தமிழோவியம்
கவிதை : இனியும் வேண்டாம்
- சத்தி சக்திதாசன்

கனவாக வாழ்ந்தது போதும்
கதையாக கேட்டது யாதும்
கண்களை திறந்திடு ; இனியும் வேண்டாம்
காற்றோடு போகும் பேச்சு !

அறிவை நீ வளர்த்திடு
அதுவே உனை உயர்த்திடும்
அன்பை நீ மதித்திடு - இனியும் வேண்டாம்
அழகான விளக்கங்கள் !

ஆசையை அளந்திடு புவியில்
ஆபத்தை உணர்ந்திடு நெஞ்சில்
ஆணித்தரமாய் உரைத்திடு - இனியும் வேண்டாம்
ஆணவ சுய விளம்பரம் !

ஆக்கங்கள் தான் உன் சமூகத்தை
ஆக்கி வைக்கும் என்றும், அழிவல்ல
ஆதாரம் உன் மொழி - இனியும் வேண்டாம்
ஆதாயம் தேடும் அரசியல் !

தவறு செய்யா மனிதனில்லை
தப்பு செய்பவன் மனிதனேயில்லை
தன்னை அறிந்திடு - இனியும் வேண்டாம்
தப்புத் தாளங்கள் வாழ்விலே !

ஆற்று வெள்ளம் அடிக்கும் போது
அழிவது மரமே நாணலல்ல
ஆணவம் என்றும் அழகல்ல - இனியும் வேண்டாம்
ஆத்திரம் ; அவசரம் !

இனியும் வேண்டாம் : இனியும் வேண்டாம்
இதயம் தன்னில் வெறுமை அதனால்
இரக்கத்திற்கே வறுமை
இன்பம் கொழிக்கும் வாழ்க்கை
இளையவர் உங்கள் கைகளில்

Copyright © 2005 Tamiloviam.com - Authors