தமிழோவியம்
தராசு : மத்திய அரசும் தேர்தல் கமிஷனும்
- மீனா

மத்திய அமைச்சர் சிபுசோரன் கைதுடன் பரபரப்பு எல்லாம் ஓய்ந்தது என்ற எண்ணம் மனதில் தோன்றி மறைவதற்க்கு முன்பே இன்னொரு மத்திய அமைச்சரும் - ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் மீது ஐதராபாத் கோர்ட் கைது உத்திரவைப் பிறப்பித்துள்ளது. அவரது நல்ல காலமோ அல்லது மன்மோகன் சிங்கின் நல்ல காலமோ, ராவின் கைது வாரண்டை அதே ஐதராபாத் கோர்ட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்படிக் கைது செய்யப்படும் மத்திய மந்திரிகளின் பட்டியல் நீண்டு கொண்டேப் போகப்போவது என்னமோ நிச்சயம்.

இதற்கெல்லாம் காரணம் அராஜக, ஊழல் பேர்வழிகள் எல்லாம் தேர்தலில் நின்று - ஜெயித்து மந்திரிகளாவதுதான். ஊழலற்ற அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டே ஊழல் பேர்வழிகளை அமைச்சர்களாக்குவது எந்த விதத்தில் ஞாயம் என்பது புரியவில்லை. கூட்டணி நிர்பந்தம் - உட்கட்சி நிர்பந்தம் என்று பிரதமர் ஆயிரம் சமாதானம் கூறினாலும் இப்படிப் பட்ட கைது நடவடிக்கைகளால் உலக அளவில் இந்தியாவிற்கு வெளியே சொல்லமுடியாத அளவிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது நிஜம். இந்த அவலங்கள் அனைத்தும் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போது நடந்து கொண்டுதான் இருக்கிறன.

இதை மாற்ற ஒரே வழி - தற்போது தேர்தல் கமிஷன் அளித்துள்ள 22 சிபாரிசுகளையும் கொஞ்சமும் மாற்றாமல் உடனடியாக அப்படியே செயல்படுத்துவது தான். இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உண்மை சொரூபம் கொஞ்சமாவது மக்களுக்குத் தெரியவரும். கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள், தனக்குச் சொந்தமாக ஒன்றுமே இல்லை என்று புளுகுவதற்கு முன்பாக - மாட்டினால் 2 வருடம் தண்டனை கிடைக்கும் என்று கொஞ்சமாவது நினைத்துப் பார்ப்பார்கள்.

இன்னொரு மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டு, நாட்டின் மானம் போகாமல் காக்க வேண்டுமென்றால் இந்த சீர்திருத்த விதிகளை ஆளும் காங்கிரஸ் கட்சி உடனடியாகக் கொண்டுவரவேண்டும். அதுமட்டுமல்லாமல், அத்தீர்மானம் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் துறந்து - இத்தீர்மானத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும். அப்போதுதான் இந்தியாவின் எதிர்காலம் ஓரளவிற்காவது வெளிச்சமாக இருக்கும். கடந்த ஆட்சியில் தேர்தல் கமிஷன் செய்லபடுத்த விரும்பிய சீர்திருத்தங்களை நடைமுறையில் செயல்படுத்த விடாமல் தடுத்து பா.ஜனதா செய்த அதே தவறை இம்முறை காங்கிரஸ் செய்யாது என்று நம்புவோம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors