தமிழோவியம்
பாடல்களால் ஒரு பாலம் : தென்னங்காத்து
- அபுல் கலாம் ஆசாத்

தமிழில்

திரைப்படம்: பிராப்தம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா
திரையில்: சிவாஜி கணேசன், சாவித்திரி

இந்தியில்

திரைப்படம்: மிலன்
பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி
இசை: லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால்
பாடியவர்கள்: முகேஷ், லதா மங்கேஷ்கர்
திரையில்: சுனில் தத், நூத்தன்


கவிஞர்காள் இருவருக்கும் ஒரு வார்த்தை தேவைப்பட்டிருக்கிறது. அதன் சரியான உச்சரிப்பு ஒன்றாகவும், பேச்சு வழக்கில் உச்சரிப்பது வேறொன்றாகவும் இருக்கவேண்டும். வார்த்தையானது அடுத்த வரியுடன் இயைபாகவும் ஒலிக்கவேண்டும். முக்கியமாக அதில் கிராமிய மணம் கமழவேண்டும். கொஞ்சம் சவாலான வார்த்தைதான். இரண்டு கவிஞர்களுமே அற்புதமாக அதனைக் கையாண்டார்கள்.

இந்தியில் ஆனந்த் பக்ஷி எழுதிய வார்த்தை 'ஷோர்', பாமரர்களின் உச்சரிப்பில் 'சோர்'.
தமிழில் கண்ணதாசன் எழுதிய வார்த்தை 'காற்று', பாமரர்களின் உச்சரிப்பில் 'காத்து'.


Sunil Dutt, Noothanநதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் சிற்றூரில் அவள் 'பெரிய இடத்துப் பெண்'. அவன் ஓடக்காரன். நதியின் மறுகரையிலிருக்கும் நகரத்திற்கு மக்களை ஏற்றிச் சென்றும், அழைத்து வந்தும் பிழைப்பு நடத்துபவன். அவள் தினமும் அவன் ஓடத்தில் ஏறித்தான் மறுகரையில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று வருவாள். ஓடத்தைச் செலுத்துகையில் அவன் எப்போதாவது பாடிக்கொண்டே செலுத்துவதுண்டு. அவள் அவன் பாடலில் லயித்ததுண்டு. அவர்கள் இருவரிடையே இருந்தது நட்பு அன்று; காதலும் அன்று. அவனுக்கு அவள் மேல் இருந்தது மரியாதை. வயதில் சிறியவளாக இருந்தாலும் 'சின்னம்மா' என்றே அழைப்பான். தினமும் செடியிலிருந்து சின்னம்மாவுக்கு ஒரு ரோஜா மலரைப் பறித்துத் தராமல் அவளை அவன் ஓடத்தில் ஏற்றியதில்லை. கல்லூரியில் அவளிடம் வாலிபக் குறும்பைக் காட்டியவரை நையப்புடைத்திருக்கிறான். இவையெல்லாம் மரியாதை நிமித்தமாகத்தானேயன்றி காதலால் அல்ல. அவளும் அதேபோலத்தான். இவனை 'கண்ணா' என அழைத்தாலும் அந்த அழைப்பில் காதல் இருக்காது. சேவகனுக்கும் மேலாக இருக்கிறானே என பச்சாதாபப்பட்டிருக்கிறாள். அதற்கு மேல் எதுவும் இல்லை.

இப்படியிருக்கையில் அவளது கல்லூரியில் பாட்டுப்போட்டி நடக்கிறது. அவள் கலந்துகொள்ள வேண்டும். 'கண்ணா எனக்கு ஒரு பாட்டு சொல்லிக்கொடு' என்கிறாள். அவன் தயக்கத்துடன்தான் ஏற்றுக்கொள்கிறான். முதலடியை ஒலிக்கும்போதே அவனது நாட்டுப்புற உச்சரிப்பு அவளுக்குப் பிடிபடவில்லை. ஏதோ தவறு நடப்பதாக நினைத்து அவள் நாட்டுப்புற வழக்கிலிருந்து மாறுபட்டு சரியாக உச்சரிக்கிறாள். அவன் விடவில்லை. அவள் உச்சரிப்பு தவறென்று சுட்டிக்காட்டி, நாட்டுப்புறபாணி உச்சரிப்பே சரியென்று திருத்திச் சொல்கிறான். அவளும் ஏற்றுக்கொள்கிறாள்.

சாவன் கா மஹினா பவன் கரே சோர் (ஷோர்)
ஜியாராரா ஜூமே ஐஸே கைஸே பன்மா நாச்சே மோர்

மாரிக் கால நேரம் சு.ழன்(று) அடிக்கும் காத்து! (காற்று)
புள்ளிமயிலாட்டம் போட தலையாட்டும் தென்னங்கீத்து!

ooOoo

சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து - என்னைத்
தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் - நல்ல
ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து

செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்குபோல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

(சந்தனத்தில்)

பன்னீரு பூச்சரம் பச்சைப்புல்லு மேடையில்
பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சலசல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக

(சந்தனத்தில்)

மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலைகட்டிப் பாக்குது ஆசையோடு
நான் பார்க்கக்கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு

(சந்தனத்தில்)

நானாச்சு வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சு என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொல்வதும் நமக்காக

இந்தியில் 'மிலன்' திரைப்படம் வெளிவந்து சில வருடங்களுக்குப் பின்னரே தமிழில் 'பிராப்தம்' என மொழிமாற்றம் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. வடக்கே சுனில் தத், தெற்கே சிவாஜி கணேசன். வடக்கே நூத்தன், தெற்கே சாவித்திரி. கிராமிய உடையில் ஓடக்கார வேடத்தில் சிவாஜி கணேசன் சந்தனத்தில் நல்ல வாசத்தை எடுக்கும்போது இயற்கையின் மணம் கேட்பவர் நெஞ்சில் பரவும். பன்னீர்ப் பூச்சரம் பச்சைப்புல் மேடையில் பட்டினைப்போல் கிடப்பது நமக்காக - மோனைகள் இப்படித் தொடர்ந்து வருகின்ற வேளைகளில் இசையில்லாவிட்டலும் கவிதை வரிகள் துள்ளும், இங்கே இசையுடன் சேர்ந்து கவிதை வரிகள் அழகியலைப் பாடும்பொழுது கண்முன்னே காட்சிகள் விரியக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

தமிழில் ஒலிக்கையிலும் இந்தியில் ஒலிக்கையிலும் இயற்கையின் மணத்தைப் பரப்பும் இப்பாடலில் இந்தியில் கையாளப்பட்ட சில வார்த்தைகளில் பிராந்திய மணம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். தமிழில் தேவைப்பட்டால் மட்டுமே பாடலை பிராந்திய மணத்தைக் கலந்திருக்கிறார். இந்தியில் குறிப்பிட்ட வட்டாரத்தில் பாடல் நிகழ்வதாக இருந்தால் அந்த வட்டார வழக்குச் சொற்களை பாடல்களில் கலந்து எழுதுவது அவர்கள் வழக்கம். அப்படிச் சில பாடல்களையும் இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம்.

பரபரப்பாகப் பேசப்பட்ட 'சோலி கே பீச்சே க்யா ஹை' (திரைப்படம்: கல்நாயக்) பாடலில் 'உனது பழைய நண்பர்கள்' என்னும் வரி சரியான உச்சரிப்பில் 'ஆஷிக் புரானா தேரே' என்றிருக்கவேண்டும். ஆனால், இலா அருண் அதனை 'ஆஸிக் புரானா தேரே' என 'ஷி'யை 'ஸி'யாக உச்சரித்திருப்பார். ராஜஸ்தானிய நவ்டங்கி (நாட்டிய) நங்கையரின் பாடலில் அப்படிப்பட்ட உச்சரிப்பு இருந்தாலே அது சரியானது. சமீபத்திய 'ஓம்காரா'வில் 'பீடி கொளுத்திக்கொள்' என்னும் வரிகளின் சரியான உச்சரிப்பு 'பீடி ஜலாலே' என்றிருக்கவேண்டும். உத்தரப்பிரதேச கிராமப்புறங்களில் வழங்கும் வழக்காக அது 'பீடி ஜலைலே'யாகிப்போனது. அனைத்தும் தூத்துக்குடியின் 'முத்துக்குளிக்க வாறீயளா!' போலத்தான். இப்படி வட்டார வழக்கில் சில வார்த்தைகள் 'சாவன் கா மஹினா'விலும் உண்டு.

நகர்ப்புற வழக்கிலிருக்கும் இந்தி உருது மட்டுமே அறிந்திருக்கையில் இதுபோன்ற வட்டார வழக்குகளின் சொல்லாட்சியுள்ள பாடல்களின் பொருள் பலநேரங்களில் நேரடியாக விளங்குவதில்லை. பிராந்தியத்தின் கலாசாரம் கொஞ்சமாவது புரிந்திருந்தாலே பாடலின் பொருள் விளங்கும். 'மாமன் மகள்' என்பது மிகச் சாதாரணமாக அனைவருக்கும் புரிகின்ற உறவுதான். ஆனால், இந்த உறவின் பொருள் புரியாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது 'அங்கிள்ஸ் டாட்டர்' என்று மொழிபெயர்த்தால் பொருத்தமாக இருக்குமா.

ஓடக்காரன் தனது போக்கில் பாடுகின்றான்.

அவன்:
ராமா கஜப் டாயே யே புருவைய்யா
சாமி சொழட்டுதய்யா *ஆடிமாசக்காத்து*

அவள்:
நய்யா சம்ப்ஹாலோ கித் கோயே நா கிவய்யா
பாத்து துடுப்புப்போடு தெச மாறும் போக்கு

அவன்:
புருவய்யாகே ஆகே சலே நா கோயி ஸோர்
ஆடிக்காத்துல அம்மி பறக்குமம்மா சேத்து
புள்ளி மயிலாட்டம் போட தலையாட்டும் தென்னங்கீத்து!

'புருவைய்யா'வாக இந்தியில் ஒலிக்கும் கடற்காற்றை பாடுபொருளாகக் கொண்ட பாடலின் தமிழ்ப் பதிப்பில் கடற்காற்று 'தென்னங்காத்து' என்றாகிப்போனதால் பாடலுடன் கிடைத்த ஒட்டுதலை நினைத்து நினைத்து அசைபோடலாம்.

தென்னங்காத்தை நானும் *ஆடிமாசக்காத்தாக்கிப்* பார்த்தேன்.ஓடக்காரனுக்கும் சின்னம்மாவுக்கும் இருந்த உறவு மறுஜென்மன் வரையிலும் தொடர்ந்து அவர்களையும் அறியாமல்,

'சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது' என்று பாடிக்கொண்டே பயணம் செய்யவைத்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors