தெரிந்து ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அவர்களே எளிய தமிழில் கண்ணனுடன் மிக அன்னியோன்னியத்துடன் பாடல் புனைந்தவரில் முதல்வர்.  "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி தாயே" என்று கோபிகைகள் யசோதையிடம் முறையிடுவது போன்ற ஒரு அற்புதமான ஒரு பாடல்.  தோடி ராகத்தில் அமைந்த பாடல் அது.  அது போன்று யசோதா சற்றே மறைத்து வைத்த பெருமையுடன் "நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்" என்று தன் மகனை பழிப்பது போல் புகழ்ந்து பாடுதலும் ஐயர் அவர்கள் பாடல்களில் கேட்கலாம்.  அது போன்று இல்லாவிடினும் அவரின் அடியொற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று எழுந்த அவாவில், நான் செய்த பாடல் இது. யசோதாவே பாடுவது போல் அமைந்துள்ளது.

"கண்ணிமைகள் தானே இமைக்கும்.  ஆனால் கால்கள் அவை போல் தானே ஆடக் கூடியதல்ல.  ஆனால் கால்களும் கண்ணனின் குழல் கேட்டால் தானே ஆடும்.  அவன் உண்ட வெண்ணையின் மிச்சம் அவன் சிவந்த உதட்டில் ரோஜா மலரின் மேல் பனி அமர்ந்தது போல் இருக்கின்றது.  அவனை பார்த்த உடன் என் தாய்மை பீறிட்டு எழுகின்றது.  பாலகன் என்று அவனை நான் தொழ மறுத்தால், அவன் அண்ட சராசரங்களை வாயில் காடி பயமுறுத்துகின்றான்.  அட, உன்னை என்னால் பிள்ளையாகத் தான் பார்க்க முடியுமே அன்றி இறைவனாகப் பார்க்க நேர்ந்தால், என் அன்பு குறைந்து விடுமே என்று நான் பதறினேன்.  அதைக் கேட்டு விட்டு அவன் குழந்தையாக ஆகி விட்டான்"

என்று பாடுகிறாள் யசோதா.  இந்தப் பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம். இணையதளத்தில் கிடைத்த தபேலாவின் மாதிரி இசைசுழற்சியை ( tabla sample loops) வைத்து ஒரு தடம் (track) செய்து கணினியில் என்னுடைய குரலோடு goldwave இல்பதிவு செய்த ஒரு முயற்சி இது.  இந்த பாடலுக்காக எந்த ஒரு ராகத்தையும் பிரதானமாக எடுத்துக்கொள்ளவில்லை.  பல்லவியில் கல்யாணியின் வாடையும், சரணத்தில் மாண்டு வின் வாடையும் அடிக்கலாம். நான் இதுவரை செய்த கண்ணன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என இதைச் சொல்வேன்.

இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்."

Download song


மேலும் இவரின் மற்ற பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors