தமிழோவியம்
கவிதை : அயல்நாடும்.. அடிமனதும்..!
- சிலம்பூர் யுகா, துபாய்

 

கட்டித்தழுவி
கலந்துவிட முயன்ற போது
மகளின் சிரிப்பொலிகேட்டு
உணர்ந்தேன்

பிறகுதான் புரிந்தது,

என்னவளாயிருந்தது
தலையணையென்றும்
சிரித்தது
அலைபேசியின்
அழைப்பொலியென்றும்.
 
நினைத்தமாத்திரத்தில்
இணைத்துவைக்கவில்லையே
என்கிறபோது
விஞ்ஞானத்தின் மீதும்
வெறுப்புவரும்.

கூரையிலும்,
பாதையிலும்
தொலைத்த வாழ்க்கையை
அடுக்குமாடிகளிலும்
மிடுக்குசாலைகளிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ
துன்பங்களின்
ஆக்கிரமிப்பிலும்
சந்தோஷம் மிஞ்சியிருந்தது
அங்கு
அத்தனை
சொகுசுக்கு
மத்தியிலும்
துன்பமே எஞ்சியிருக்கிறது
இங்கு.

மின்சார ஆராட்ச்சிக்கு
விளக்கு
துணையாயிருந்தது மாதிரி
இந்த
பொருளாதார போராட்டத்திற்கு
மனைவியின்
தொலைபேசி முத்தங்களே
துணையாய்.

எல்லோரும்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
வழ்க்கையை
நடத்துவதற்காக.

ஒன்றாம்
தேதிநோக்கியே
முப்பதுநாள் யாகம்

வாழவேண்டும்
என்பதற்காக
சாகும் சாபமிது!

அனுபவித்ததுபோதும்
அடுத்த மாதம்
விசாவை
ரத்து செய்யக்கோரி
கம்பெனிக்கு
கடிதமெழுத வேண்டும்
அடிமன கட்டளைக்கு
எதார்த்தம் சம்மதிக்கும்

அப்பா
அரையாண்டு தேர்வில்
நான் ப்ஸ்ட் ரேங்க்
அண்ணன் செகன்ட் ரேங்க்
மகளின்
சந்தோஷம்கேட்டு
மீண்டும்
மரணிக்கத்தயாராகும் மனம்
கட்டிடநெருக்கத்தில்......

Copyright © 2005 Tamiloviam.com - Authors