தமிழோவியம்
திரைவிமர்சனம் : உளியின் ஓசை
- மீனா

முதல்வர் கருணாநிதி பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய  "சாரப்பள்ளம் சாமுண்டி" கதையைத் தான் உளியின் ஓசையாக  முதல்வரின் வசனத்திலேயே செதுக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் இளவேனில்.

சோழர் ஆட்சியின் கலைப்பெருமையை எதிர்காலம் மெச்ச வேண்டும் என்ற வேட்கையுடன் பெரிய கோயில் கட்டும் பணியில் ஈடுபடுகிறான் ராஜராஜசோழன். கோயிலில் ஆடற்கலையை சிலையாக வடிவமைக்கும் பொறுப்பு பெருந்தட்சன் (வினித்) என்னும் சிற்பியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆடற்கலையை வெளிப்படுத்தும் 100 சிலைகளை வடிக்க முடிவெடுக்கும் வினித், முக பாவங்களை அற்புதமாக வெளிப்படுத்த - நடனக்கலையை நன்கு அறிந்த ஒரு பெண்ணால்தான் முடியும் என்று நினைக்கும் அவரது எண்ணத்தில் மண் விழுகிறது. அரசவை நர்தகியான முத்துநகையால் (அக்ஷயா) கூட வினித் எதிர்பார்க்கும் அளவிற்கு முகபாவங்களைக் கொண்டுவர முடியாத நிலையில் ஆடுமேய்க்கும் ஒரு கிழவியின் பேத்தியான கீர்த்தி சாவ்லா வினித்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறார். கீர்த்தியின் முத்திரைகளைக் கொண்டே சிலை வடிக்கும் பணியைத் துவங்குகிறார் வினித்.

Vineeth, Keerthi Chawlaஒரு கட்டத்தில் சிலை வடிக்கும் பணியில் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய வினித்தின் மீது காதல் கொள்கிறார் நர்த்தகி அக்ஷயா. ஆனால் வினித்தோ கீர்த்தி சாவ்லாவின் மீது காதல் கொள்கிறார். இந்த முக்கோணக் காதலின் முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.

சிற்பியாக வரும் வினித் பாத்திரத்தோடு அற்புதமாக பொருந்துகிறார். அக்ஷயாவின் நடனத்தைப் பற்றி வினித் விமர்சனம் செய்ய - நடனத்தைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்விக்கு தனது அபிநயத்தால் பதில் சொல்லும் காட்சியில் வினித்தின் நடிப்பும் நடனமும் சபாஷ் சொல்ல வைக்கின்றன.

முத்துநகையாக படம் முழுக்க நீலாம்பரி ரேஞ்சிற்கு வருகிறார் அக்ஷயா. அகங்காரம் + செறுக்கு இரண்டு கலந்த கலவையாக வரும் இவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல் நாட்டியதிலும் அசத்துகிறார். குறிப்பாக பாம்பு நடனத்தில் அக்ஷயா காட்டும் ஆக்ரோஷம் சூப்பர்.

கஞ்சா கருப்பும், கோவை சரளாவும் அவ்வப்போது சிரிக்க வைத்தாலும் பெரும்பாலான காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார்கள். போதாததற்கு மனோரமா வேறு. நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் அனைவரும் அடிக்கும் லூட்டிகள் தாங்கவில்லை..

இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. சரித்திரப் படமாக இருந்தாலும் பக்கம் பக்கமாக வசனம் எழுதாமல் காலத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக - நறுக்கு தெரித்தாற்போல எழுதப்பட்ட கலைஞரின் வசனம் படத்திற்கு பெரும் பலம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors