தமிழோவியம்
தராசு : மீறப்பட்ட சபை நாகரீகம்
- மீனா

Mamtha Throwing Paper towards deputy Speakerசில நாட்களுக்கு முன்பாக பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை சபாநாயகர் தள்ளுபடி செய்ததால் கொதித்துப் போன மம்தா அவை நடுவிலேயே ஆர்பாட்டம் செய்ததுடன் அப்போது சபையை நடத்திக்கொண்டிருந்த துணை சபாநாயகர் மீது ஒரு கட்டு காகிதத்தை வீசி எறிந்து விட்டு சபையை விட்டு வெளியேறியுள்ளார்.  பிரச்சனை நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் சபைக்கு வந்த மம்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கோரிக்கை வைத்ததால் தனது ராஜினாமாவை சபாநாயகர் மீது வீசி எறிந்துவிட்டு வெளியேறியுள்ளார். மம்தா ராஜினாமா செய்த முறை சரியானது அல்ல என்பதால் அவரது ராஜினாமாவை ஏற்க முடியாது என்று சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறிவித்துள்ளார். ஏற்கனவே சங்மா சபாநாயகராக இருந்த போது அவர் மீது சால்வையை வீசி எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் மம்தா.

ஆர்பாட்ட, அடிதடி அரசியலுக்கு பெயர் போனவர் மம்தா. தீப்பொறி பறக்கும் பேச்சுகளுக்கு சொந்தக்காரர். மேற்கு வங்காளத்தில் ஊடுருவ காத்திருக்கும் போராளிகள் பற்றியதுதான் மம்தாவின் பேச்சு.. முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி தான் அவர் பேச முயன்றார்  என்றாலும் பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக காகிதக் கட்டை சபையை நடத்திக்கொண்டிருந்த துணைசபாநாயகர் மீது வீசியதையும் அவையிலிருந்து ஆர்பாட்டம் செய்தவாறு வெளியேறியதையும், தனது ராஜினாமாவை சபாநாயகரிடம் வீசி எறிந்ததையும் எந்த வகையில் மம்தா நியாயப்படுத்தப்போகிறார்?

சபைநாகரீகம், பண்பாடு ஆகியவை மக்கள் உறுப்பினர்களிடையே தற்போது வெகு குறைவாகவே காணப்படுகிறது. மக்கள் பிரச்சனைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமான முறையில் விவாதித்து அதற்கு ஒரு நல்ல தீர்வு காணும் எண்ணத்தை விட தங்களுடைய பெயர் பத்திரிக்கைகளில் பெரிய அளவில் இடம் பெறவேண்டும் - அதற்கு சபையில் கலாட்டா செய்வது ஒன்று தான் வழி என்ற ரீதியில் அதிக அளவில் அரசியல்வாதிகள் சிந்தித்து வருகிறார்கள். இத்தகைய எண்ணம் மத்திய அரசு, மாநில அரசு என்ற பாகுபாட்டை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் மக்களுக்காக பாராளுமன்றம் சட்டமன்றம் செல்கிறோம் என்பதை விட தங்களுடைய தனிப்பட்ட ஆளுமையை நிறைவேற்றிக்கொள்ளவே தற்போதைய அரசியல்வாதிகள் பாராளுமன்றம் சட்டமன்றம் செல்கிறார்கள்.

"தற்போதைய அரசியல்வாதிகளில் பலரும் மம்தா செய்தமாதிரியே நடந்து கொள்வதையே விரும்புகிறார்கள்" என்று சபாநாயகர் கூறியுள்ளது மிகுந்த வேதனையான விஷயமாகும். சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆர்பாட்டம் செய்து சபையை விட்டு வெளியேறுவது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கட்சிகள் கொண்டிருந்தால் மக்களின் கதி என்னவாகும்? மம்தா ஆத்திரப்பட்டு ஆர்பாட்டம் - ராஜினாமா செய்ததை விடுத்து அமைதியான முறையில் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் வைத்திருந்தால் நிச்சயம் அவருக்கு பேச வாய்பு கிடைத்திருக்கும்.  ஒரு நாள் பாராளுமன்றம் - சட்டமன்றம் நடத்த ஆகும் செலவென்ன? அதை யார் தருகிறார்கள்?? என்பதை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல் தங்கள் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு புறக்கணிப்பு செய்யும் இந்த மாதிரியான அரசியல்வாதிகளுக்கு மக்கள் தான் சரியான தண்டனையைக் கொடுக்க வேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors