தமிழோவியம்
தராசு : சிறைச்சாலையா ? சதிச்சாலையா ?
- மீனா

பெங்களூரூவிலும் அகமதாபாத்திலும் அடுத்தடுத்து நடந்த் குண்டுவிடுப்புச் சம்பவங்களுக்கு சபர்மதி சிறையில் உள்ள பயங்கரவாதிகளால் தான் திட்டம் தீட்டப்பட்டது என்ற திடுக்கிடும் தகவலை மத்திய உளவுத்துறையினர் தெரிவித்துளார்கள். ஏற்கனவே தமிழகத்தைத் தகர்க்க புழல் சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய சதித்திட்டம் செயலாக்கம் பெறுவதற்கு முன்பே அம்பலமானதால் தமிழகம் தப்பிப் பிழைத்தது. சபர்மதியில் நடந்த சதியாலோசனையைப் பற்றி சம்பவம் பல நாட்கள் கழிந்தபிறகே உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.

வெளியே இருப்பதை விட சிறைக்குள்ளேதான் நாங்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்கிறோம் என்று பல குற்றவாளிகள் ஏற்கனவே பல சந்தர்பங்களில் கூறியுள்ளார்கள். அதற்கேற்றவாறு சிறை அதிகாரிகளை கவனிக்கும் விதத்தில் கவனித்தால் போதும் - நாம் கேட்கும் அனைத்துவித வசதிகளும் கிடைக்கும் என்பதை குற்றவாளிகள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். குற்றவாளிகளைப் பார்க்க வரும் அவர்களது உறவினர்களும் இதை நன்கு அறிந்தவர்கள் தான்.

கவனிக்க வேண்டியவர்களை கவனித்தால் போதும்.. செல்போன், ஆடம்பர வசதிகள், அருமையான சாப்பாடு இப்படி எதற்குமே சிரம்பப்படவேண்டாம் என்பதை புழல் சிறைச்சாலையில் நடந்த சோதனைகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. கண்டிப்புடன் பல அதிகாரிகள் இருந்தாலும் சிறைத்துறையிலும் காவல்துறையிலும் உள்ள சில கருப்பு ஆடுகளால் - தவறுக்கு தண்டனைப் பெற்று வருந்த வேண்டிய இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது உல்லாசமாக பொழுது போக்கும் இடமாகவும் சதியாலோசனைகளை தடையின்றி தீட்ட உதவும் அலோசனைக் கூடமாகவும் மாறியுள்ளது.

ஏற்கனவே நாட்டில் நாலாபக்கங்களிலும் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் அப்பாவி பொதுமக்கள் தற்போது சிறைச்சாலைகளில் நடந்துவரும் இத்தகைய சதித்திட்டங்களால் அதிர்சிக்குள்ளாகியுள்ளார்கள். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய அரசியல்வாதிகள் சுயநலத்தின் மொத்த உருவமாக மாறியுள்ள இவ்வேளையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையாவது தன் கடமையை சரிவரச் செய்யுமா? அல்லது காவல்துறையில் ஈரல் கெட்டுவிட்டது - மூளை கெட்டுவிட்டது என்று நாம் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதானா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors