தமிழோவியம்
பேட்டி : கவிஞர் மதுமிதா அவர்களின் பேட்டி - இறுதி பகுதி
- திருமலை கோளுந்து

சென்ற இதழ் தொடர்ச்சி

தமிழோவியம் :- பெண்கள் முக்கியமாக படித்து முன்னேற வேண்டும். ஒரு பெண் நன்றாகப் படிப்பது பத்து ஆண்களுக்கு சமமானது. எதிர்காலத்தில் பெண்கள் கட்டுப்பெட்டியாக இல்லாமல் எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டும். பொதுப் பணியிலும் தேசப் பணியிலும் பெண்கள் பங்கு கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நமது நாடு விரைவில் சுதந்திரம் பெறவும் பல துறைகளிலும் முன்னேற முடியும் என்று தங்கள் தாத்தா காந்தி அரங்கசாமி ராஜா 1920களில் கூட்டங்களில் பேசி இருக்கிறார். அவை தவிர காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்கள் அன்னிப்பெசன்ட் அம்மையாரை அழைத்து வந்து ஹோம்ரூல் இயக்கத்தை எல்லாம் நடத்தி இருக்காரு. காந்தி கொள்கையை பரப்பினதால் அவருடைய அரங்கசாமி என்கிற பெயருக்கு முன்னாடி காந்தி அரங்கசாமி ராஜா என்று பொதுமக்களே சேர்த்து கூப்பிட்டு இருக்காங்க. இது எல்லாம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. யாரும் மறுக்க முடியாது. இந்த மாதி¡¢ ஒரு மனிதா¢ன் வரலாறு ஏன் வெளி உலகிற்கு அதிகமாக தொ¢யவில்லை. அவருடைய வரலாறுகள் ஒரு குறிப்பிட்ட நூலகத்திலேயே முடங்கிக் கிடப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள். அதற்கான காரணங்கள் என்ன?

பதில் :- ஏன் வெளியில வரவில்லை என்று கேட்கிறீர்கள் இல்லையா ஏன்னா இங்க வந்து தன்னைத் தானே வெளிப்படுத்திக்கணும். அப்படி இல்லை என்றால் பணம் கொடுத்து பிரபலப்படுத்திக்கணும். இல்லையென்றால் அவர் சார்ந்த சமூகம் பிரபலபடுத்தணும். தாத்தா விஷயத்துல இது எதுவுமே நடக்கல. இது வந்து என்னுடைய உடனடியான பதில். தாத்தா வந்து தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதை அவர் விரும்பல. ஆனால் தாத்தாவின் பெயரை சொன்னால் தனி மா¢யாதை மதிப்பு இருக்கு. அவரைப் பற்றி பேச நிறைய விஷயம் இருக்கு. இவ்வளவு நாள் கழித்து  இப்ப கேட்கறீங்க இல்லியா. அது போதும் எனக்கு.
 
தமிழோவியம் :- அவருடைய தொடர்ச்சியாகத் தான் உங்க அப்பா உங்களை வளர்த்ததாக சொல்லலாம் இல்லையா மேடம்?

பதில் :- இருக்கலாம். இருக்கும். அப்படித்தான் இருக்கணும். அப்பாவுக்கு தாத்தாவின் கருத்தில் ரொம்ப ஈடுபாடு. தாத்தா பேருக்கு களங்கம் வந்துடக் கூடாதுனு நான் ஈஸியா சொல்றேன். அப்பா வந்து அதை மனசுக்குள்ளேயே நினைச்சு நினைச்சு வளர்ந்தவர். வெளியில கூட சொல்லமாட்டாரு. எளிமை என்று சொன்னால் அவரை மாதிரி பார்க்க முடியாது. இப்ப உலகத்துல இப்படி நடக்குது. அதுபடி நான் மாறி நான் ஒதுங்கி நிற்கிறேன் என்று நான் சொல்லலாம். ஆனால் அவர் அது நியாயம்னா நியாயம் என்ற தடத்தில் இருந்து மாற மாட்டார்.

தமிழோவியம் :-பக்தி இலக்கியங்களில் உங்களை கவர்ந்தது எது?

பதில் :- ராமாயணம் மகாபாரதம் படைப்புகளிலேயே எனக்கு ரொம்ப பிடித்தது. நடந்த சில நிகழ்வுகளில் கற்பனையேற்றி அப்படியே படைத்து இருக்காங்க அப்படின்னு பார்த்தாலும் படைப்புல இருக்கிற ஒரு அழகு இருக்குது இல்லையா அதை நான் ரசிக்கிறேன். அதையும் மீறி ஒரு மனுஷனுக்கு என்னென்ன குணங்கள் இருக்கணும் என்னென்ன குணங்கள் இருக்கக் கூடாது. எது எது இந்த வாழ்க்கைக்கு நல்லதுனு சிலர் வாழ்ந்து காட்டி இருக்காங்க என்பதை கற்பனையாக புகுத்தி கொடுத்து இருக்காங்க. எட்டாம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருக்கும் பொழுது எனது சித்தப்பா வீட்டுக்கு போவேன். அங்க ராஜாஜி எழுதிய ராமாயணம் மகாபாரதம் அங்க இருக்கும். அப்ப நிறைய முறை அதை படித்திருக்கேன்.

இப்போ வாசிக்கிறது கிடையாது. என்னுடைய தெருவில் பவானி என்று ஒரு பெண்மணி. அவங்க அப்போ ஒரு பள்ளிக்கு வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாங்க. பள்ளியில் அவங்க லைப்லோ¢யன். அங்க இருந்து இந்திரஜால் காமிக்ஸ் போன்ற புத்தகங்களை படிக்கக் கொடுப்பாங்க. அதே மாதிரி ராமாயணம் மகாபாராத்தை முழுமையா ஆங்கிலத்தில் படங்களுடன் புத்தக வரிசை இருக்கும். அதைப் படிக்கக் கொடுப்பாங்க. இன்னொரு தோழி ராதா. அவங்க வாரப்பத்திரிகை உடல் பொருள் ஆனந்தி என்று தொடர் அப்போது வந்திட்டிருந்தது. அதையெல்லாம் பைண்ட் செய்து வைத்திருப்பாங்க. இதைப் போன்று அவங்க வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். புத்தகம் என்று வரும் பொழுது எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாவற்றையும் வாசித்துவிடணுமென்று இருக்கும். இப்போ அப்படி இல்லை. கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது.

பக்தி இலக்கியங்களில் நான் கேரக்டர்களைத் தான் பார்க்குறேன். பக்திக்கு போகல நான். நான் மனுஷங்களை நேசிக்கிறேன். மனிதர்களை நேசிப்பதை பக்தியாகப் பார்க்கிறேன். ஆண்டாள் எழுதிய திருப்பாவையை பக்தி இலக்கியமாக நீங்க பார்த்தீங்கன்னா ஒரு கேரக்டரை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமானு நான் அப்படி பார்க்குறேன்.

தமிழோவியம் :- ஒரு மொழி பெயர்ப்பு என்பது எப்படி இருக்கணும் என்று நீங்கள் நினைக்கிறீங்க?

பதில் :- மொழிபெயர்ப்பு என்பது சிரமமான விஷயம். ஈஸியா அது மொழி பெயர்ப்புநூல்தான்னு சொல்லிடுவாங்க. நான் பண்ணியதற்காக இதனை சொல்லல. ஒரு சிறுகதையோ நாவலோ கட்டுரையோ எதைச் சொன்னாலுமே மொழிபெயர்ப்பென்றால் அது ஒரு படைப்பாளிக்கு இரண்டு விதமான சவால். ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்பை சிறப்பாக தரணும் என்பது மட்டுமே சவால். அது ஒரு சவாலாகப் போயிடும். அது விமர்சனத்துக்கு போகும் பொழுது படைப்பாளி என்ன சிந்தித்தான் எப்படி கொடுத்தான் என்பது யாருக்கும் தெரியாது. அது ஒரு படைப்பாகத் தான் வாசகனுக்குப் போகும்.

மொழி பெயர்ப்பு என்பது இரண்டு விதமான சவால். ஒரிஜினல் மூலத்தில் அவர் சொன்னதை அவர் எந்த அளவில் சொன்னாரோ அதை 60 சதவீதமாவது உள்ளவாறு மொழிபெயர்த்துத் தர முடியுதானு பார்க்கணும். அவர்களையே அப்படியே தரணும். நம்கருத்தைத் தரக் கூடாது. ஆக அசல் படைப்பாளியின் சிந்தையை ஏற்று படைப்பாளியாகவே மாறி அவரின் படைப்பை நம் படைப்பாகப் படைக்க வேண்டிய நிலை அது. அந்த சிறப்பு மொழிபெயர்ப்புக்கு உண்டு.

தமிழோவியம் :- மொழிபெயர்ப்பாளர்களுக்கு தகுந்த மரியாதை முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு சிரிப்பு நடிகருக்கு தரும் முக்கியத்துவம் கூட ஒரு மொழிபெயர்பாளருக்கு தரப்படுவதில்லை என்ற சமீபத்தில் ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது பற்றி?


பதில் :- எழுத்தாளர்களுக்கே தர்றது இல்ல. அப்புறம் இங்க எங்க மொழிபெயர்ப்பாளர்களுக்கு தரப் போறாங்க. எழுத்தாளர்களுக்கு திரைப்படங்களில் என்ன மரியாதை தர்றாங்க. இப்பத் தான் கொஞ்சம் தர்றாங்க. ரைட்டர்ஸ் என்கிறவங்க உள்ளே இருக்குறவங்க. வெளியில தெரியாது. திரைப்படத்தின் இயக்குனருக்கே 75க்குமேலதான் முக்கித்துவம் தர்றாங்க. முந்தின காலக்கட்டத்துல கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கு தான் முக்கியத்துவம். பிறகு இசையமைப்பாளருக்கு எடிட்டிங் பண்றவருக்கு டப்பிங் பண்றவருக்குனு இப்ப முக்கியத்துவம் தர்றாங்க. இவங்களுக்கு கீழ தான் எழத்தாளர்களை வைக்கிறாங்களோ என்னவோ. இப்போ எழுத்தாளார்களுக்கும் வசனகர்த்தாகளுக்கும் முக்கியத்துவம் வந்திருக்கு.  தமிழ் எழுத்தாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் இனி வரும். மரியாதை கிடைக்கும் என நம்புவோம். இனி மாற்றம் வரும்னு நம்பலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

தமிழோவியம் :- சரி  மேடம் நீங்க மொழி பெயர்ப்பில் எதிர்கொண்ட சிக்கல் சவால் பற்றி சொல்லுங்களேன்?

பதில் :- ரொம்ப சிக்கல் இருந்தது. ரொம்ப சவால் இருந்தது. சமஸ்கிருத மொழியின் அழகை என்னால் முழுமையா தர முடியல. எதுகை மோனையோடு தர்றது சந்தங்களோடு தர்றதுனு காலத்திற்கே உரிய ஒரு சிறப்பு சமஸ்கிருதத்தில் கொடுத்திருக்குறா¡ங்க. அந்த அழகை என்னால் கொண்டு வர இன்னும் முடியலை.  அந்த அழகை செறிவை என்னால் தரமுடியல. என்னுடைய மொழி ஆளுமை குறைவாக இருக்கலாம்.

மற்றதைவிட சிக்கல்கள் என்று சொன்னால் ஒரு சின்ன விஷயத்தில் அர்த்தம் மாறி விடும். இலக்கணம் என்பது சமஸ்கிருதத்தில் ரொம்ப முக்கியம்.  நான் சமஸ்க்ருத ஸ்காலர் கிடையாது. 12 வருடம் 19 வருடம் என்று இதிலே ஊறியவர்கள் எல்லாம் இங்கு இருக்காங்க.  என்னுடைய எடுத்ததை முடித்துவிடவேண்டுமென்ற வெறியும் ஆர்வமும் தான் என்னை மொழிபெயர்க்க முழுக்க வழி நடத்தி போய் இருக்குதுனு நான் நினைக்கிறேன். இன்னொரு சின்ன புஸ்தகத்தை நான் இனி மொழிபெயர்த்து விடுவேனா என்பது எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கு. நான் களைப்படைகிற நேரங்களில் தனுஷ்கோடி ராமசாமி என்கிற எழுத்தாளர் அவர் இப்ப இல்லை. நீங்க பண்ணிடுவீங்கம்மா உங்களால பண்ண முடியும் என்பார். நான் முடியாம தவித்துக் கொண்டிருந்தது அவங்களுக்குத் தெரியல. ஆனால் என்னால்  முடியும்னு அவங்க நம்பினாங்க. அதனால நான் செய்துதான் ஆகணும். என்னுடைய நீதி சதகம் 2000ல் வருது.  2005ல் பர்த்ருஹா¢யின் 300 பாடல்கள் அடங்கிய சுபாஷிதம் முமுத் தொகுப்பா வருது அதே போல சீவலப்போ¢ பாண்டி எழுதிய சௌபா பாரதி கிருஷ்ணகுமார் நந்தகுமார் மாலன் ராஜீக்கள் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் இவங்க எல்லாம் உங்களால் முடியும்னு சொல்லி உற்சாகப்படுத்தினார்கள். அந்த நம்பிக்கை எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது.
 
எல்லாத்துக்கும் மேல் பன்மொழிப்புலவர் மு.கு.ஜெகநாதராஜா மாமா என் மீது நம்பிக்கை வைத்து தன்னிடம் இருந்த தெலுங்கு பதிப்பு தொகுப்பை முழுமையா கொடுத்து உதவினார். பர்த்ருஹரி சுபாஷிதம் முதல் அட்டையில் இருந்து கடைசி அட்டை வரை தெலுங்கில் இருக்கும். அதில் சுலோகம் விளக்கம் என 300 பாடல்களை கொண்ட தெலுங்கு தொகுப்பை கொடுத்தார். அப்பாகிட்ட சொல்லி அவளால் முடியும் செய்யச் சொல்லுங்கனு கொடுத்தனுப்பினார். இது மாதிரி மற்றவர்களின் அன்பும் பிரியமும் தான் என்னை வழி நடத்திக்கிட்டு வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன். அவங்க என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பாழ்படுத்திடக் கூடாது இது நம்மால் முடியும்னு  நினைத்தேன். அடுத்து அதில் இருந்த சுலோகங்களை திருப்பி திருப்பி வாசித்து கடை நிலை மனிதனைப் போல் இருக்கக் கூடாது. எடுத்த கா¡¢யத்தை முடித்தே ஆகணும் என்று சொல்லி 6 வருடங்கள் கழித்து முடித்தேன். ராம்கோ சேர்மன் பி.ஆர்.ராமசுப்ரமணியராஜா அவர்களின் மனைவி சுதர்ஸனம் அம்மா தான் முதன் முதலில் சமஸ்கிருதத்தை ராஜபாளையத்திற்கு கொண்டு வந்தது. நாங்க பேசி பேசியே  ஒரு 10 நாளில் பேச ஆரம்பித்து விட்டோம். தமிழக அரசு நூலகமும் சமஸ்கிருதமும் மட்டுமே எனது சிந்தனையை ஆட்கொண்ட நாட்கள் அவை.
 
தமிழோவியம் :- புதுமையான விஷயங்களை மொழிபெயர்த்து அதனை நூலாக வெளியிட்டு பெயர் வாங்கிட்டு போகிறவர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் பழமையான ஒரு விஷயத்தை நீங்க தோண்டி எடுத்து கொடுத்து இருக்கீங்க. உங்களுடைய இந்த முயற்சிக்கு பெயர் கிடைக்கலாம் பெயர் கிடைக்காமலே கூட போகலாம். ஆனால் இது மிக முக்கியமான பதிவு என்று உங்கள் நண்பர் திருமதி ஆனந்தி ஒரு முறை என்னிடம் ஒரு கூட்டத்தில் சொல்லி இருக்குறாங்க. இது பற்றி?

பதில் :- இதுல எனக்கு பெயர் வரும்இ வராதுனு நினைச்சு நான் செய்யல. ஒரு சுலோகம் பார்க்கிறேன். மனுஷங்களை மூன்று விதமா பிரிக்குது.  எடுத்த உடனே இந்தக் காரியம் சிரமமாக இருக்கும் என்று சொல்லி விட்டு விடுகிறான் கடைநிலை மனிதன். ஒரு காரியம் எடுத்து அதை பாதி பண்ணி இது கடினம் சிரமமாக இருக்குதே இதுக்கு மேல பண்ண முடியாதுனு விட்டு விடுகிறான் நடுநிலை மனிதன். எவ்வளவு தான் சிரமமாக இருந்தாலும் இது முடித்துத் தான் ஆகணும்னு நினைக்கிறான் உயர்நிலை மனிதன். இந்த சுலோகம் எனக்கு படிக்க கிடைக்குது. இது எனக்கு படித்த உடனே ஏதோ ஒன்றை தருது. எவ்வளவு அருமையா இதை சொல்லி இருக்காங்க. அந்த சுலோகத்தை வைத்துத் தான் இந்த புத்தகத்தை நான் தேடுகிறேன். பர்த்ருஹா¢யோட அந்தப் புத்தகம் நமக்கு வேணும் என்று தேடறேன். முதலில் கிடைத்தது யாம் சித்தயாமி ஸா மாம் விரக்தா என்று ஆரம்பிக்கும். அதாவது அந்த பாடல் இந்த  காலக்கட்டத்துக்கும் பொருத்தமானதாக இருக்குனு நினைத்து எல்லாப் பாடல்களையும் தேடறேன். 
 
நான் யாரை என்னுடையவளாக நினைக்கிறேனோ
அவள் என்னை நேசிப்பதற்கு மாறாக இன்னொருவரை நேசிக்கிறாள்
..................
என்று தொடர்ந்து வரும். இதனை என்னுடைய  பர்த்ருஹா¢யின்  சுபாஷிதம் நூலில் 300 பாடல்களில் சேர்க்கவில்லை. அதற்கும் முன்னாலேயே

தனிப்பாடலாக கொடுத்திருப்பேன். 7ம் நூற்றாண்டில்  எழுதப்பட்ட இந்தப் பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கு பொருத்தமாக இருப்பதை பார்க்கிறேன்.  அதனால் மற்ற பாடல்களையும் படித்தே ஆகணும் என்று தேடிப் படிக்கிறேன். படிக்க படிக்க அவ்வளவு இருக்கு. நான் தேடி தேடி பார்க்குறேன். ஒரு முழுமையான புத்தகம் வரல. எனக்கு முழுமையா வேண்டி இருக்குது.  நீதி சதகம் ஒரு இடத்தில கிடைத்தது. ஜெகநாத ராஜா தன்னுடயதை எடுத்து கொடுத்தார். காந்தி கலை மன்றத்தில் ஒரு புத்தகம் கிடைத்தது.  எனக்கு  திருப்தியே இல்லை. நான் வந்து சமஸ்க்ருத ஸ்காலர் கிடையாது.  இதுக்கு முன்னாடி மொழிபெயர்த்தவங்க சமஸ்க்ருத ஸ்காலர்களா இருந்தாங்களா இல்லையானு எனக்கு தொ¢யாது. அந்தமொழிபெயர்ப்பு எனக்கு ஒ¡¢ஜினலில் இருந்து ஒத்துப் போக மாட்டேங்குது.  கவிஞர் வைரமுத்து திசைகள் மாலன் என்னிடம் சொல்லி இருக்காங்க. கவிஞர் கண்ணதாசனுடைய வைரக்ய சதகம் படிச்சுருக்கேன்னு சொல்லி  இருக்காங்க. அதுவும் எனக்கு கிடைக்கல.
திருக்குறளை படித்து விட்டு உடனே இப்போ அர்த்தம் சொல்ல முடியுமா உங்களாள? ஆண்டாள் உடைய பாடல்கள் தமிழில் தான் இருக்கின்றன என்றாலும் அதற்கே ஒரு மொழி பெயர்ப்பு மாதி¡¢ தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது பர்த்ருஹா¢யை தேடித் தேடிப் பார்க்கிறேன். அந்த சிரமங்கள் வழியாக பண்ணியது தான் அந்த நூல். அது எனக்கு திருப்தி தந்தது. எளிமையா இருக்கணும். பர்த்ருஹரி

என்றால் இப்படி எளிமையாக படிக்கணும் போய் சேரணும்.  எனக்காகத் தான் இந்த மொழிபெயர்ப்பை செய்தேன். புத்தகமாக பண்ணுவோம் என்பது தெரியவே தொ¢யாது. அதுக்கு அப்புறம் ஒரு 30 40 பாடல்கள் வந்த பிறகு அப்பாவிடம் காண்பித்து அவர் ஜெகநாதராஜாவிடம் காண்பித்து பின் புத்தகமாக வந்தது. இது ஏன் எல்லாருக்கும் போய் சேரக் கூடாதுனு நினைத்து புத்தகமாக வந்தது. 

தமிழோவியம் :- மரபு வழி இலக்கியங்களை ஒருவர் படிக்கும் பொழுது அது பல விஷயங்களை கொடுக்குது. ஆனால் நவீன இலக்கியங்கள் அப்படி எந்த விஷயங்களையும் தருவதில்லைனு அ.முத்துலிங்கம் இந்திரன் போன்றவர்கள் சொல்கிறார்கள். இது பற்றி சொல்லுங்களேன்?

பதில் :- இது அவங்களுடைய கருத்தாக இருந்தாலும் அதுல ஒத்துப் போக வேண்டியதா இருக்கு. பழைய இலக்கியங்கள் மாரலை வைத்துத்தான் படைக்கப்பட்டிருக்கு. இப்படி நடந்தால் மனிதனுக்கு நல்லது. அவனுடைய வாழ்வில வேற துன்பத்தையோ துயரத்தையோ அடையாமல் ஒரு சுமுகமான வாழ்க்கை நடத்திடலாம். இது நேரடியான போதனை மாதிரி  தெரிந்தாலும் சா¢ போதனை மாதிரி இல்லாது மறைமுகமாக ஆனால் போதனை தான். பழைய இலக்கியங்கள் அப்படித் தான் இருந்தது. இப்ப அப்படி இல்லை. ஏன் என்றால் மரபை மீறி வருது. அதை தவறு என்றும் சொல்ல முடியாது இல்லையா? இப்போதைய வாழ்க்கை முறையே அப்படித் தானே இருக்கு. இங்கு அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு எழுவது நல்லது. இரவு 10 மணிக்கு தூங்கச் செல்வது நல்லதுனு சொல்றாங்க. இது பற்றி எல்.கே.ஜி வகுப்பிலேயே  பாடல் இருக்கு.  ஏர்லி டு ரைஸ் ஏர்லி டு பெட் மேக்ஸ் எ மேன் ஹெல்தி வெல்தி அண்ட் வொய்ஸ்னு. ஆனா அடுத்த கிளாஸ் வந்ததும் இது என்ன சொல்கிறதுங்கறதை மறந்துடறாங்க. இரவு லேட்டா தூங்கிட்டு காலை லேட்டாஎழுந்திருக்கிறது இன்னும் இருக்கில்லையா. இப்படி வாழ்க்கை சிஸ்டமே மாறும் பொழுது அதுவும் மாறுது உடன் படுகிறது.
ஆனா எந்த விஷயங்களையும் தருவதில்லைனு இல்லை. நடைமுறை மாற்றம் சிக்கல் உணர்வுகளை நவீன இலக்கியங்களும் தருதுதான்.

தமிழோவியம் :- வாழ்க்கையில நீங்க சந்தித்த பார்த்த கேட்ட வினோதமான நிகழ்ச்சிகள் பற்றி?

பதில் :- விநோதமென்றால் உறவுகளின் நிலையைப் பார்க்கிறேன். சக மனிதனை நேசிக்கும் விஷயத்துல எங்கே எப்படி மாறுகிறோம். இது விநோதமா இருக்கு. ஒவ்வொரு மனுஷங்களையும் புதுசா சந்திக்கிறோம் இல்லையா? அதுவே எந்த நேரத்துல பிரியமும் அன்பும் உருவாகுதோ அது காதலாக இருக்கட்டும் நட்பாக இருக்கட்டும் நான் பொதுவாக சொல்றேன். அது எந்த நேரத்துல தோன்றுதோ எந்த ஒரு சந்தர்ப்பத்துல காரணமே இல்லாது ஒரு வார்த்தையால மொத்தப் பிரிவும் உண்டாகுது என்பது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே வினோதமாக இருக்கு.

சென்னைக்கு ரயிலில் போய்க்  கொண்டிருக்கிறேன். விழுப்புரம் பக்கத்தில் ரயில் நிற்கிறது. நான் பழைய படி இருந்திருந்தால் ரயிலிலேயே உட்கார்ந்திருப்பேன். இப்ப வந்து ஏன் ரெயில் நிற்கிறது என்று போய் பார்ப்போம் என நினைத்து கீழே இறங்கி போய் பார்க்கிறேன். ஒரு பெரிய விரிசல் தண்டவாளத்தில். இதில் சிக்கல் என்ன வென்றால் ரெயில் தண்டவாள வி¡¢சலுக்கு நடுவே நிற்கிறது. ரயில் தண்டவாள விரிசலுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தாலோ அல்லது இந்தப் பக்கம் நின்றிருந்தாலோ வி¡¢சலை சரி செய்வது எளிது. ஆனால் விரிசலுக்கு நடுவே நிற்கிறது. அந்த விரிசலை பார்த்து டிரைவர் சமார்த்தியமாக சடன்பிரேக் போட்டு நிறுத்தி இருக்கிறார். அப்படி அவர் செய்யாமல் இருந்திருந்தால் எல்லாரும் போயிருக்க வேண்டியது தான். நான் எனது உறவினருக்கும் மற்றொரு பெட்டியில் இருந்த ஒரு கர்பிணி பெண்ணைப் பார்த்து அவர் ஒரு சிறு குழந்தையோடு வந்திருந்தார். அவரை பார்த்து ஒன்றும் இல்லை என ஆறுதல் சொல்லி விட்டு இருக்கிறேன்.
அந்த சமயத்தில் நான் நினைத்தது. விபத்து நடந்திருந்தா டிரைவர்தான் காரணம்னு உடனே சொல்லியிருப்போம். ஒரு விபத்தை நடக்கவிடாமல்  ஒரு டிரைவர் தடுத்து இருக்கிறார். இத்தனை பேரை காப்பாற்றி இருக்கிறார். முதலில் அவரைப் போய் பாராட்டி இருக்கணும். ஒட்டுமொத்தமா நமக்கு அந்த புத்தி இல்லவே இல்ல. இன்னொரு விஷயம் ஒருத்தர் மேல இருக்குற விரோதத்தை வெளிப்படையா இன்ன வார்த்தைகள் என்று இல்லாமல் வெளிப்படுத்துறாங்க. ஆனால் பி¡¢யத்தை சொல்றதே கிடையாது. எனக்கு அது ஏன்னு தொ¢யாம தவித்திருக்கிறேன். அதுக்கு வேறு பெயர் வைத்து விடுவார்களோ என்ற பயமா?  கோபத்தை வெளிப்படுத்த முடியும் பொழுது அன்பையும் வெளிப்படுத்த முடியும். இது எல்லாம் எனக்கு வினோதமாக இருக்கு.  இது நடந்து பல வருடங்கள் இருக்கும். ஒரு நாள் எங்கோ போயிட்டு எனது மாமியார் வீட்டுக்கு கா¡¢ல் போகாமல் நடந்து போய்க் கொண்டு இருக்கேன். நான் போகும் திசைக்கு எதிர் திசையில் ஒரு பெண் ரோட்டில் கிடக்கிறாள். ஆடைகள் மட்டும் கொஞ்சம் கிழிந்து ஒரு மாதிரியா இருக்கு. நான் ரோட்டை கிராஸ் பண்றேன். அப்பொழுது ரோட்டில் போகிற ஒரு சைக்கிள்காரர் என்னம்மா இங்க நின்னுக்கிட்டு இருக்கே. போ வீட்டுக்குப் போனு சொல்றாரு. நான் போயிடுறேன். நானே அப்படி இருந்திருக்கேன் என்று நினைக்கும் பொழுது வருத்தம் தான். வீட்டுக்குப் போய் மறுபடியும் மனசு கேட்காம ஒரு சேலையை எடுத்துட்டு வர்றேன். அந்தப் பெண் அங்க இல்லை. இரண்டு  நாள் கழித்து சொல்றாங்க. அது அப்படித் தான் அங்க விழுந்து கிடப்பா இங்க விழுந்து கிடப்பானு சொல்றாங்க. நான் ஒரு நிமிடம் யோசிக்கிறேன். என்னுடைய உறவுகளாக இருந்தால்  நான் பாராமல் போய் இருப்பேனா? அவளை போய் யாருனு பார்க்கணும் என்று நினைத்து சாலையைக் கடக்கும் பொழுது ஒருவர் வந்து என்னம்மா இங்க ஏன் நிற்குற போ போ வீட்டுக்குப்  போ சொல்லும் பொழுது எனது உறவுகளாக இருந்திருந்தால் நான் போயிருப்பேனா?

எது  தடுத்தது? பல நாள்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். இந்த மாதி¡¢ ஆரம்பித்த  தேடல்கள் தான் என்னை இந்த மாதிரி கொண்டு வந்து நிறுத்தி இருக்கணும்.

அதே மாதிரி ஒரு சில மரணங்கள் வினோதமாக என்னை பாதித்து இருக்கு. 12 வருடங்களுக்கு முன் எனக்கு தொ¢ந்த பெண். அவள் அக்கானு கூப்பிடுவேன். நான் வீட்டை விட்டு வெளியில வர்றேன். அவங்க கதவை முடுறாங்க. மஞ்சு உன்னிடம் பேசணும் ஆனால் நீ வெளியே கிளம்பிட்ட போயிட்டு வா என்று சொல்றாங்க. இல்லக்கா சொல்லுங்கனு நான் வர்றேன் என்று சொல்றேன். இல்லம்மா நீ போயிட்டு வானு சொல்றாங்க. நான் போயிடுறேன். போன மறு நிமிடம் அவங்க உயிரோட இல்லை. கதவை மூடுவதைத் தான் நான் பார்க்கிறேன். நான் நேசித்த அந்த சகோதரி இல்லை. போயிட்டாங்க. என்ன தடுத்தது? அவங்க கூப்பிட்டாங்க நான் வர்றேனு சொன்னேன். அவங்க தானே போயிட்டு வானு சொன்னாங்க.

ஏதோ ஒன்று சொல்லணும்னு நினைச்சாங்க என்ன நினைச்சுருப்பாங்க. அந்த அன்புக்குள்ளான தேடல்கள் எந்தெந்த விஷயத்துல லேட் ஆகுதுனு நினைக்கிறேன். இருப்பதிலேயே விநோதமான கொடுமை என்னன்னா மனசில் இருக்கும் அன்பை வெளியே காட்ட இயலாமல் மறைத்து வைத்திருக்கிறது.  உள்ளத்தில் பொங்கும் அன்பை எப்படி திரை போட்டு கட்டறதுன்னு போராடறது இருக்கே அது விநோதமானது.

தமிழோவியம் :- உங்களுடைய நான்காவது தூண் நூல் உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது? இப்படி ஒரு நேர்காணல்களை பண்ணுவது என்பது சில நிமிடங்களில் சில நாட்களில் தீர்மானித்து செயல்படுத்தும் விஷயம் கிடையாது. இதற்கு எந்த மாதி¡¢யான திட்டமிடலோடு இதனை செய்தீர்கள்?

பதில் :- எனக்கு  நேர்காணல்கள் ரொம்ப பிடித்த விஷயம். ஏன்னா நேர்காணல்கள் என்ற பெயரே இல்லாமல் மனுஷங்களும் மனுஷங்களும் சந்திக்கையில் அதைத் தான் நாம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம். எந்த மனுஷங்களாக இருந்தாலும் என்ன நடந்தது அதுக்கு அப்புறம் என்ன நடந்தது என்பதைக் கேட்போம். தொ¢யாதவங்களாக இருந்தால் பேசுறது எல்லாமே நேர்காணல்கள் தான். ஒருத்தரை ஒருத்தர் அறிந்து கொள்வது.

ஒரு மொழியை நேர்காணல் மாதிரித் தான் பேசிக்கிட்டு வளர்த்துக் கிட்டு இருக்கோம். பல நேர்காணல்களை படிக்கிறோம். வாசிக்கிறோம். அந்த இடத்துல நாம இருந்திருந்தால் என்ன கேட்டிருப்போம். அவங்க வந்து இவ்வளவு விஷயங்களை தெரிந்து எவ்வளவு அருமையா கேட்டிருக்காங்க.

தெரியாதவங்களை எப்படி கேட்போம் அப்படிங்குற சிந்தனை எனக்கு எப்பவுமே உண்டு. நான்காவது தூண் புத்தகம் வருவதற்கு முன்பு 4  நேர்காணல்களை பண்ணி இருக்கேன். அது இணையத்துல வந்திருக்கு. அது நேர்காணல் எடுத்து அதனை கொடுக்காமலும் வைத்திருக்கிறேன்.  ஒரு கட்டத்துல என்னால எழுதவே முடியாதுங்கற நிலை. கானல் காடு நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த பின்பு கவிதையே எழுத வேண்டாம் என்று இருந்தேன். அப்போது ஏதாவது செய்தே ஆகணும் இல்லையென்றால் முடியாது என்ற நிலை. சிவசங்கர் பாபா ஏற்பாடு செய்து தொகுத்த எழுது எழுது எழுது நூலின் மூன்று பாகங்கள் வாசிக்க கிடைத்தது. எனக்கு பிடிச்சிருந்தது. அந்த நேரத்தை நேர்காணல்கள் செய்ய பயன்படுத்திக்கலாம்னு திட்டமிட்டு செய்தேன். வார இதழ்கள், மாத இதழ்கள் அதில் வரும் படைப்புகள் பற்றி பல கேள்விகள் இருந்தது அப்போ. உடனே ஏன் பத்திரிகை ஆசிரியர்களை மட்டுமே நேர்காணல்கள் செய்யக்கூடாதுன்னு நினைச்சேன். ப்ராக்ஷன் ஆப் செகண்ட் வந்த எண்ணம்தான். செயல்படுத்த 9 மாதத்துக்கும் மேல் ஆச்சு. பல சிரமங்களுக்குப் பிறகு நான்காவது தூண் நூலாக வரும்போது சிரமங்கள் எல்லாம் ஒண்னுமே இல்லைன்னு ஆயிடுச்சு.

தமிழோவியம் :- நான்காவது தூண் நூலுக்கு நேர்காணலில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது சொல்லுங்களேன் ?

நான்காவது தூண் நூலுக்கு நேர்காணல்கள் செய்த அனுபவத்தை தனியாக ஒரு நூலாகப் போடலாம். அந்த அளவுக்கு அனுபவம் கிடைச்சது.  எல்லோருமே தங்கள் வேலைக்கிடையிலே நேரம் கொடுத்தாங்க. நேரடி நூலுக்கான நேர்காணல் இதுன்னுதான் எல்லார்ட்டயும் சொல்லியிருந்தேன்.

நான் எடுக்கும் நேர்காணல் நூலாக வரும் என்று எல்லோரும் நம்பியது நேர்காணல் கொடுத்ததுதான் இந்த நூலுக்கான வெற்றி. யார் யார் நேர்காணல்கள் தர்றாங்கங்கறதே மத்தவங்களுக்கு முதலில் தெரியாது. நான் யாருன்னுகூட சிலருக்கு தெரியாது. புத்தகமா வந்த பிறகு எல்லோருக்குமே சந்தோஷம்தான். புத்தகமாக வருவதற்கான முதல் ஊக்கம் கல்கி சீதாரவி கொடுத்தது. அந்த வார்த்தையைக் கொண்டே எனக்கு நானே ஊக்கம் கொடுத்துக் கொண்டேன்.

சுவாரஸ்யமான நிகழ்ச்சின்னா நிறைய இருக்கு. ஒண்ணு சொல்றேன். சோ வைப் பார்க்க நேரம் கேக்கிறப்ப என் பேட்டி வந்தா அந்தப்புஸ்தகத்துக்கு கரும்புள்ளியாதான் இருக்கும்னு சொன்னார். இல்லை நீங்க கொடுத்தாதான் முழுமையா இருக்கும்னு சொல்றேன். ஒருமணிநேரம் கேட்டா பத்து நிமிஷம்தான் தரமுடியும்னு சொன்னார். நக்கீரன் கோபால் லேனா தமிழ்வாணன் இவங்களை எடுத்த பிறகுதான் சோ அவர்களை எடுக்கப் போறேன். அவங்க கேள்விகளுக்கு நீள நீளமான பதில்கள் சொல்லியிருந்தாங்க. அதையட்டி வேற கேள்வியும் கேட்க அவகாசம் இருந்தது. சோ அவர்களிடம் கேள்வி கேட்டுட்டு அவர் பதிலையட்டி அடுத்த கேள்வி யோசிக்கிறதுக்குள்ள பதிலை முடிச்சுட்டு என்னையே பாப்பாரு அடுத்த கேள்விக்காக. பதில முடிச்சிட்டாரான்னு சுதாரிச்சு அடுத்த கேள்வி கேக்கிறதுக்குள்ள பதில் சொல்லிட்டு இன்னொரு கேள்விக்கு தயாராயிருப்பாரு.  வெலவெலப்ப வெளியே காட்டிக்காம கொஞ்சம் கேட்டேன். நிறைய கேள்விகள் கேட்கல. அதுக்குள்ள 10 நிமிஷம் ஆயிடுச்சு. போதுமான்னார். இல்லை இன்னும் இருக்குன்னேன். போதும் போதும்னு சொன்னார். அவர் கடைசியா கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலை இப்படி எப்படிங்க போடறதுன்னு கேட்டேன். இப்படியே போட்டுக்கோங்கன்னார். எப்படியோ தைரியமா கேள்வி கேக்கிறது மாதிரி எடுத்து முடிச்சேன்.  இப்போ நிஜமாவே அந்த தைரியம் இருக்கு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors