தமிழோவியம்
திரைவிமர்சனம் : கிரீடம்
- மீனா

 

நேர்மையான ஹெட் கான்ஸ்டபிளான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று நினைக்கிறார். அப்பாவின் வாக்கை வேதவாக்காக மதிக்கும் அஜித்தும் அப்படியே இன்ஸ்பெக்டர் தேர்வுக்குத் தயாராகிறார். இதற்கிடையே அடாவடி செய்யும் தன் மகன் மீது ராஜ்கிரண் எடுக்கும் நடவடிக்கைகளால் ஆவேசமாகும் அப்பகுதி எம்.எல்.ஏ தன் செல்வாக்கால் ராஜ்கிரணை கோடியக்கரைக்கு டிரான்ஸ்பர் செய்கிறார்.

ajith,trishaகுடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் சாம்ராஜ்யத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமார் ஆட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரைப் புரட்டி எடுக்கிறார். அஜய்குமாரை அடித்ததன் மூலம் அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் போலீஸ் வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அடிபட்ட புலியான பழைய தாதா அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான். முடிவில் அஜித் தாதாவானாரா? அல்லது காவல்துறை அதிகாரியானாரா என்பதே கிளைமாக்ஸ்.

பண்பட்ட நடிப்பால் அசத்துகிறார் அஜித். அப்பாவிற்கு அடங்கி நடக்கு இடங்களிலும், அப்பாவிற்கு ஒரு ஆபத்து என்றால் பொங்கி எழும் இடங்களிலும் சூப்பர். த்ரிஷாவுடனான காதல் ஒரு பக்கம் - கடமை ஒரு பக்கம் என்று இரட்டை குதிரை ஓட்டுகிறார். த்ரிஷா அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே கலகலப்பூட்டுகிறது. சில காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைக்கிறார்.

ராஜ்கிரண் பாசமுள்ள அப்பா, நேர்மையான போலிஸ்காரர். பாந்தமான பாத்திரம். குறிப்பாக அஜித்துக்கு ஓட்டப்பயிற்சி அளிப்பது, எழுத்துத் தேர்வுக்கு குறிப்பெடுத்து கொடுப்பது, மகனுக்கு வேலை கிடைச்சதும் சொந்த வீடு வாங்க நினைப்பது என பல காட்சிகளில் அபார நடிப்பை வழங்கி பிரமாதப்படுத்துகிறார் ராஜ்கிரண். அடக்கமான அம்மாவாக சரண்யா, அக்காவாக மீனாகுமாரி.. ஹனீபா, ரவிகாளே என அனைவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

அஜித்தை கோணி திருடனாக்கி துரத்தும் த்ரிஷா, கடைசியில் உண்மை நிலைதெரிந்து திருதிருவென விழிப்பதும், அர்த்தராத்திரியில் மொட்டைமாடியிலுள்ள தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து அஜித்தின் பெற்றோரைப் பற்றி பேசி மாட்டிக்கொண்டு அசடு வழிவதுமாக அட்டகாசம் செய்கிறார்..

வீட்டோடு மாப்பிள்ளையாக வரும் விவேக் சில இடங்களில் அசத்துகிறார்.. சில இடங்களில் சொதப்புகிறார்.. அஜித்தின் மச்சான் என்பதை வைத்து இவர் குட்டி தாதாவாக வரும் இடங்கள் கலகலப்பூட்டுகின்றன. அஜித்தின் நண்பர்களாக வரும் சந்தானம், சத்யன் போன்றவர்களும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.. அஜய்குமார் அறிமுக வில்லன் போல தெரியவில்லை. மிரட்டுகிறார். ஆனால் ஓவர் கத்தல்..

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓக்கே. திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்.

கதையில் பல ஓட்டைகள் - தொய்வுகள்.. பல கதாபாத்திரங்கள் இருந்த இடம் தெரியாமல் போகிறார்கள்...  இந்தத் தவறுகளை எல்லாம் சரி செய்தால்தான் இயக்குனர் விஜயால் தமிழ் திரையுலகில் ஒரு இடம் பிடிக்க முடியும்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors