தமிழோவியம்
புதிய தொடர் : சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
- ஜெயந்தி சங்கர்

தமிழோவியம் வாசகர்களுக்கு வணக்கம் !

'சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்' தொடரின் மூலம் தங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நண்பர் கணேஷ் சந்திரா, சில மாதங்களாகவே பரிவோடு என்னை எழுதத்தூண்டி வந்திருக்கிறார். நேரமின்மை மற்றும் கணினியின் வேலை நிறுத்தம் என்று ஏதோ ஒரு காரணத்தால் எழுதமுடியாமல் இருந்து வந்தது. இப்பொழுது எல்லாம் சரியாகி, என் சோம்பலுக்கும் சின்னதாய் லீவு விட்டு எழுதத்தயாராகிவிட்டேன்.

சிங்கப்பூரில் செய்தித்தாள்கள் இந்தியாவைப்போலப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை கொண்டிருக்காது. திங்களன்று, கல்விக்கு வெள்ளியன்று அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற சமாசாரங்களுக்கு என்று இங்கு ஆங்கிலச்செய்தித்தாளில்  ஒவ்வொரு நாளுக்கும் ஒரு துறையை ஒதுக்கிச் சில பக்கங்கள் அவை தொடர்பான உள்நாட்டு/வெளிநாட்டுச் செய்திகளைத் தருகிறார்கள். ஒரே தமிழ் நாளிதழான
தமிழ் முரசில் ஞாயிறன்று ஒரு சிறுகதையும் ஒரு பக்கத்திற்குக் கவிதைகளும் வெளியிடுவார்கள்.

சில நடப்பு விவகாரச்செய்திகளைப்படிக்கும் போது நடைமுறை வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திக் கொள்வதுண்டு. சிறு தீவு நாடான சிங்கப்பூரில் இந்தியா போன்ற மற்ற நாடுகளைப்போல அதிக சுவாரஸ்யங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. காரணம், பொதுவாய் இங்கு ஓர் இயந்திரத்தன்மை எதிலும் நிலவுவதே. என்றாலும் கூட சில செய்திகள் நாளிதழில் படிக்கும்போது யோசிக்கச்செய்யும். சில
நடப்புவிவகாரங்கள், காட்டாக, முதுமையடையும் மக்கட்தொகை எப்படி அரசாங்கத்துக்குப் பெரும் கவலையாக இருந்துவருகிறது என்பது தொடர்பான செய்திகள் வியக்கவைக்கும்.

அப்பிரச்சனைகளின் காரணிகளாய் சாமான்ய மனிதர்கள் கூறும் செய்திகள் நம்மைச் சிரிக்கக்கூட வைக்கும். இதுதவிர சில வாழ்வியல் தொடர்பான செய்திகள் விசித்திரமாயும் இருக்கின்றன. சிங்கப்பூரின் சில வித்தியாசமான செய்திகளையும் சில முரண்களையும் எதார்த்தங்களையும் கூட வரும் வாரங்களில் எழுதலாமென்றிருக்கிறேன்.

நான் வசிப்பது சிங்கப்பூர், ஆகையால் என் எழுத்தில் சிங்கப்பூர் நெடி சற்று தூக்கலாக இருக்கலாம். ஏற்கனவே தமிழோவியத்தில் உங்களுக்கு பரிச்சயமான திருமதி.ரமா சங்கரன் அவர்களுடைய சிங்கப்பூர், மலேஷிய கட்டுரைகளின் சாயல் வராமல் பார்த்துக்கொள்கிறேன். முரண்களையும் விநோதங்களையும் எழுதவே நினைப்பதால் என்னுடைய கோணம் சற்றே மாறுபட்டிருக்கும். மீறி ரமாவின் சாயல் வந்துவிட்டால் கண்டிக்க தவறாதீர்கள்.

அன்புடன்,
ஜெயந்தி சங்கர்

அடுத்த வாரம் 'சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்' தொடரில் சந்திப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors