தமிழோவியம்
பேட்டி : திரு. சத்தி. சக்திதாசனுடன் இ-நேர்காணல் - 1
- திருமலை கோளுந்து

கதையானினும், கட்டுரையாயினும், கவிதையாயினும் நான் உணர்வுசார்ந்தே எழுதுபவன் என்று சொல்லும் திரு.சக்தி.சக்திதாசனுக்கு வயது 50. இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் இந்த படைப்பாளி ஈழம் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் பிறந்தவர். தற்பொழுது லண்டனில் வசித்து வருகிறார்.  பொறியியல் படிப்பினை படிக்கும் அனைவரது கனவு நிறுவனமான பிரிட்டிஷ் டெலிகாமில் தொலைத்தொடர்பு தொழில் நுட்ப பொறியாளராக பணி செய்து வருகிறார். மனைவி பெயர் மைதிலி. இவர் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரை சேர்ந்தவர். இவர்களுடைய ஒரே மகனான கார்த்திக் என்ற கார்த்திகேயன் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். கதைகள்,  கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய தமிழ்ப் பூங்காவில் வண்ணமலர்கள், உறவெனும் விலங்கு என்ற சிறுகதை தொகுப்பு, தமிழே நதியாய் ! கவிதை வழியாய்! என்ற கவதை தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தற்பொழுது சிபி இணைய தளத்தில் ''இங்கிலாந்தில் இருந்து சத்தி சக்திதாசன்'' என்ற தொடரை எழுதி வருகிறார். இவை தவிர  இவரது படைப்புக்கள் தமிழோவியம், திண்ணை, பதிவுகள், குமுதம்.காம், ஈ-சங்கமம், அன்புடன் குழுமம், மரத்தடி குழுமம், முத்துக்கமலம், வார்ப்பு, தட்ஸ் தமிழ் எனப் பல இணைய தளங்களில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி இருக்கிறார், எழுதி வருகிறார்.  கண்ணதாசன் எனும் காவியம், குறள் தரும் கதை, பல பிரபலங்களின் நேர்காணல்கள் போன்றவை நிலாச்சாரல் இணையதளத்தில் வந்துள்ளன.  தமிழ்ப்பூங்கா என்னும் இணைய இதழை படைத்து நண்பர்களுக்கும், விரும்பிக் கேட்பவர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வருவதாக சொல்கிறார். இவரிடம் இ-நேர்காணலுக்கு அணுகிய பொழுது தனது பணிச்சுமைகளுக்கு மத்தியில் பெருந்தன்மையோடு  இப்படைப்பாளி சம்மதம் அளித்தார். இனி.........

ooOoo

தமிழோவியம் :- தங்களின் சிறுவயது வீட்டு, சுற்றுப்புறச் சூழல் பற்றிய கேள்விகளோடு இந்த நேர்காணலை நாம் தொடங்கலாமா ?

நான் ஈழத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கைலாய பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எனது தந்தை இலங்கை நீர்ப்பாசனத்துறையில் நிறைவேற்றுப் பொறியியலாளர் பதவி வகித்தவர்.

நான்கு பிள்ளைகளில் நான் கடைசி அங்கத்தினன். நான் சிறுவயது முதல் தமிழில் மிகவும் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன் என்று கூறமுடியாது. ஆனால் அழகிய தமிழ் மேடைப்பேச்சுக்களை மிகவும் ஆழமாக ரசிப்பவன். தமிழுக்கு இருந்த

ஆளுமையை, அதன் இனிமையை என்னவென்று சொல்ல முடியாத உணர்வினால் ரசித்தேன். எனது தந்தை மிகுந்த தமிழ்ப்பற்றுக் கொண்டவர். புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர். நமது வீட்டில் கல்கி, ஆனந்த விகடன், கற்கண்டு,

பேசும்படம் என்று அனைத்து புத்தகங்களும் குவிந்து காணப்படும். என்னைத் தமிழ்பால் ஈர்த்தது, மறைந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களும், அமரர் கவியர்சர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களும் என்றால் மிகையாகாது.

பாடல்களின் இசையை விட அதன் வரிகளையே நான் சிறுவயது முதல் ரசித்து வந்தேன் என்பதே உண்மை..

நான் வளர்ந்த சூழல் சாதரணமாக அந்தக் கால ஈழத்துச் சிறுவர்களிலிருந்து மாறுபட்டதல்ல. சாதாரண வாலிபப் பருவ துடுக்குகளும், துடியாட்டங்களும் நிறைந்த நண்பர் குழாம் சூழ்ந்த ஒரு நடுத்தரவர்க்க இளஞனுக்குரிய சூழலே எனக்குமிருந்தது.

ஆனால் நல்ல வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்து கவிதை சமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். அதுவும் காதல் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனால் அக்கவிதைகளைப் படித்து யார் இதை ரசிக்கப் போகிறார்கள் என்றெண்ணி

அவற்றை புத்தகங்களுக்கடியில் புதைத்து விடுவேன்.

தமிழோவியம் :- மேலோட்டமாக சொல்லாமால்  நான் தங்களிடம் ஒரு ஆழமான பதிலை எதிர்பார்க்கிறேன். எப்படி இருக்கிறீர்கள். சுய அடையாளங்களோடு வாழ்க்கை எப்படி போய்க் கொண்டு இருக்கிறது?

Sathi Sakthidasanமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புலம் பெயர்ந்து நான் லண்டனுக்கு வரும்போது என்னை யாராவது இப்போது இருக்கும் நிலையை அடைவாயா என்று கேட்டிருந்தால், அவர்களை என்ன பைத்தியமோ என்று பார்த்திருப்பேன். ஆனால் பல இடர்களைக் கடந்து இப்போ கொஞ்சம் தெளிவான நிலையில் வாழ்கின்றேன். இந்த அமைதியான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் எனது அன்பு மனைவியே. கலங்கரை விளக்கமாக, அன்பு நண்பியாக, அருமை மனைவியாக பல விடயங்களிலும் என் வாழ்க்கை மேம்படக் காரணமாக இருக்கிறார்.

சுய அடையாளங்களை இழந்து விடாமல் இருப்பதைக் காட்டிலும், இழந்து விட பல காரணங்கள் புலம் பெயர் வாழ்க்கையில் இருக்கிறது. அதாவது அடையாளத்தை இழக்காது வாழ்வதைக் காட்டிலும், இழந்து விட்டு வாழ்வதற்கு வழிவகைகள் ஏராளம். அத்தகைய சூழலில் தமது அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் நிச்சயம் பாராட்டப் படவேண்டியவர்கள். அதற்காக, நாம் தமிழர். நாம் தனி என்று வேறாகப் பிரிந்து நின்று எம்மை தனிப்படுத்தி இந்தப் புலம்பெயர் சமுதாயத்தினின்றும் பிரிந்து வாழ்வது சுயஅடையாளத்தைக் காத்துக் கொள்வதாகாது என்பது எனது கருத்து..

நாம் வாழும் நாட்டில் இருக்கும் சமுதாய அமைப்பில் எம்மையும் இணைத்துக் கொண்டு, சக சமுதாய அங்கத்தினர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் எமது கலாச்சார கோட்பாடுகளுக்கிடையில் தமிழனாக வாழ்வதே சுய அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டதற்கு அடையாளம் என்பது எனது கருத்து.. நாம் எவ்வகையில் எமது அடையாளங்களைத் தக்க வைத்துள்ளோம் எனப்து எமது எதிர்காலச் சந்ததி எந்த அளவிர்கு தம்மைத் தமிழர்களாக அடையாளப் படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்தே உள்ளது.. சுய அடையாளத்தின் சுமையை அதிகமாக்குவோமேயானால், அவர்கள் அதனைக் கீழே போட்டு விட்டு போகக்கூடிய சாத்தியக்கூறுகள் தான் அதிகம் இருக்கும்.. ஆனால் தம்மைத் தமிழராக அடையாளப்படுத்தக்கூடிய வழிவகைகளை இலகுவாக்கினால், தமது சுய அடையாளங்களைத் தொடர்ந்தும் அவர்கள் கடைப்பிடிக்க ஏதுவாயிருக்கும். எமது தற்போதைய சமூகத்தின் தலையாய கடமை இதுவேயாகும்.

வாழ்க்கை மனிதனாக வாழக்கூடிய வகையில் நலமாக போய்க்கொண்டிருக்கிறது

தமிழோவியம் :- தங்களின் சிறுகதை நூலான உறவெனும் விலங்கில் உள்ள 11 கதைகளும்  எதோ ஒரு வகைகளில் மனதை தொடுகிறது, பாதிக்கிறது. இந்த நூலுக்கான வரவேற்புகள்,        விமர்சனங்கள் தங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

சிறுகதைகள் பலகாலமாக எழுதி ஏதோ அனுபவம் பெற்ற எழுத்தாளனல்ல நான். சிறுகதை என்பது எனக்கு ஒரு வித்தியாசமான கோணம். பல அருமையான சிறுகதைகளை மிகவும் அற்புதமான எழுத்தாளர்களின் படைப்புக்களை பலகாலாமக படித்து வந்திருக்கிறேன் என்பதே எனது மிகப்பெரிய அனுபவம். எனது " தமிழ்ப்பூங்கா " இதழுக்காக சிறுகதைகள் எழுதத்தொடங்கியவன், அதிஒலே எனக்கு கிடைத்த் வரவேற்பின் காரணமாக தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினேன். அவற்றில் சில எழுதி முடித்ததும் " இதை நானா எழுதினேன்? " என்று வியக்க வைத்திருக்கின்றன. வேறு பல " அட இதையா எழுதினேன் ? " என்று அலுக்க வைத்துள்ளன. ஆனால் அனைத்தும் எனக்குக் கொடுத்தது அனுபவங்களே. நான் கதை என்று ஒரு கருவை மனதில் வரித்து வைத்துக் கொண்டு அதற்காக பல ஆராய்ச்சிகள் செய்து விட்டு எழுத ஆரம்பிப்பதில்லை. வாழ்க்கையில் பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் நான் சந்தித்த சம்பவங்களின் அடிப்படையில் எனது கதைகள் உருவெடுக்கின்றன. சம்பவங்களின் சந்திப்புக்கு கற்பனை என்னும் வர்ணம் தீட்டி அதைச் சிறுகதையாய் வடிக்கின்றேன்.

"உறவெனும் விலங்கு" என்னும் தொகுப்பில் "தமிழ்ப்பூங்காவில்"  இடம்பெற்ற கதைகளோடு, அந்தச் சிறுகதைத் தொகுப்புக்காகவே இடம்பெற்ற கதைகளும், " திண்ணை" , "பதிவுகள் போன்றவற்றில் வெளியான ஓரிரு கதைகளும் அடங்கும்.

ஆமாம் ஒரு சிறுகதை ஆரம்ப எழுத்தாளன் என்னும் தகுதிக்கேற்ப அத்ற்குக் கிடைத்த வரவேற்பு எனக்கு திருப்தியளிக்கின்றன. முன்னுரையாக நண்பட் திரு.மாலன் கொடுத்த கணிப்பும், விமர்சனமும் எனது மனதை நிறைத்தது. சிறுகதையுலகில் தனக்கென ஒரு தனொயிடம் கொண்டுள்ள நண்பர் மாலன் அவர்களின் விமர்சனத்தை நான் மிகுந்த அபிமானத்துடன் உள்வாங்கியுள்ளேன். அவர் தட்டிக் கொடுத்து, அளித்த அறிவுரையி வழி தொடர்ந்து நல்ல படைப்புக்களை நல்க வேண்டும் என்னும் ஆதங்கம் மேலோங்குகின்றது.


தமிழோவியம் :-  "உறவெனும் விலங்கு" நூல் அன்பினைத் தேடும், அரவனைப்பை தேடும் ஒரு மனதின் படைப்பு என அந்த நூலை விமர்சனம் செய்தால், அதில் தங்களுக்கு உடன்பாடா?

" அன்பினைத்தேடும், அரவணைப்பைத் தேடும் மனதின் படைப்பு அல்ல, அத்தகைய மனங்களை சந்தித்து அவற்றின் உணர்வில் ஊறி, பல சம்பவ்ங்களைக் கோர்வையாக்கி, கற்பனை கலந்து பின்னிய ஒரு தொகுப்பு " என்பதுவே சரியான விமர்சனமாக இருக்கும் என்பது எனது கருத்து.
 
தமிழோவியம் :- இன்றைய காலக்கட்டத்தில் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் அமைப்புக்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?

நான் அரசியல் கற்றவனோ அன்றி அரசியலில் கரை கண்டவனோ இல்லை. அந்தப்பாதையில் வரும் சங்கடங்களை சந்தித்து, நாளுக்கு நாள் அவற்றோடு போரடும் அமைப்புக்களப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும் நான் அபிப்பிராயம் சொல்வது தர்மம் ஆகாது.

ஆனாலும் சாதரண மனிதன் என்ற வகையில், அரசியல் கட்சிகளினாலும், அவை எடுக்கும் கொள்கைகளினாலும் பாதிக்கப்படக்கூடியவன் என்னும் காரணத்தினால் எனது மனதில் பட்டவைகளை எடுத்துக் கூறுகிறேன்.

அரசியல்வாதி என்றொரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் அமது அரசியல் கட்சிகளை முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றார்கள். என்பது போன்ற பாணியில் நாம் நடப்பது தவறு. மக்களின் தேவை கருதியே அரசியல் கட்சிகளும்,  அமைப்புகளும் ஆரம்பமாகின்றன. எமது தேவைகளின் தேடல்களே அரசியல் கட்சியில் உள்ளவர்களின் கொள்கைகளாக அறிவிக்கப்படுகின்றன.

ஆனால் அவை கடைப்பிடிக்கப்படும் போது அவை எடுக்கும் வடிவங்கள் வேறுபடுகின்றன , வித்தியாசப்படுகின்றன. சாதரண மனித மனங்களின் பிரதிபலிப்புகளினால் பிறந்த அரசியல் சில சமயங்களில் பாதை மாறிவிடுகின்றது.

இன்றைய காலகட்டத்தின் தேவைகள் நாட்டுக்கு நாடு, சமூகத்திற்கு சமூகம் வித்தியாசப்படுகின்றன.  ஆனால் இவை அனைத்துக்குமே இருக்கும் ஒற்றுமை இவை அனைத்துமே எதிர்காலச் சந்ததியினரின் வளத்தை நோக்கியதாக அமைய வேண்டி இருப்பது. நாட்டின் பேதங்கள் தகர்க்கப்பட்டு சமூகத்துக்கு சமூகம், மதத்துக்கு மதம், இனத்துக்கு இனம் புரிந்துணர்வுடன் செயல்படக் கூடிய வழிவகைகள் வகுக்கப்பட வேண்டும்.

அனைத்து நாடுகளுமே உலகளாவிய ரீதியில் தமது பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். கீழை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சமுதாயத்தின் அனைத்து மட்டங்களையும் சென்றடையக்கூடிய திட்டங்களை அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

இது அரசியல்வாதிகளால் மட்டும் தனித்து செயல்படுத்த முடியாத ஒன்று. அனைத்து மக்களும் சமுதாய உணர்வோடு பேதங்களை மறந்து செயல்படுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

இவை எனது தனிப்பட்ட அபிப்பிராயங்களாகும்.

தமிழோவியம் :- கதை, கட்டுரை, கவிதை எழுதுவதற்கு வழுவான சூழ்நிலைகள் தங்களுக்கு தானாகவே  உருவானதா? அல்லது உருவாக்கிக் கொண்டீர்களா?

நான் எனது கவிதைத்தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடது போல, எனது எழுத்தின் கருவறை கவிதை, எண்ணங்களின் சுழி கவிதை, இதயத்தின் துடிப்பு கவிதை. இந்த அடிப்படியில் இருந்தே மற்றவை உருவானவை. நான் சாதாரண வாழ்வில் காணும் அனைத்து நிகழ்ச்சியிலும் ஒரு கவிதையைக் காணுகிறேன். இது அநேகமாக கவிதை எழுதும் பலருக்கும் இருக்கும் பொதுவான தன்மையாக இருக்கலாம். எனது கவிதைகள் சாதாரண மனத்தாக்கத்தின் நிகழ்வில் இருந்து பிறப்பவை.

கதையானினும், கட்டுரையாயினும், கவிதையாயினும் நான் உணர்வுசார்ந்தே எழுதுபவன். இதற்கான சூழ்நிலைகள் தாமாகவே உருவாகும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.. நானாகவே உருவாக்கிக் கொண்ட சந்தர்ப்பங்கள் சிலவே.

தமிழோவியம் :- பொதுவாக பிரபலங்களுடன் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது இருக்கின்ற ஒரு யதார்த்தம், அதுவே பேட்டி என்று வரும் பொழுது பேட்டி காண்பவரும், பேட்டி கொடுப்பவரும் ஒரு இறுக்கத்திற்குள்ளே சிக்க வேண்டிய சூழல் வந்து விடுகிறது. இதனை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். தங்களுக்கு இம்மாதிரி உணர்வு வந்தது உண்டா ?

(தொடரும்..)

Copyright © 2005 Tamiloviam.com - Authors