தமிழோவியம்
தராசு : ரானேயின் காலையும் மாலையும்
- மீனா

Narayan Raneசிவசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாராயண் ரானே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் அவருக்கு மாநில கேபினட் மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக ஒரு காலத்தில் இருந்த ரானேக்கும் பால்தாக்ரேயின் மகனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரானே தனது ஆதரவாளர்களான 11 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸில் சனிக்கிழமை காலையில் சேர்ந்துள்ளார். மாலையிலேயே அவருக்கு காபினெட் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. என்னடா இது அதிசயம் என்று ரொம்பவும் நாம் ஆச்சரியப்படுவதற்கு முன்பாக இன்னொரு முக்கிய விஷயம் - மாலை பதவியேற்பு முடிந்த உடனேயே ரானே அளித்த பேட்டியில் "எனக்கு மத்திய மந்திரி சபையில் கேபினட் மந்திரி பதவி கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் எனக்கு மராட்டிய மக்கள் தான் முக்கியம் - அவர்களுக்கு பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன் என்று கூறி மாநில அமைச்சர் பதவியை ஏற்க முன்வந்தேன்.." என்று கூறி அசத்தியுள்ளார்.

ஏற்கனவே சிபுசோரனை மீண்டும் அமைச்சர் ஆக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட காங்கிரஸை மிரட்டி வரும் வேளையில் ரானேயின் இந்தப் பேச்சு நிச்சயம் டெல்லி அரசியலில் ஒரு சிறிய பூகம்பத்தையாவது நிச்சயம் கிளப்பும். காலையில் ஒரு கட்சியில் சேர்ந்தவருக்கு மாலையில் அமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் எந்த அளவிற்கு அரசியல் பேரம் நடந்திருக்கும்? ரானே சிவசேனாவிலிருந்து விலகியது அவரது சொந்தப் பிரச்சனைகளுக்காக. காங்கிரஸில் சேர்ந்தது தனக்கு ஒரு பெரிய கட்சி சப்போர்ட் வேண்டும் என்பதற்காக. இவர் கட்சிக்காக என்ன சாதித்தார் என்று மந்திரி பதவியைத் தூக்கிக் கொடுத்தார்களோ கடவுளுக்குத் தான் வெளிச்சம். மேலும் மராட்டிய காங்கிரஸில் பல ஆண்டுகளாக உண்மையாக உழைத்து வரும் தொண்டர்களுக்கு இந்த நிகழ்ச்சி எத்தகைய மனச்சோர்வை அளித்திருக்கும் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நினைக்காதது துரதிஷ்டமே.

ஒரு கட்சியிலிருந்து தாவி அடுத்த கட்சியில் சேர்பவர்களுக்குத் தான் எவ்வளவு மதிப்பும் மரியாதைகளும். இந்த மாதிரியான கட்சித்தாவல் காட்சிகளை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் தேர்தல் கமிஷன் - கட்சியிலிருந்து விலகும் போது ஒருவர் அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருந்தால் அவர் அடுத்த கட்சியில் சேரும் போது அப்பதவி பறிக்கப்பட்டு விடும் என்று சட்டம் இயற்ற வேண்டியதுதான். இதன் காரணமாக இடைத் தேர்தல்கள் மக்கள் மீது திணிக்கப்படும் என்றாலும் அந்தத் தேர்தலுக்காக ஆகும் செலவை அங்கு போட்டியிடும் கட்சிகள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறினால் போதும். இப்படி குரங்கைப் போன்று கட்சி தாவுவது பெருமளவில் குறையும். இதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யுமா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors