தமிழோவியம்
திரைவிமர்சனம் : இங்கிலீஷ்காரன்
- மீனா

பெற்றவர்கள் பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்தவேண்டுமே தவிர அவர்களை முடக்கிப் போடக்கூடாது என்பதுதான் இப்படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வரும் கருத்து.

Englishkaranதண்டபாணியின் மகளான மதுமிதா பிரமாதமான பாடகி. ஆனால் மகளின் திறமையை ஊக்குவிக்காமல் அவளை கட்டுப்பெட்டியாக வளர்க்க நினைக்கிறார் தண்டபாணி. இந்நிலையில் அவர்கள் வீட்டுக்கு வரும் சத்யராஜ், தான் மதுமிதாவை எப்படியாவது திருமணம் செய்து காட்டுகிறேன் என்று தண்டபாணியிடம் சவால் விடுகிறார். சொன்னதை செய்துகாட்டும் விதமாக மதுமிதாவைத் துரத்தி துரத்தி காதலிக்கிறார். சத்யராஜின் டார்ச்சரினால் வெறுத்துப் போகும் மதுமிதா, தன்னை 3 வருடங்களாக காதலித்து வரும் சிலபாலாஜியை விரும்ப ஆரம்பிக்கிறார். இதற்கிடையே முன்னாள் எம்.எல்.ஏ வான ஐஸ்வர்யாவின் மகன் மதுமிதாவை ஒருதலையாக காதலிக்கிறார். மகனின் காதலை நிறைவேற்ற ஐஸ்வர்யா தந்திரமாக தண்டபாணியை ஏமாற்றி திருமணத்திற்கு நாள் குறிக்கிறார். திருமணத்திற்கு முதல் நாள் மதுமிதா சிவபாலாஜியுடன் வீட்டை விட்டு ஓட விட - சிவபாலாஜி தன் காதலுக்கு உதவியதற்காக சத்யராஜுக்கு நன்றி கூறுகிறார். அப்போதுதான் பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது.

ஓட்டப்பந்தயத்தில் பெரிய அளவில் புகழ் பெறவேண்டும் என்ற கனவோடு வாழ்பவர் நமிதா - மதுமிதாவின் அக்கா. ஆனால் அப்பா தண்டபாணியோ பொண்ணுக்கு எதுக்கு ஓட்டம் எல்லாம் என்று சத்யராஜுக்கு நமிதாவைத் திருமணம் செய்து வைக்கிறார். மனைவியின் லட்சியத்திற்கு தான் தடையாக இருக்கக்கூடாது என்று கருதும் சத்யராஜ் நமிதாவிற்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்கிறார். இதைத் தெரிந்துகொள்ளும் சத்யராஜின் அம்மா எங்கே மருமகள் ஓட்டப்பந்தயத்தில் பெரிய அளவில் சாதித்தால் தனக்குப் பேரக்குழந்தைகள் பெற்றுத்தரமாட்டாரோ என்று எண்ணி நமிதாவால் இனி ஓடவே முடியாது என்று டாக்டரை வைத்து பொய் சொல்ல வைக்கிறார். இதை நம்பி விஷம் குடித்து செத்துப்போகும் நமிதா தன் தங்கையின் கனவையாவது நிறைவேற்றும்படி சத்யராஜிடம் கூறிவிட்டு சாகிறார். மதுமிதாவை ஒரு பெரிய பாடகியாக்கத்தான் சத்யராஜ் தங்களை சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டதாக சிவபாலாஜி மதுமிதாவிடம் கூறுகிறார். முடிவில் ஐஸ்வர்யாவின் மகன் இவர்களைத் தேடி சென்னைக்கு வர, மதுமிதாவின் கனவு நனவானதா இல்லையா என்பது கிளைமாக்ஸ்....

சத்யராஜின் நக்கலும் லொள்ளும் தான் படத்தின் அஸ்திவாரம் என்றால் மிகையில்லை. மதுமிதாவின் கல்லூரிக்கு வரும் சத்யராஜை சிவபாலாஜி குழுவினர் மறித்து "யார் நீ? காலேஜ் ஸ்டூடண்டா? "என்று கேட்க - "காலேஜ் ஸ்டூடண்டுEnglishkaran Sathyaraj Vadiveluனு நான் பொய் சொல்ல மாட்டேன்" என்று பிரேக் விடும் சத்யராஜ் " நான் +2 ஸ்டுடண்" என்கிறாரே பார்க்கனும்...... போதாத குறைக்கு 7G ரெயின்போ காலணி ரவி கணக்காய் கண் பேசும் வார்த்தை பாட்டிற்கு டான்ஸ் வேறு யப்பா நாடு தாங்காதுடா சாமி.. இதே ரேஞ்சிற்கு மதுமிதா முன்னால் காதல் பரத் கணக்காய் பைக்கில் வரும் சத்யராஜ் "என்ன கண்ணு.. பைக், கெட்டப் எல்லாம் பாத்தமாதிரி இருக்கா.. பொண்ணுக்கு அதே வயசு தான். ஆனால் பையனுக்குத்தான் 2 வயசு கம்மி.." என்று பரத்திற்கு தம்பியாக முயற்சி செய்யும் காட்சியிலும் வயிற்றை புண்ணாக்குகிறார். படத்தின் ஹை-லைட்டே சத்யராஜை பயமுறுத்த ஆவியாக வரும் வடிவேலுவை லகலகலக என்று சந்திரமுகி ஜோ ஸ்டைல் காஸ்டியூமில் வந்து கலாக்கிறாரே சத்யராஜ் அதுதான்.. ஆனாலும் சத்யராஜ் சாமியார்களை நக்கலடிக்கும் சீன் - கொஞ்சம் ஓவர்.

நமிதாவைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. ஓட்டப்பந்தய வீராங்கனையாக வந்ததற்காகவாது அவர் கொஞ்சம் சரியாக ஓடியிருக்கலாம். மற்றபடி நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. இதேதான் மதுமிதாவின் கதையும். படம் முழுவதும் சத்யராஜின் ஆதிக்கம் மட்டுமே. ஐஸ்வர்யாவின் நடிப்பு பயங்கர ஓவர். வார்த்தைக்கு வார்த்தை "நான் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்" என்று சொல்லும் அவர் எவ்வாறு எக்ஸ் எம்.எல்.ஏ ஆனார் என்பதற்கான எந்த விளக்கமும் படத்தில் இல்லை. மேலும் மதுமிதா கல்யாணத்திற்கு முன்பாக ஓடிவிட்டார் என்பதற்காக ஐஸ்வர்யா சாவதெல்லாம் சுத்த அபத்தம். அதே போல தண்டபாணி வார்த்தைக்கு வார்த்தை பொம்பளைன்னா எப்படி இருக்கணும் என்று சொல்லும் விளக்கமும் எரிச்சலை கிளப்புகிறது.

தேவாவின் இசை சுமார் ரகம் தான். இந்த மாதிரி படத்தில் லாஜிக்கே பார்க்கக்கூடாது என்றாலும் அவ்வளவு கட்டுப்பெட்டித்தனமான அப்பாவின் முன்னால் பெண்கள் இருவரும் லோ ஹிப் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு உலா வருவது ரொம்பவுமே ஜாஸ்தி. மொத்தத்தில் கதையை பெரிய அளவில் நம்பாமல் சத்யராஜின் லொள்ளை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors