தமிழோவியம்
தராசு : ஒலிம்பிக்கும் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளும்
- மீனா

உலக நாடுகள் அனைத்தும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விளையாட்டுக் கோலாகலம் - ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்னும் சற்று நேரத்தில் துவங்கப்போகிறது. 202 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமுடன் பல்வேறு போட்டிகளில் பங்குபெறப் போகிறார்கள். இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாட்டு வீரர்கள் பதக்க மூட்டைகளோடு தங்கள் நாடு திரும்பப்போவது நிச்சயம்.

இந்தியாவின் சார்பில் 75 வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார்கள். உலக வரைபடத்தில் லென்ஸ் வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத சைசில் இருக்கும் குட்டி குட்டி நாடுகளிலிருந்து வரும் வீரர்கள் கூட நாலு பதக்கங்களுடன் சொந்த ஊர் திரும்புகின்றனர். ஆனால் 100 கோடி ஜனத்தொகை கொண்ட - உலகிலேயே முதலாவது பெரிய ஜனநாயக நாடு என்றெல்லாம் பல பெருமைகள் பேசிக்கொள்ளும் நம் இந்தியா என்னவோ கடந்த சில ஆண்டுகளாகவே வெறுங்கையுடன் தான் ஒலிம்பிக்கிலிருந்து திரும்புகிறது.

' இதோ ஜெயித்துவிடுவார்.. தங்கம் இல்லையென்றாலும் வெங்கலமாவது உறுதி.. ' என்றெல்லாம் ஏகத்திற்கும் எதிர்பார்பை ஏற்படுத்தும் வீரர்கள் கூடத் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டுதான் தாய் நாடு திரும்புகிறார்கள். 1980க்குப் பிறகு நாம் ஒரு தங்கப் பதக்கம் கூட ஜெயிக்கவில்லை..  நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் 1980க்குப் பிறகு நம்மால் அரையிறுதிப் போட்டியைக் கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை. என்ன ஒரு அவமானம்!! எங்கே போயிற்று நமது இந்திய வீரர்களின் திறமைகள்?

' வீரர்களைத் தேர்வு செய்யும் விதத்தில் எங்கேயோ தவறு நடக்கிறது.. பணம் விளையாடுகிறது.. ' போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்தாலும் அரசாங்கமோ, விளையாட்டுத் துறையோ இது குறித்து தீவிர விசாரணை எல்லாம் நடத்தியதைப் போலத் தெரியவில்லை. " இந்த முறை வீரர்களைத் தேர்வு செய்யும் விதத்தில் இந்திய விளையாட்டுத் துறை மிகவும் கண்டிப்புடன் இருந்தது. நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த 75 பேரைத் தான் நாங்கள் ஏதென்ஸ¤க்கு அனுப்பியுள்ளோம். அவர்களில் சிலருக்கு வெளிநாடுகளில் பயிற்சி கூட அளித்துள்ளோம். அவர்கள் பதக்க குவியலோடு இந்தியா திரும்பப்போவது உறுதி!! " என்று இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரும் அதிகாரிகளும் கூறியுள்ளதை நாம் நம்புவோம்.

100 கோடி இந்திய மக்களின் ஆசை.. கனவு.. எதிர்பார்ப்பு எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இழந்த பெருமையை இந்தியா மீண்டும் பெறுமா? நாம் ஒரு தங்கமாவது வெல்வோமா? வீரர்களே.. உங்களுடன் எங்கள் பிராத்தனைகள் எப்போதும் இருக்கும். நீங்களும் எங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம்  கொஞ்சம் எண்ணிப் பார்த்து பொறுப்பாய் விளையாடுங்கள். வெற்றியோடு திரும்புங்கள்.


பின்குறிப்பு :

பெஞ்சு கோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை உறுதி செய்யப்பட்ட காமக்கொடூரன் தனஞ்சய்யின் மரணம் இந்த சனிக்கிழமை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தன்னுடைய கண்கள், சிறுநீரகங்களைத் தானம் செய்ய தனஞ்செய் விரும்புவதாக அவனது குடும்பத்தினர்கள் கூறியுள்ளனர். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல இறக்கும் நேரத்திலாவது இவனுக்கு இப்படிப்பட்ட நல்லபுத்தி வந்ததே!! இப்படிப்பட்டவர்கள் அடுத்த பிறவியிலாவது நல்லவர்களாக வாழ எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் கருணை காட்டவேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors