தமிழோவியம்
திரையோவியம் : எங்கே செல்லும் இந்தப் பாதை?
- மீனா

Surya, Simran in NEWகிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாக வெளிவந்து சக்கை போடு போட்ட நியூ படத்தை சமீபத்தில் நிதிமன்றம் தடைசெய்திருப்பதோடு படத்தின் இயக்குனர் சூர்யாவின் மீது திரைப்பட தணிக்கை குழுவினர் ஏற்கனவே அளித்த புகாரின் மீதான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. ஆனாலும் இந்தத் தீர்ப்பால் நிஜமாகவே நாட்டுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என்று யோசித்தால் எந்த பதிலும் நமக்கு விரைவில் கிடைக்காது. ஏனென்றால் படம் வந்து 1 வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஓட்டமாய் ஓடித் தீர்த்துவிட்டது. சூர்யா நிச்சயமாக போட்ட பணத்தை எடுத்திருப்பார். மேலும் இந்தப் படம் கொடுத்த தைரியத்தில் கதாநாயகனாக இன்னொரு வில்லங்கமான படத்தில் நடித்து அது வெளிவர காத்திருக்கிறது. ஆக காலம் தாழ்த்தி வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகிறது.

இந்த நிலையில் தற்போது வெள்ளித்திரையிலும், விளம்பரங்களிலும் தான் எத்தனை அசிங்கங்கள்? வல்லவனுக்காக சிம்பு அடித்த கொட்டத்தை என்னவென்பது? சூர்யாவின் புதுப்பட பெயர் பிரச்சனை இன்னமும் முற்றிலுமாக முடியவில்லை என்ற நிலையில் Sunday ன்னா இரண்டு என்ற விளம்பரம் வேறு தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. ஞாயிறு அன்று இரண்டு தினமலர் பேப்பர் கிடைக்கும் என்ற விளக்கங்கள் பின்னர் வந்தாலும் முதலில் ஒரு அர்த்தமும் இல்லாமல் வந்த அந்த முதல் சில நாட்களில் மக்கள் தான் எத்தனை விதமான கற்பனைகளுக்கு உள்ளானார்கள்?

நம்நாட்டில் நடைபெறும் எந்த விதமான கலாச்சார சீரழிவிற்கும் மேலை நாடுகளைக் குற்றம் சொல்லியே பழகிவிட்ட நாம், பிரச்சனைகளின் அடிவேரை ஆராய மறுக்கிறோம். மேலை நாடுகளில் கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும் அங்கும் கூட எத்தனையோ கோடிக்கணக்காணவர்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் வசித்து வருகிறார்கள் என்ற உண்மையை நாம் நமக்கு வேண்டிய வகையில் மறந்து விடுகிறோம். நியூ திரைப்படத்தின் மூலக்கதையாகக் கருதப்பட்ட "Big" ஆங்கிலப் படத்தை டாம் ஹாங்ஸ் எடுத்திருந்த விதம் எந்த ஒரு வகையிலும் ஆபாசத்தைத் தூண்டாதது என்ற உண்மையை நமது சமூக ஆர்வலர்களுக்கு யார் எடுத்துச் சொல்வது?

நம் நாட்டில் பெருகி வரும் ஆபாச எண்ணங்களுக்கு முக்கிய காரணமே நாம் தான். மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறோம் என்று கூறியே சூர்யாவைப் போன்ற பல இயக்குனர்களும் விளம்பரப்பட இயக்குனர்களும் ஆபாசத்தைப் புகுத்தி வருகிறார்கள். அதை உறுதிப்படுத்துவதைப் போல் நாமும் முதல் ஷோவிற்கான டிக்கெட் வாங்கிக் கொண்டு படத்தைப் பார்த்துவிட்டு வருகிறோம். இப்படிப்பட்ட படங்களை அபாரமாக வெற்றியடையவும் செய்கிறோம். திரைப்படத்தின் பெயரை மாற்றச் சொல்லிப் போராடும் - சிகரெட் பிடிப்படதை எதிர்த்து போராடும் எந்த ஒரு கட்சியும் அதன் தலைவர்களும் இத்தகைய ஆபாசங்களைப் பற்றி பேசவே மறுப்பது ஏன்? நியூ படத்திற்காகவும் வல்லவன் போட்டோவிற்காகவும் மகளிர் அமைப்புகள் மட்டுமே போராடினவே தவிர தங்களைச் சமூகக் காவலர்களாகக் கூறிக்கொள்ளும் எந்தத் தலைவரும் குரல் எழுப்பாதது ஏன்?

மொத்தத்தில்  நாம்தான் அழிவுப்பாதையை நோக்கிப் போய்கொண்டிருக்கிறோமே தவிர எந்த மேலை நாட்டவரும் நம்மை அழிவுப்பாதையில் நடத்திச் செல்லவில்லை. நம் நாட்டில் பெருகி வரும் வக்கிரங்களுக்கு நாம் தான் பொருப்பாளிகள். எனவே அடுத்தவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு நம்மைத் திருத்திக்கொள்ளும் வழியைப் பார்த்தால் நமக்கும் நாட்டிற்கும் நல்லது. இல்லையென்றால்............

Copyright © 2005 Tamiloviam.com - Authors