தமிழோவியம்
ஜோதிட விளக்கங்கள் : "அயனாம்சம்" பற்றி
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

நாம் ஏற்கனவே நமது பாடங்களில் அயனாம்சத்தைப் பற்றி எழுதி இருக்கிறோம்.  இப்போது சிறிது விரிவாகப் பார்ப்போம். மேஷத்தின் ஆரம்ப இடத்தை ஆங்கிலத்தில் "Vernal Equinox" என்றழைப்பார்கள். இந்த இடத்தைக் காட்ட முடியுமா?  காட்ட முடியும்.  மார்ச் 21 ம்தேதி ஒவ்வொரு ஆண்டும் சூரியன் இந்த இடத்தில்தான் பிரவேசம் செய்கிறார்.  அன்று பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சரிசமமாக இருக்கும்.  பஞ்சாங்கத்திப் பாருங்கள். "அகஸ்" என்ற கட்டத்தின் கீழே 30 நாழிகை என்று போட்டு இருப்பார்கள்.  அகஸ் என்றால் பகல் பொழுதின் அளவு எனப் பெயர். பகல் பொழுதின் அளவு 30 நாழிகை என்றால் இரவுப் பொழுதின் அளவு என்ன?  அதுவும் 30 நாழிகைதான்.  ஒரு நாளின் அளவு 60  நாழிகை அல்லவா?

நமது பூமிக்கு மேல்  ஆகாயம் ஒரு கோளம்போல் தோற்றமளிக்கிறது அல்லவா?  அதாவது ஆகாயக் கோளத்திற்கு நடுவில் பூமி இருக்கிறது. . இதே போன்ற அமைப்பை ஆங்கிலத்தில் Concentric Circle என்றழைப்பார்கள்.

இந்தஆகாயக் கோளத்திற்குள்தான் எல்லா கிரகங்களும் இருக்கின்றன. இவ்விதமான தோற்றத்தை "geo-centric"  என்றழைக்கிறோம். பூமியின் பூமத்திய ரேகைக்கு மேல் இந்த ஆகாயக் கோளத்தின் பூமத்திய ரேகை செல்கிறது.  இந்த ஆகாயக் கோளத்தின் பூமத்தியரேகையும், பூமியைச் சூரியன் சுற்றும் பாதையும் சந்திக்கும் இடம்தான் "Vernal Equinox"  என்ற மேஷத்தின் ஆரம்ப இடம்.

இந்த இடம் பின் நோக்கிச் செல்தாக  வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். பூமி தன்னைத்தானே சுற்றுகிறதல்லவா? இந்த அசைவினால் மேஷத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக வானவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த வக்கிரகதியை  அடிப்படையாகக் கொண்டதுதான் மேல் நாட்டவர்கள் ஜோதிடம்.  அதாவது மேஷத்தின் ஆரம்ப இடமான Vernal Equinox  என்னும் இடம் ஒவ்வொரு ஆண்டும் பினோக்கிச் செல்வதைக் கணக்கில் கொண்டு அதன்படி ஜாதகங்கள் கணித்துப் பலன்களைக் கூறுவதே மேலை நாட்டவர் ஜோதிடம்.  இந்தக் கணிதத்திற்கு "Nirayana" என்று பெயர்.  

ஆனால் நமது ஜோதிடம் இந்த வக்கிரகதியைக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. மேஷத்தின் ஆரம்பத்திலுள்ள அஸ்வனி நட்சத்திரத்தின் ஆரம்ப இடம்தான் நமது ஜோதிடத்தில் ஆரம்ப இடம். நமது ஜோதிடம் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.  இந்த அஸ்வினி நட்சத்திரம் பின்நோக்கிச் செல்வது இல்லை. ஆக நமது Zodiac நிலையானது. அசைவில்லாதது. இதற்கு "Nirayana"  எனப் பெயர். இந்த இரண்டு கணிதத்திற்கும்  உள்ள கணித வித்தியாசமே "Ayanamsa"  என்பது.   Sayana - கணிதத்திலிருந்து  Ayanamsa - வைக் கழித்தால் கிடைப்பது நமது  Nirayana -  கணிதம். 

இது எப்பொழுதிலிருந்து பின் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது?  என்ன வேகத்தில் பின் நோக்கிச் செல்கிறது? என்பதில் நிறையக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.  வானவியல் அறிஞர்கள்/ஜோதிட வல்லுனர்கள் பலர் பலவிதக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றர்.  லஹ்ரி அவர்கள் 285 A.D. யிலிருந்து பின்னோக்கிச் செல்வதாகக் கூறுகின்றார்.  சபேரியல் 498 A.D.யிலிருந்து பின்னோக்குவதாகக் கூறுகின்றார்.  கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  291 A.D. யிலிருந்து பின்னோக்கிச் செல்வதாகக் கூறுகிறார்.   இவ்வாறாக இதில் பலவிதமான கருத்துக்கள் காணப்படுகின்றன.  அதேபோல் என்ன வேகத்தில் பின்னோக்கிச் செல்கிறது என்பதிலும் பலவிதமான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆரியபட்டா, ஒரு வருடத்திற்கு 46.3 செகண்டுகள் வேகத்தில் பின்னேக்கிச் செல்வதாகக் கூறுகின்றார். பராசரர் 46.5 செகண்டுகள் வேகத்திலும், New Comb  50.23 செகண்டுகள் வேகத்திலும் வராகிமிகிரர் 50.00 செகண்டுகள் வேகத்திலும் பின்னோக்குவதாகக் கூறுகின்றார்கள்.  இவ்வாறாக ஒவ்வொருவரும்  ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர்.  ஆகவேதான் பலவிதமான  அயனாம்சங்கள் புழக்கத்திலுள்ளன. பலவிதமான அயனாம்சங்கள் இருப்பதனால்தான் ஒரே நேரத்தில் பிறந்த ஒருவருக்கு பலவிதமான ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன.  ஜாதகத்திற்கு ஜாதகம் வித்தியாசப் படுகிறது.

மறுபடியும் சந்திப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors