தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : அதோகதி
- என். சொக்கன்

பாடல் 31

செம்பியர் வம்சத்தில் வந்த சோழனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும், நல்லபடியாய்ப் பிழைத்து வாழ்வார்கள். ஆனால், அவனைப் பகைத்துக்கொண்டவர்களின் நிலைமை, அதோகதிதான்.

அதோகதி என்றால் ? எதோகதி ?

சோழன், தனது பகைவர்களின்மீது உடனடியாய்ப் பகையெடுத்து வெல்லுகின்ற, சுறுசுறுப்பான வீரன் - எதிரிகளை ஒருவர்கூட மிச்சம் வைக்காமல் கொன்று வீழ்த்திவிடுவது அவனுடைய பழக்கம்.

ஆனால் சோழனுக்குள்ளும் ஒரு துளி இரக்கம் உண்டு - தவறு செய்யாதவர்களை தண்டிப்பது அவனுடைய பழக்கமில்லை - அதன்படி, அந்த எதிரி நாட்டுப் பெண்களையும், குழந்தைகளையும் அவன் கொல்வதில்லை, நிலை தடுமாறி நிற்கும் அவர்களை, பக்கத்திலுள்ள காட்டினுள் விரட்டிவிடுகிறார்கள் சோழனின் படை வீரர்கள்.

அதுவரை, மாளிகைகளில் வசதியாய் வாழ்ந்து பழக்கப்பட்ட அந்த சுகவாசிப் பெண்கள், அதன்பின் கொடும் காட்டின் கஷ்டங்களைச் சமாளித்து,
தங்களின் வாழ்க்கையை ஓட்டியாகவேண்டும் அப்படிக் காட்டினுள் விரட்டப்பட்ட பெண்களில் சிலர், கர்ப்பிணிகள். அந்தக் கானகத்திலேயே அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றன அந்தக் குழந்தைகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் - அரச வாரிசுகள்தான் அவை, ஆனால், எந்த சவுகர்யமும் இல்லாத காட்டில் பிறந்து, வளரவேண்டியிருக்கிறது.

சிவந்த கால்களை உடைய அந்த இளவரசர்கள், பஞ்சு மெத்தையில் துயிலவேண்டியவர்கள், ஆனால் இப்போது, காய்ந்த இலைச் சருகுகளில்தான் படுத்து உறங்குகிறார்கள் - அவர்களுக்குத் தாலாட்டுப் பாடக்கூட யாரும் பக்கத்தில் இல்லை, காட்டு மரமொன்றில் அமர்ந்திருக்கும் கோட்டான்தான், கர்ண கடூரமான குரலில் சப்தமாய்க் கத்துகிறது, அதைக் கேட்டபடி, அந்தக் குழந்தைகள் தூங்குகிறார்கள் பாவம்  தந்தைமார்கள் செய்த தவறுக்கு, ஏதுமறியா இந்தப் பிள்ளைகள் கஷ்டம் அனுபவிக்கின்றன - அவர்கள் கொஞ்சம் பொறுமையோடு சிந்தித்திருந்தால், சோழனின் ஆட்சியை ஏற்றுக்கொண்டிருந்தால், இவர்களுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்குமா ?


இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரிஇளம் செங்கால் குழவி அரைஇரவில்
ஊமன் பாராட்ட உறங்கிற்றே செம்பியன்தன்
நாமம் பாராட்டாதார் நாடு.

(இரியல் - நிலை கெட்ட / விரைந்து சென்ற / அழுத
ஞெமல் - சருகு
குழவி - குழந்தை
ஊமன் - கோட்டான்
பாராட்ட - புகழ / தாலாட்ட)பாடல் 32

ஒளி வீசுகின்ற இலையைப்போன்ற வேலைத் தாங்கியிருக்கும் சோழன் கிள்ளி, 'இரேவதி' நட்சத்திரத்தில் பிறந்தவன் - அவனுடைய பிறந்தநாள் விழாவை, நாடுமுழுதும் உற்சாகமாய்க் கொண்டாடியது.

பல நாள்களுக்குக் கொண்டாடப்பட்ட இந்தப் பெருவிழாவின்போது, மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடித் திரிந்தார்கள், பிராமணர்கள் அரசனைச் சந்தித்து, வாழ்த்தி, பசுவும், தங்கமும் பரிசாக வாங்கிச் சென்றார்கள்.

அடுத்து, சிறந்த புலவர்கள் பலர் வந்தார்கள் - பிறந்தநாள் காணும் அரசனைப் புகழ்ந்து, அற்புதமான பல காவியங்களைப் பாடினார்கள் அவர்கள் - மந்தர மலையைப்போன்ற, மிகப் பெரிய ஆண் யானைகளை அவர்களுக்குப் பரிசாய் வழங்கினான் சோழன் கிள்ளி வளவன் - புலவர்கள் அந்த யானைகளின்மீது ஏறிச் செல்லும் காட்சியைப் பார்த்த மக்கள், தங்கள் அரசனின் வள்ளல்தன்மையை வாழ்த்திப் போற்றினார்கள்.

இப்படி நாடெங்கும் அரசனின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கையில், ஒரே ஒரு ஜீவனுக்குமட்டும், இந்தக் கொண்டாட்டத்தில் சந்தோஷமில்லை.

யார் அது ? சோழனின் நல்லாட்சியில், அவனுடைய பிறந்தநாளை விரும்பாதவர்களும் உண்டா ? யார் அந்த ராஜதுரோகிகள் ?

கையில் பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு, நாடெங்கும் தேடிப்பார்த்தபின்னர்தான், அந்த துரோகிகள் சிக்குகிறார்கள் - வீடுகளின் மூலை, முடுக்குகளில் வலை பின்னி, அந்தக் கூடுகளில் வாழும் சிலந்திகள்தான் அவை சோழன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கும், இந்தச் சிலந்திகளுக்கும் என்ன சம்பந்தம் ? அவற்றுக்கு என்ன வருத்தம் ? ஏன் வருத்தம் ?

வருத்தம் இருக்காதா பின்னே ? அரசனின் பிறந்தநாள் விழாவுக்காக, தங்களின் வீடுகளைச் சுத்தப்படுத்தி அலங்கரித்த மக்கள், அங்கிருந்த சிலந்தி வலைகளையெல்லாம், ஒட்டடைக் குச்சியினால் சிதைத்து எறிந்துவிட்டார்கள். ஆகவே, ஒரே நாளில், சோழ நாட்டிலிருந்த எல்லாச் சிலந்திகளும், தங்கள் வீடுகளை இழந்துவிட்டன, வெளியே விரட்டப்பட்டுவிட்டன.

'நாங்களும் இந்தச் சோழ நாட்டில்தானே வாழ்கிறோம் ? நாங்களும் அந்தச் சோழனின் பிரஜைகள்தானே ? அந்தணர்களையும், புலவர்களையும், மக்களையும் சந்தோஷப்படுத்தும் இந்தச் சோழனின் பிறந்தநாள், எங்களைமட்டும் இப்படிக் கைவிட்டதே ', என்று அந்தச் சிலந்திகள் அழுது புலம்புகின்றன.

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார், நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறுஊர்ந்தார் எந்தை
இலங்குஇலை கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்புஇதன் கூடுஇழந்த ஆறு.

(ஆ - பசு,
நாவலர் - புலவர்கள்
மாண்ட - சிறந்த
களிறு - ஆண் யானை
ஊர்ந்தார் - ஏறிச் சென்றார்
எந்தை - என் தந்தை
இலங்கு இலை - விளங்கும் இலை
என்னோ - ஐயோ
சிலம்பு - சிலந்தி
கூடு - சிலந்தி வலை)

Copyright © 2005 Tamiloviam.com - Authors