தமிழோவியம்
கவிதை : உயிரை உருக்கும் ஒருகேள்வி?
- சிலம்பூர் யுகா, துபாய்


எனதுபயணம்
என்பது
பாதையைத்தேடி..

பையில்
பழையத்துணியும்
கையில்
புதியகுழந்தையும்.

நடந்து நடந்து
பாதையும் என்னை
பங்குகேட்ட ஒருபொழுதில்

ஊழியம் கொடுக்க
முன்வந்தவரெல்லாம்
ஒத்திகைக்கு
உடலைக்கேட்டனர்.

என்னிடமுள்ள
முதலீடு
மூலதனம்-எல்லாமே
என்மகளை
ஈன்றதின் எச்சமும்
அவள்
அருந்தியபாலின் மிச்சமும்தான்!

எனக்குத்தெரியும்
இந்த தாய்ப்பால்
விற்பனையாவப்போவதில்லை

ஆனால்
என்பால்
விற்பனையாகும்.

அதனால்
தொடங்கிவிட்டேன்
விற்பவனிடமே
விலைவசூலிக்கும்
வீரியத்தொழிலை!

முள்மீது
படுப்பதற்குபயந்து
விஷ ஊசிகளோடு
விளையாட தயாரானேன்.

மகளின்பசிக்கு
என்னைதிண்ணக்கொடுத்தேன்
எவனெவனுக்கோ

எனதுபசி
அவளது ஜனனம்
அவளதுபசி
எனது தவணைமரணம்

வாழ்க்கை
மரணத்தைவிடவும்
கொடியதுதான்

இப்போதெல்லாம்
அடிமனதில்
ஒருகேள்விதான்
உறுத்துகிறது
அவள் அழும்போதெல்லாம்
ஒப்பந்தநேரத்தை உதறி
எழமுடியுமா என்னால்?

இல்லை

உறுப்பின் அரிப்பு
முடிந்ததும்
பொறுப்பை நிராகரித்த
அவளின்
அப்பன்மாதிரி
அழுகையின்வலியை
அவமதித்தேயாகனுமா?

உபதேசம் வேண்டாம்
உன் போன்றோரின்
ஒழுக்கம்
என் போன்றோரின்
கட்டிலுக்கடியில்
கண்ணீர்விட்டு
நிற்கிறது.

எனக்கும்தான்
வலிக்கிறது எதார்த்தம்.!

Copyright © 2005 Tamiloviam.com - Authors