தமிழோவியம்
கட்டுரை : பழையன கழிதலும் புதியன புகுதலும்
- வந்தியத்தேவன்

நீண்ட நாட்களுக்குப் பின் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த்து. ATP வரிசையில் 2003'ல் முதல் ஆட்டக்காரரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெட்ரர், முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைய, இரண்டாம் நிலை ஆட்டக்காரரான ஆண்டி ரோடிக்கைப் (அமெரிக்கா) புரட்டிக் கொண்டிருந்தார் ரஷ்யரான மேக்ஸ் மைர்னி. முதல் செட் டைப்ரேக்கருக்குப் போய் மைர்னி ஜெயிக்க ஆட்டம் களை கட்டியது. இரண்டாவது செட்டில் அவரவர் சர்வீஸ் கேம் கைப்பற்ற, மீண்டும் டைபிரேக்கர். இம்முறை ரோடிக் பக்கம் அதிர்ஷ்டக்காற்று. கடைசி செட்டில் 6-3 என்று ரோடிக், முதல் சுற்றில் வெற்றி பெற்றாலும், 6'5" ஆஜானுபாகுவான மைர்னியின் ஆட்டமே என்னை அதிகம் கவர்ந்தது. உலக அரங்கில் 58'வது ஆட்டக்காரராம். நம்பமுடியவில்லை. ரோடிக்கிற்கு கரணம் தப்பினால் மரணம் அதுவும் பெட்ரரைப் போலவே...

எனக்குத் தெரிந்த கடந்த 15 வருடங்களில் டென்னிஸில் தான் எத்தனை மாற்றங்கள்? 

மட்டையடி விளையாட்டில் மிகவும் பழமையானதெனக் கருதப்படும் டென்னிஸ், ஐந்தாம் நூற்றாண்டிலில் பிறந்ததிலிருந்து பல்வேறு மாறுபாடுகளைச் சந்தித்ததில் வியப்பொன்றுமில்லை. 1887'ல் முதன்முறையாக விம்பிள்டன் தொடங்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையத்தில் மிகவும் பிரபலமானது.

1976 முதல் 80 வரை தொடர்ந்து 5 முறை விம்பிள்டன் கோப்பையைக் கைப்பற்றிய பிஜான் போர்க் ஆட்டத்தை அதிகம் பார்த்து களிப்படைய வாய்ப்பும், வயதுமில்லை. அவ்வப்போது பதிவு செய்யப்பட்ட ஆட்டங்களின் சில மணித்துளிகள் பார்க்கும் பேறுதான் எனக்குக் கிட்டியது. இடதுகை ஆட்டக்காரரான ஜிம்மி கான்னர்ஸின் நளினம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 1974-1978 வரை 5 வருடங்கள் முதல் நிலை ஆட்டக்காராக இருந்து, 1990'ல் 936 வது இடத்துக்கு தள்ளப்பட்டு, 1991 அமெரிக்க ஓப்பனில் அரையிறுதி ஆட்டம் வரை வந்தாரென்றால் இவருக்கு ஆட்டத்திலிருந்த நாட்டத்தை அறியலாம்.

Mcenroeஅதுவரை அமைதியான டென்னிஸ் ஆட்டத்தில், அதிரடியான பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் ஜான் மெக்கன்ரோ. ஜெயித்த பணத்தில் பாதியாவது இவர் நடுவரை வசை பாடியதால் அபராதமாகக் கட்டியிருப்பார். 1981-84 வரை 4 வருடங்கள் நம்பர் ஒன்னாக வலம் வந்தார் மெக்கன்ரோ.

இம்மூவரின் ஆட்டத்திலுமிருந்து மிகவும் வேறுபட்டு தனது வேகமான சர்வீஸ் மூலம் முதலாம் இடத்திற்கு வந்தவர் ஈவான் லெண்டில். 1985-87 மற்றும் 1989 என்று 4 முறை இவரும் உலகத்தில் முதல் ஆட்டக்காரராக இருந்திருக்கிறார். ஆனாலும் விம்பிள்டன் போட்டிகளில் ஒரு முறை கூட வெல்லாதது ஆச்சரியமான விஷயம். புல் வெறும் மாடுகளின் மேய்ச்சல் களமென்று வெறுப்பை உமிழ்ந்தவர்.

1990-91, இவ்விரு வருடங்களிலும் ஸ்டீபன் எட்பர்க் No:1 இடத்திலிருந்தார். எப்பொழுதும் அழுது வடியும் முகம். சர்வ் & வாலியில் கில்லாடி. இவரும் மாட்ஸ் விலாண்டரும் (சிறந்த பேஸ் லைன் ஆட்டக்காரர்) மோதினால் மாரத்தான் ஆட்டத்திற்கு மினிமம் கியாரண்டி உண்டு. ஈவான் லெண்டில் 1988'ல் முதலாம் ஆட்டக்காரர் பட்டத்தைத் தொலைத்தது விலாண்டரிடம்தான்.

1985'ல் 17 வயது பாலகனாய் விம்பிள்டனை வென்ற போது உலகமே போரிஸ் பெக்கரைத் திரும்பிப் பார்த்தது. 1986'ல் விம்பிள்டன் கோப்பையை (ஈவான் லெண்டிலை தோற்கடித்து) இரண்டாம் முறை அடைந்தபோது ஆஹா.... இன்னொரு போர்க் சகாப்தம் தொடங்குவதாய்ப் பட்டது. வில்லைப் போல் வளைந்து "போளேர்" சர்வீஸ், கால்பந்து கோல் காப்பாளரைப் போல் "டைவ்" அடிக்கும் லாவாகம், வித்தியாசமான "பேக் ஹாண்ட்" இன்னும் பல சிறப்பம்சங்கள் இவர் ஆட்டத்தில்.

1992'ன் நாயகன் ஜிம் கூரியர். ஈவான் லெண்டிலைப் போல் இயந்திரத்தனமான ஆட்டம். முகத்தில் உணர்ச்சி...ம்ஹ¥ம் மருந்துக்கும் கிடையாது.

அடுத்த 5 வருடங்கள் (1993-98) கொடி கட்டிப் பறந்தவர் "பிஸ்டல்" பீட் சாம்ப்ராஸ். 14 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் (7 விம்பிள்டன், 5 அமெரிக்க ஓபன், 2 ஆஸ்திரேலியா ஓபன்). டென்னிஸ் உலகின் நரசிம்மராவெனச் சொல்லலாம். ஆன்ட்ரி அகாஸியைக் கண்டால் பைத்தியமடையும் மக்கள், சாம்ப்ராஸிடம் அத்தகைய கவர்ச்சி காணவில்லை. அவருக்கு அதைப் பற்றிக் கவலையும் அதிகம் இல்லை. உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டியவாறே இவர் சேர்த்த பரிசுப்பணம்தான் ATP'ல் சரித்திரம் ($43,280,489).

1999'ல் முதலிடம் அகாசிக்குக் கிட்டியது. நீளமான முடி, பின்னர் வழித்த மொட்டைத் தலை, ஹாலிவுட் நடிகை/மாடல் ப்ரூக் ஷீல்ட்ஸ¤டன் திருமணம், பின்னர் முறிவு, ஸ்டெபி கிராபுடன் திருமணமென்று "காண்ட்ரோவெர்சியல் கதாநாயகன்" இவர்.

கஸ்டாவோ கியூர்டன் (2000), லெய்டன் ஹீவிட் (2001-2002) ATP முதலாம் நாயர்களை அதிகம் காணும் பாக்கியம் கிட்டவில்லை.

இன்றைய தேதியில் அனைவரும் சராசரியாக மணிக்கு 130 மைல் வேகத்தில் முதல் சர்வீஸ் போடுகிறார்கள். முன்கை ஆட்டம் போலவே பின்கை ஆட்டமும்....ஆற்றலில் அவ்வளவாய் வேறுபாடில்லை. தைரியமாய் சமயத்தில் மணிக்கு 120 மைல் வேகத்தில் இரண்டாம் சர்வீஸ¤ம் செய்கிறார்கள்.

ஆமாம்...இவ்வளவு ஆற்றல் எங்கிருந்து கிட்டுகிறது? ரோடிக் பயன்படுத்தும் பேபோலேட் மட்டையையெடுத்துக் கொள்வோம். இதில் ஊபர் (Woofer) டெக்னாலஜி மூலம் ஆற்றல், அதிகமான ஸ்வீட் ஸ்பாட் (அதாவது மட்டையின் நெடிதாக்கப்பட்ட நடுமையம்), 25% அதிகமாக பந்தைக் கட்டுப்படுத்தும் திறன் (Ball Control), அதிர்ச்சி மற்றும் அதிர்வு மட்டுப்படுத்துதல் (Absorbs shock and vibration) நடக்கிறது. என்ன தலை சுற்றுகிறதா?

புல் தரையில் (Grass Court)மட்டுமில்லை, களிமண் (Clay Court) மற்றும் கட்டாந்தரையிலும் (Hard Court) சர்வ் & வாலிதான் பிரதானமாகிக் கொண்டிருக்கிறது. கழுத்து சுளுக்கிக் கொள்ளுமளவிற்கு திரும்பிப் பார்க்க வைத்த பேஸ்லைன் ராலிஸ் முழுதுமாக அழிந்துவிடுமோவென்னும் அச்சமெழுகிறது.

ஒரு சமயம் ரசனையில் எனக்கும் வயதாகிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இப்போது எங்கும் எதிலும் வேகம்தான் பிரதானம். டென்னிஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?

கடைசியாக மூன்று கேள்விகளுக்கு மட்டும் இன்னும் விடை தேடிக்கொண்டிருக்கிறேன்:

1. டென்னிஸில் ஸ்கோர் ஏன் 15, 30, 40 ... என்று கச்சா முச்சாவென உள்ளது?
2. ஆண்களைப் போலவே பெண்களும் ஏன் பவர் டென்னிஸிற்கு மாறிவிட்டார்கள்?
3. நம் லியாண்டர் பேஸ் மற்றும் மகேஷ் பூபதி இரட்டையர் மீது யார் கண் பட்டது?

விடையறிந்தவர்கள் விபரம் தெரியப்படுத்துவார்களா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors