தமிழோவியம்
கவிதை : சில நிமிடங்கள்.. சில உணர்வுகள்..
- சத்தி சக்திதாசன்

 

தவிக்கின்ற மனசுக்குள்
தனியான ராகம்
தாளங்கள் தப்புத் தப்பாக
தானாக பிறக்கின்ற வேளையிது

சில நிமிடங்கள் ...... சில உணர்வுகள் ......

வேதனைகள் இதயத்தில்
வெறுமையான உள்ளத்தில்
வெஞ்சமரில் உணர்வுகள்
வெளிப்பாடோ விரயம்தான்

சில நிமிடங்கள் .... சில உணர்வுகள் .....

மழைநாளின் முகில்களூடாய்
மறைந்து தோன்றும் ஆதவன் போல்
மனதினுள்ளே அடிக்கடி
மின்னல் போல அன்னை முகம் !
மறக்காத நினவுகள் துளிர்கின்றன
மறந்து விட்ட சொந்தங்கள் ....

சில நிமிடங்கள் .... சில உணர்வுகள் ....

பங்கு போட்டு விற்கின்றார்
பாசத்தைக் கிலோ கணக்கில்
பரிதவிக்கும் மனம் மட்டும்
பாவம் இன்னும் துடிக்கிறது
பாவமென்று ஒன்றுமில்லை புண்ணியமொன்றில்லை
பார்ப்பதெல்லாம் உலகில் வேஷங்களே !

சில நிமிடங்கள் .... சில உணர்வுகள் .....

வானம் பரந்தது பூமி விரிந்தது
வாழும் மனிதர் உள்ளம் மட்டும் ....
வாழ்ந்த காலங்களில் சிரித்தது கொஞ்சமே
வாழும் காலங்களில் காண்பது எதனையோ
வரைந்த கோட்டிற்குள் நடக்கும் நாமே
வரம்பு மீறும்போது கால்கள் சறுக்குமோ ?

சில நிமிடங்கள் .... சில உணர்வுகள் ....

இனிக்கும் ராகங்கள் என்னெஞ்சில்
இனிவரும் காலங்கள் அருகிருக்கும்
இளையோர் உலகொன்று படைத்திடுவார்
இல்லாதவர் இல்லையென்றாகிடுவார்
இதயம் நிறைய ஆனந்தம் தழும்பிட
இசைப்பேன் தமிழின் தாலாட்டாய்

சில நிமிடங்கள் ... சில உணர்வுகள் ....

Copyright © 2005 Tamiloviam.com - Authors