தமிழோவியம்
பாடல்களால் ஒரு பாலம் : அழகும் பயமும்
- அபுல் கலாம் ஆசாத்

தமிழில்

திரைப்படம்: சிவகாமியின் செல்வன்

பாடலாசிரியர்: புலமைப்பித்தன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

திரையில்: சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ.

இந்தியில்

திரைப்படம்: ஆராதனா

பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி

இசை: எஸ்.டி.பர்மன்

பாடியவர்: கிஷோர் குமார்

திரையில்: ராஜேஷ் கன்னா, ஷர்மிளா டாகூர்.

 

'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'

இது புதிய திரைப்படத்தின் பெயராக இருக்கலாம், கூடவே, இந்தப் பாடலின் மொத்தக் கருத்தையும் ஒரே வரியில் சொல்வதற்கும் உதவியாக இருக்கிறது. அழகின் அருகில் இருப்பதால் இளமை அந்த அழகிற்கு மெள்ளமெள்ள அடிமையாகிப் போகும் காட்சியுடன் இணைந்து இளமை பொங்கும் உணர்வுகளை வார்த்துக் கொடுத்த பாடல்.

சிவாஜி கணேசன் நடித்து அறுபதுகளின் இறுதி முதல் எழுபதுகளின் இறுதி வரையில் வெளிவந்த சில திரைப்படங்களில் சிருங்காரம் ஒலிக்கும் பாடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகாட்டியதுண்டு. சிவந்த மண்ணில் 'ஒரு நாளிலே உறவானதே', அண்ணன் ஒரு கோயிலில் 'நாலு பக்கம் வேடருண்டு', என்று சிறு பட்டியலைத் தந்தால், இந்தப் பாடலும் கட்டாயம் அதில் இடம்பெறும்.

காட்சியமைப்புக்கேற்றபடி குரலில் சிறிய நடுக்கம் தொனிக்க, 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது' என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலைத் துவங்கியதும் வரிகள் மனதை தட்டிப் பறிக்கப்போவது உண்மை. இதன் மையக் கருத்தைத் தவறென்று சிலர் தவிர்க்கலாம்; களவென்று சிலர் ஏற்கலாம். வாத பிரதிவாதங்களை வழக்குரைஞர்களிடம் விட்டுவிட்டு பாடலை ரசிக்கலாம்.

காதலும் அழகும் இளமையும் தனிமையும் ஒன்றாகச் சேர்ந்தால் தடுமாற்றம் ஏற்படுமோ? எல்லைக்கோடுகளைக் கடக்கலாமா வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் வெல்லப்போவது இளமையின் வேகமா? அறிவின் பொறுமையா? என்பது யாருக்குமே தெரியாமல், ஒரு நூலிழையளவு இடைவெளியில் இளமையின் வேகம் முந்திக்கொண்டதை அறிவு உணர்வதற்கு முன்பே வெற்றிக்களிப்பில் இளமை மிதந்துகொண்டிருக்கும். இப்படி ஒரு தருணம் அவர்களிடையேயும் உருவானது.

தனிமையான பொழுதில் அவர்கள் இருந்தபோது ஏற்கெனவே இருவர் மனதிலும் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த காதல் மெதுவாக எழுந்து நின்று சோம்பல் முறித்து வலம் இடமாகத் தன்னை முறுக்கி சிலிர்த்தெழுந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லத் துடித்தது. குளிரும் இதமுமாக மாறி மாறி அவனை வதைத்தன; அவளையும்தான். ஆனாலும் பெண்ணல்லவா, வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளாகவே தன்னை இழந்துகொண்டிருந்தாள். அவன் உணர்வுகளை வெளிக்காட்டத்துவங்கினான்.

எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது

எப்படி மனதை தட்டிப்பறிக்குது

அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது

அங்கங்கே இளமையும் துடிக்குது

தினம் வந்து கொஞ்சும் மலர் கொண்ட மஞ்சம்

இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும்

அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது

ஆனாலும் அச்சம்தான் தடுக்குது

(எத்தனை அழகு)

உதட்டுக் கனிக்குள் இருக்கும் சிவப்பு

விழிக்குள் நடக்கும் விருந்தைப் படைக்கும்

செந்தாழம்பூ மலரவும் சிந்தாமல் தேன் பருகவும்

ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

(எத்தனை அழகு)

அணைக்கத் தூண்டும் நினைப்பில் துடிக்கும்

மனத்தில் நடுக்கம் விலக்கித் தடுக்கும்

பெண் பாவைதான் கனிரசம் கண்பார்வைதான் மதுரசம்

ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

(எத்தனை அழகு)

வசந்த மாளிகையில் வாணிஸ்ரீ - சிவாஜி கணேசன் திரை இரசாயனம் வெற்றி பெற்றதைப் போலவே சிவகாமியின் செல்வனிலும் வெற்றி பெற்றது.

Rajesh Kanna, Sharmila Tagoreஇந்தியில் ராஜேஷ் கன்னா - ஷர்மிளா டாகூர் திரை இரசயானமும் அப்படித்தான். மனதின் மெல்லிய மூலையில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவனைகளில் இந்தித் திரையை இருவரும் கலக்கித்தான் வைத்தார்கள். 'குன்குனாரரேஹை பவ்ரே கில்ரஹீ ஹை கலிகலி' வடக்கே இந்தப் பாடலில் மயங்காமல் இன்றைக்கு ஐம்பது வயதைக் கடந்திருப்பவர் இருப்பாரென்றால் அவர் இந்தித் திரைப்பாடல்களே ஒலிக்காத ஊரில் வாழ்ந்திருக்கலாம். தமிழில் இந்தப் பாடல் 'இனியவளே' என ஒலித்தது. அது வேறு உணர்வுகளைச் சொல்லும் பாடல்.

அழகால் ஏற்பட்ட தடுமாற்றத்தையும் அச்சம் இடையில் வந்து தடுப்பதையும் புலமைப்பித்தன் 'இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும்' வரிகளில் எழுதினார். இந்தியில் ஆனத் பக்ஷி எழுதிய வரிகளில் நடைமுறை வாழ்வின் முறைகள் அவனைத் தடுப்பதாகவும், ஆனாலும் அவன் மனதுக்கு யார் இந்தச் செய்தியைச் சொல்வது என்று தவிப்பதாகவும் எழுதியிருப்பார்.

ரூப்பு தேரா மஸ்தானா ப்யார் மேரா தீவானா

ப்ஹூல் கோயி ஹம்ஸே நா ஹோஜாயே!

ரோக் ரஹா ஹை ஹம்கோ ஸமானா

தூர் ஹி ரஹனா பாஸ் நா ஆனா

கைஸே மகர் கோயி தில்கோ சம்ஜாயே

(ரூப்பு தேரா மஸ்தானா)

உன் அழகும் பொன்வசமோ என் மனமும் உன் வசமோ

விதிவசத்தாலொரு வேள்வி நேருமோ!

கரத்தைத் தடுக்கும் நடுக்கம் பிறக்கும்

நெருக்கம் விலக்கி பிரிக்கத் துடிக்கும்

ஆயிரம் நினைவும் அழகைத் தடுத்திடுமோ!

(உன் அழகும் பொன்வசமோ)

இந்தியில் ஒர் உவமையைத் திரும்பத் திரும்ப எல்லாரும் கையாள்வார்கள். கடலின் அலைகள் பாறையின்மேல் மோதுவதை சலிக்காமல் பாடிச் செல்வார்கள். தமிழில் கஜல் பாடகியாக பாத்திரமொன்றைப் படைத்து (படம்: ஜாதி மல்லி) அவர் பாடிய பிரபலமான பாடலாக திரையில் ஒலித்த வரிகளிலும் இந்த உவமைதான் எழுதப்பட்டிருந்தது. 'சமந்தர் பார் பார் ஆத்தா ஹை டக்ராத்தா ஹை சாஹில்ஸே' (மீண்டும் மீண்டும் கடலலை பாறையுடன் போராடியது). இதே உவமையை ஆனந்த் பக்ஷியும் 'ரூப்பு தேரா மஸ்தானா'வில் எழுதியிருக்கிறார்.

              
'...

மவ்ஜு கோயி சாஹில்ஸே டக்ராயே

(ரூப்பு தேரா மஸ்தானா)

விழிகள் இரண்டும் இணையும் நிமிடம்

புயலின் துவக்கம் புரியும் மயக்கம்

நீரலை பாறையில் மோதிய நிலைவருமோ

(உன் அழகும் பொன்வசமோ)

புலமைப்பித்தன், ஆனத் பக்ஷி இருவரும் காதல் படுத்தும் பாட்டை வரிகளில் அமைத்ததைப் பார்த்தோம்.

கண்ணதாசனும் ஆனந்த் பக்ஷியும் ஒரே மாதிரியான கிராமியச்சூழலுக்கு வார்த்தைகளை எப்படி அமைத்தார்கள் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்... )

ooOoo

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் + புலமைப்பித்தன் கூட்டணியில் அமைந்த இன்னும் சில பாடல்கள்:

  • ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்)
  • அங்கே வருவது யாரோ (நேற்று இன்று நாளை)
  • உச்சி வகுந்தெடுத்து (ரோசாப்பு ரவிக்கைக்க்காரி)
  • நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் (கண்ணில் தெரியும் கதைகள்)
  • ராத்திரியில் பூத்திருக்கும் (தங்கமகன்)
  • புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (உன்னால் முடியும் தம்பி)
Copyright © 2005 Tamiloviam.com - Authors