தமிழோவியம்
கட்டுரை : தமிழ் உணர்வு யாருக்கு ஜாஸ்தி?
-

கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த ஒரு வார இதழுக்காக கனடாவில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விடுதலைச் சிறுத்தை அமைப்பாளர் திருமா அளித்துள்ள பேட்டியைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் கொதித்துப் போயிருப்பான். மேலை நாட்டில் வாழும் தமிழ் மக்களை உயர்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்நாடுகளுக்கு வரும் திருமா, கமல் போன்றவர்கள் தமிழகத்தில் வாழும் தமிழர்களை மட்டம் தட்டி பேசுவதை ஒரு முக்கிய கடமையாகவே கொண்டுள்ளார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதே நேரத்தில் அமெரிக்கா வந்த பிரபஞ்சன் அமெரிக்க தமிழர்களின் வாழ்க்கையை மட்டம் தட்டி பேசியதும் நினைவிற்கு வருகிறது.

கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் மக்கள் 18 மணி நேரம் உழைக்கிறார்கள் - 20 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்கிறார்கள் என்றும் அவர்கள் பட்டு சேலை வேட்டி கட்டி ஜொலிக்கிறார்கள் என்றும் பெருமையாக பேட்டி கொடுக்கும் இவர்கள் - இதையெல்லாம் இங்கு வாழும் மக்கள் என்ன தினமுமா செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை செளகரியமாக மறந்து விடுகிறார்களே இது எந்த வகையில் நியாயம்?

புலம் பெயர்ந்தவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அங்கே தங்களால் முடிந்த அளவிற்கு இந்திய விழாக்களை கொண்டாட நினைக்கிறார்கள் என்பதும் தமிழை மறக்காமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை என்றாலும் தமிழகத்தில் வாழும் 6 கோடி மக்களை மட்டம் தட்டி தான் தங்களைப் புகழ வேண்டும் என்று நிச்சயம் நினைக்க மாட்டார்கள். இதே தான் தமிழகத்தில் வாழும் தமிழர்களின் நிலையும். தமிழகத்தில் இருக்கும் வரையில் தமிழில் பேசுவது - பழகுவது என்பவை தினமும் சுவாசிப்பதைப் போன்றது... மூச்சு விடுவது யாருக்கும் தெரியாவிட்டாலும் அது அந்நிச்சையாக நடக்கும் செயல்களில் ஒன்று. நீ மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாயா என்று நம்மிடம் யாரும் கேட்பதும் இல்லை.. நான் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன் - இதற்காக உனக்கு நன்றி என்று நாமும் மூக்கு மற்றும் உடலிலுள்ள மற்ற உறுப்புகளுக்கு நன்றி சொல்வதில்லை.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு கமல் போன்றவர்கள் படமெடுப்பதும் இல்லை, திருமா போன்றவர்கள் கட்சி ஆரம்பிக்கவும் இல்லை. இவர்கள் எல்லாம் தமிழகத்தில் வாழும் 6 கோடி தமிழர்களை நம்பித் தான் தங்கள் வேலையைச் செய்கிறார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். அதே நேரத்தில் பிரபஞ்சன் போன்றவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மொழிப்பற்றே கொஞ்சம் கூட இல்லை என்ற ரீதியில் பேசியதும் நகைப்பிற்குள்ளான விஷயம் தான். அங்கிருப்பவர்களுக்கு மொழிப் பற்று இல்லை என்றால் பிரபஞ்சனை விருந்தாளியாக அழைத்து எதற்காக இலக்கிய கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? இவரும் ஏன் அங்கே செல்கிறார்?

திருமா, கமல், பிரபஞ்சன் போன்றவர்களுக்கு - நீங்கள் ஒருவரை உயர்தி மற்றவரை மட்டம் தட்ட வேண்டும் என்று எந்தவிதமான அவசியமும் கிடையாது. எங்கேயிருந்தாலும் தமிழனுக்கு மொழி உணர்வு ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் அதை வெளிப்படையாக காட்ட இயலும் - சில இடங்களில் காட்ட இயலாது. எனவே ஒரு இடத்திற்கு விருந்தாளியாக வந்தால் அந்த இடத்தைப் பற்றி ஒரு வார்தை புகழ்ந்து பேசிவிட்டு கிளம்புங்கள். இந்த ஒப்பிட்டு பார்க்கும் வேலை எல்லாம் வேண்டாம்.

 

 

 


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors